நடராசாலோகதயாளன்.
இலங்கையில் பிடிபட்ட படகின் வழக்கை எதிர்கொள்ள விமானம் மூலம் இலங்கை வந்த தமிழக மீனவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர் நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இந்திய மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மன்னார் கடற்பரப்பிற்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த சமயம், அதிலிருந்த நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது படகிற்கான விசாரணைக்கு புதன்கிழமை (20) திகதியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு திகதியிடப.பட்ட இரு படகுகளின் வழக்கு விசாரணை இடம்பெற்ற சமயம் படகின் உரிமையாளர்கள் சட்டத்தரணிகள் மூலம் மன்னார் நீதவான் முன்னர் தோன்றினர். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதோ
இதற்கமைய தமிழகம், இராமநாதபுரம் பாம்பனைச் சேர்ந்த படகு உரிமையாளர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் பிடிபடும் போது, அவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், படகுகளை பறிமுதல் செய்வதே வழக்கமாக இருந்துள்ளது. எனினும் படகின் உரிமையாளர் உரிய முறையில் அதை மீட்டுச்செல்ல வந்த நிலையில், இப்போது நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டார்.
தமது மீனவர் ஒருவர் படகை மீட்கச் சென்ற போது இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகால்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக அந்த மீனவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள தமிழக மீனவர்கள், இது தமிழக மற்றும் இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று கூறியுள்ளனர்.