“இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் சக்திகள் அதனை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது” இவ்வாறு கூறி இருப்பவர் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம் பகே. கடந்த வாரம் கொழும்பில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் அவர் மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளார்.
ஆனால் இலங்கைத் தீவு ஏற்கனவே வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டு விட்டது. இவ்வாறு இலங்கை தீவு பேரரசுகளின் விளையாட்டுத் திடலாக மாறுவதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு. முதலாவது இலங்கை தீவை ஆட்சி செய்த அரசாங்கங்களின் வெளியுறவு கொள்கைகள். இரண்டாவதுஇனப்பிரச்சினை.
இதில் முதலாவதாக வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையிலும் இலங்கைதீவை மாறி மாறி ஆண்ட இருபெருங் கட்சிகளும் ஒன்றில் மேற்கை நோக்கிச் சாய்ந்தன அல்லது ஆசியாவை நோக்கி அதாவது மேற்கிலிருந்து ஒப்பீட்டளவில் விலகி கூட்டுக்களை வைத்துக் கொண்டன.சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் இலங்கை அரசாங்கம் அணிசேரா கொள்கையை கடைபிடிக்கப் போவதாக கூறியது.
எனினும் நடைமுறையில் அது ஆசிய மைய வெளியுறவுக் கொள்கை ஆகவே காணப்பட்டது. அக்காலகட்டத்தில் ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு இந்தியாவும் சீனாவும் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு உதவி புரிந்தன.
அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன அமெரிக்காவின் விசுவாசியாக காணப்பட்டார். அவர் சிறிமாவோவின் உள்நாட்டு பொருளாதார கொள்கைக்கு எதிராக சிந்தித்தார். இலங்கை தீவை உலகளாவிய திறந்த சந்தை பொருளாதாரக் கட்டமைப்புக்கு திறந்து விட்டார். அதன் விளைவாக நாடு மேற்கு நோக்கி வேகமாக நகர லாயிற்று.
ஆனால் ஜெயவர்த்தன தனது மேற்கு நோக்கிய வெளியுறவுக் கொள்கையை நினைத்தபடி முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமையை இனப்பிரச்சினை உருவாக்கியது. அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ஒரு ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர மற்ற எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று இறுமாப்போடு கூறிய ஜெயவர்த்தன நாட்டை முழுமையாக மேற்கை நோக்கிச் செலுத்த முடியவில்லை. அவரை வழிக்குக் கொண்டு வர சோவியத் சார்பு இந்தியா இனப்பிரச்சினையை ஒரு கருவியாக கையாண்டது. தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியை ஆயுதங்களை மொத்தத்தில் பின் தளத்தை வழங்கி தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்தது. ஊக்குவித்தது என்பதனை விடவும் சடுதியாக வீங்க செய்தது என்பதே சரி. இவ்வாறு வீங்கிய ஆயுதப்போராட்டத்தை எதிர்கொள்வதற்கு ஜெயவர்த்தனா மேலும் மேலும் மேற்கை நோக்கிப் போனார். ஒரு கட்டத்தில் இந்தியா நேரடியாகவே போரில் தலையிட்டது. அதன் விளைவாக உருவாகியதே இந்திய இலங்கை உடன்படிக்கை.
இந்தியத் தலையீட்டின் விளைவாக இனப்பிரச்சினை கையாள கடினமான ஒரு வளர்ச்சியை அடைந்தது. அதன் பக்க விளைவுகளில் ஒன்றாக விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவோடு முரண்பட்டது. அதனால் அந்த இயக்கம் மேற்கை நோக்கித் திரும்பியது. அதேசமயம் இந்தியா கொழும்பை நோக்கி நெருங்கியது. ஜெயவர்தனாவிற்குப்பின் ஆட்சிக்கு வந்த இலங்கைத் தலைவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தமது வெளியுறவுக் கொள்கைகளை சுதாகரித்துக் கொள்ள முற்பட்டாலும் கூட இனப்பிரச்சினை அவர்களால் கையாள முடியாத ஒரு வளர்ச்சியை அடைந்து விட்டது. எனவே இனப் பிரச்சினையை மையமாக கொண்டே வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்க வேண்டிய ஒரு வளர்ச்சி உருவாகிவிட்டது.
