பு.கஜிந்தன்
பசுமை அமைதி விருதுகள் விழா
நாளை வீரசிங்கம் மண்டபத்தில்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகளை வழங்கும் பரிசளிப்பு விழா நாளை 17ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கடந்த ஆண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொதுஅறிவுப் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்கள் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகளும், 2023ஆம் ஆண்டின் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளர் தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும், இவ்விழாவில் 2023ஆம் ஆண்டில் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாணாக்க உழவர் மதிப்பளிப்பும், தாவரங்களை அடையாளம் காணும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாவராவதானி மதிப்பளிப்பும் இடம்பெறவுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் தி. ஜோன் குயின்ரஸ் அவர்களும், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எம். எஸ். ஏ. கலீஸ் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
இலங்கையில் சுற்றுச்சூழல் சார்ந்து வழங்கப்பட்டு வரும் விருதுகளில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் முன்னிலை விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.