குரு அரவிந்தன்.
கனடாவில் உள்ள நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி 2201, பிஞ்ச் அவென்யூவில் உள்ள யூலியஸ் இவன்ட் சென்ரரில் மாலை 6 மணியளவில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, கனடா தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரிக்கீதம் பாடப்பெற்று, மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.
இதில் சங்கத்தின் காப்பாளர்களான எழுத்தாளர் குரு அரவிந்தன், பி. விக்னேஸ்வரன், கே.எஸ். குணசிங்கம், மற்றும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கணக்காளர் மகேந்திரலிங்கம், திருமதி மகேந்திரலிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்தனர். தொடர்ந்து சானுஸா சஞ்சயனின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.
அடுத்து சங்கத் தலைவர் மார்க்கண்டு நிர்மலனின் உரை இடம் பெற்றது. ‘நடேஸ்வராக் கல்லூரியின் வளர்ச்சிக்காக முடிந்தளவு சங்கத்தால் உதவிகளைச் செய்து கொண்டிருப்பதாகவும், தற்போது அருகில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டதால் தையிட்டியில் இருக்கும் பிள்ளைகள் கல்லூரி வீதி வழியாகக் கல்லூரிக்கு வருவதற்கு வசதிகள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் புதிதாக வரும் பிள்ளைகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள அங்கத்தவர்கள் உதவி செய்ய முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார்.’
பாடசாலையின் தற்போதய அபிவிருத்தி நிலைபற்றிப் பழைய மாணவர் மகாலிங்கம் குமாரகுலதேவன் ஒளிப்பட விவரங்கள் மூலம் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து வைஸ்னவி நந்தேஸ்வரன்,மாதங்கி சிவகுமார் ஆகியோரின் நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து பவித்திரன் ஈவராநந்தம், கிருஸ்ணபிள்ளை நீலவண்ணன், சின்னராசா தாசன் ஆகியோரது பாடல்கள் இடம் பெற்றன. தொடர்ந்து விதுஸா கௌரிபால், சாபினா கௌரிபால், மீனுசி கௌரிபால், காஈட்சிப் கௌரிபால் ஆகியோரது குழு நடனம் இடம் பெற்றது. இறுதி நிகழ்வாக கார்ஸா ஐனார்தனனின் நடனம் இடம் பெற்றது.
அடுத்து நடேஸ்வராக்கல்லூரியின் புதிய அதிபர் திரு. பாலகுமார் அவர்களின் ஒளிப்திவு செய்யப்பட்ட உரை காட்சிப்படுத்தப் பட்டது.
இரவு விருந்தைத் தொடர்ந்து கௌரிபால் கோபால், ஜெய்பாலன் கோபால் ஆகியோரது ‘கர்னன்’ பற்றிய நாட்டிய நாடகம் இடம் பெற்றது. மிகச் சிறப்பாக இருவரும் மேடையேற்றிப் பலரின் பாராட்டையும் பெற்றிருந்தனர். நிகழ்ச்சிகளைக் காப்பாளர் முரளிதரன் கொண்டு நடத்தினார். சின்னராஜா தாசனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.