இந்தியத் தலையீட்டின் விளைவாக பிராந்திய மயப்பட்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாட்டை அடுத்து மேற்கை நோக்கி விரிவடைந்தது. இவ்வாறு ஆயுதப்போராட்டம் மேற்கு மயப்பட்டதன் விளைவாக ஒருகட்டத்தில் மேற்கின் அனுசரணையோடு சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் காலகட்டத்தில் நோர்வேயின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதன் விளைவாக ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் தோல்வியுற்றார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச ஆசிய மைய வெளியுறவுக் கொள்கையை பின்பற்றப் போவதாக கூறிக்கொண்டார். அதன்படி இந்தியாவையும் சீனாவையும் ஏனைய ஆசிய நாடுகளையும் கையாள்வதன் மூலம் இனப்பிரச்சினையை வெற்றிகரமாக கையாள முடியும் என்றும் அவர் நம்பினார்.
நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் முறியடிக் டிக்கப்பட்ட பொழுது மேற்கு நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிராக திரும்பின. இதன் விளைவாக மகிந்த ராஜபக்ச ஆசிய நண்பர்களின் நேரடி உதவியோடும் மேற்குலக நண்பர்களின் மறைமுக உதவிகளோடும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தார். எனினும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதால் இலங்கைத் தீவின் வெளியுறவுக் கொள்கையில் இனப் பிரச்சினையின் தாக்கம் குறையவில்லை.ஏனெனில் யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு ராஜபக்சக்கள் வம்ச ஆட்சியை ஸ்தாபிக்க முற்பட்டார்கள். அதாவது ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறினார்கள். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் இனப்பிரச்சினையை தீர்க்கத் தவறினார்கள். எனவே ஆயுத மோதல்கள் முடிந்த பின்னரும் இலங்கை தீவின் வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்தும் ஒரு நிர்ணயகரமான விவகாரமாக இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் சீனா உலகப் பேரரசாக படிப்படியாக மேலெழுந்து விட்டது. அதன் விளைவாக இலங்கைத் தீவு சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறத் தொடங்கியது. ராஜபக்சக்களின் யுத்த வெற்றி வாதம் அவர்களை அதிகமதிகம் சீனாவை நோக்கியே தள்ளியது. யுத்த வெற்றி வாதத்தின் தேவைகளும் சீன விரிவாக்கத்தின் தேவைகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போயின. இதன் விளைவாக முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு இலங்கைத் தீவு சீன மயப்படலாயிற்று.
இவ்வாறு இலங்கை சீன பயப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து 2015ஆம் ஆண்டு ராஜபக்சக்களைக் கவிழ்த்தன.
இவ்வாறு மஹிந்த தோற்கடிக்கப்பட்ட போதிலும் கூட அவர் சீனாவிடம் பெற்ற கடன்களின் விளைவாக மைத்திரியின் காலத்தில் அம்பாந்தோட்டைத துறைமுகத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு கொடுக்க வேண்டி வந்தது. அதாவது சீனாவின் கடன் பொறிக்குள் இச் சிறிய தீவு அகப்பட்டு விட்டது என்று பொருள். மேற்கின் விசுவாசியான ரணில் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த கடன் யதார்த்தத்தை மீறி எதையும் செய்ய முடியவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை அவருடைய பங்காளி ஆகிய மைத்திரிபால சிறிசேனவே காட்டிக் கொடுத்தார். அவரே யுத்த வெற்றி வாதத்தின் இரண்டாவது எழுச்சிக்குரிய வழிகளையும் திறந்து விட்டார். இப்பொழுது யுத்த வெற்றி வாதம் இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதன் வெளியுறவுச் செயலரும் முன்னாள் படைப் பிரதானியுமான கொலம்பகே இலங்கைத் தீவு பேரரசுகளின் விளையாட்டுத் திடலாக மாற அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
தன்னைச் சந்தித்த சீன உயர் மட்டக் குழுவிடம் கோடாபய பின்வருமாறு கூறியுள்ளார்…” அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஒரு சீனக் கடன் பொறி அல்ல என்று நாங்கள் நிரூபிப்பதற்கு சீனா உதவ வேண்டும்”. ஆனால் இலங்கை தீவு ஏற்கனவே சீனமயப்பட்டு விட்டது. இலங்கை தீவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சிந்திக்கும் எவரும் இப்புதிய சீன யதார்த்தத்தையும் உள்வாங்கித்தான் முடிவெடுக்கலாம். இதில் தமிழர்களும் விதிவிலக்கில்லை. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இனி இலங்கை தீவை பேரரசுகளின் மோதல் களமாக மாறாமல் தடுப்பது எப்படி? முன்பு ராஜபக்சக்களோடு நெருங்கி உறவாடியவரும் இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியாக இருந்தவரும் அரசியல் விமர்சகரும் ஆகிய தயான் ஜெயதிலக இந்த வாரத் தொடக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார். “ராஜபக்சவின் அரசாங்கம் வெளியுறவு கொள்கையில் நடுநிலைமை தவறிவிட்டது”
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் எதிர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைப்போலவே இந்திய பிரதமருடன் மகிந்த ராஜபக்சவின் மெய்நிகர் உச்சி மாநாடு முடிந்த சில கிழமைகளுக்குள் சீன உயர்மட்ட தூதுக் குழு இலங்கைக்கு வந்திருக்கிறது. இக்குழு வந்த அதே காலப்பகுதியில் அமெரிக்க தூதரகத்தின் படைத்துறை அதிகாரி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு விஜயம் செய்திருக்கிறார். அதோடு அமெரிக்க வெளியுறவுச் செயலர் விரைவில் கொழும்பு வர இருக்கிறார். அமெரிக்கா மில்லேனியம் சவால் உடன்படிக்கை மூலம் கொடுக்க இருந்த நிதிக்கு சமமான நிதியை ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது. அதற்கு பின்னரும் அன்மையில் புதிய நிதி உதவிகளை இந்தியா
வழங்கியிருக்கும் பின்னணியில் சீனா இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி நிதி உதவியை வழங்க போவதாக அறிவித்திருக்கிறது.
இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலங்கை தீவு ஏற்கனவே பேரரசுகளின் விளையாட்டுத் திடலாக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.எனவே இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலர் கொலம்பகே கூறுவது போல இலங்கைத்தீவு அணிசேரா வெளியுறவுக் கொள்கை ஒன்றைக் கடைப்பிடிக்கவே முடியாது. ஒருபுறம் இலங்கைத்தீவு சீன மயப்பட்டுவிட்டது. இன்னொருபுறம் சீன விரிவாக்கத்திற்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தோ பசிபிக் மூலோபாயத் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. இந்த இந்தோ பசிபிக் மூலோபாய திட்டத்தின் அடிப்படையில் சிந்தித்தால் இலங்கைத்தீவு வல்லரசுகளின் குத்துச் சண்டைக் களமாக மாறக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் உண்டு. கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கைத் தீவின் வெளியுறவுக்கொள்கை எனப்படுவது இனப்பிரச்சினையோடு தவிர்க்கப்படவியலாதபடி பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றில் வெளியுறவுக் கொள்கை இனப்பிரச்சினை மீது தாக்கத்தை செலுத்தும். அல்லது இனப்பிரச்சினை வெளியுறவு கொள்கையின் மீது தாக்கத்தைச் செலுத்தும். இந்த இருமுனை தாக்கங்களில் இருந்து விடுபட்டு வல்லரசுகளை எதிர் கொள்வது என்று சொன்னால் ஒரே ஒரு வழிதான் உண்டு. ஒன்றுபட்ட இலங்கையாக வெளிஉலகைக் கையாள்வதுதான். அது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை வழங்கி இலங்கை தீவை ஒரு ஐக்கிய நாடாக கட்டியெழுப்புவதே. ஆனால் அது ஒரு அம்புலிமாமா கதையாக எப்பொழுதோ மாறிவிட்டது.