“விருதுநகர் தொகுதிக்கு நிறைய செய்யாமல் விட்டு விட்டார்கள், அதை சிறப்பாக செய்து முடிப்பேன். எனக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல” என விருதுநகர் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா பேட்டியளித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனையடுத்து திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அமமுக., ஓபிஎஸ் அணி, தமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ராதிகா சரத்குமார் தெரிவித்ததாவது.. “எல்லோருக்கும் வணக்கம். இந்த விருதுநகர் தொகுதியில் நான் முதல் முறையாக போட்டியிடுகிறேன்.
எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கட்சி அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். இந்த தொகுதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு இங்கு வந்திருக்கிறேன். போகப் போக இதனையெல்லாம் சரிசெய்ய மக்கள் என்னை தேர்ந்தெடுத்து ஒரு பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் அனுப்பினால் கண்டிப்பாக சரிசெய்வேன்.
இங்கு உழைக்க மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறோம். எல்லோருடைய துணையுடன் சிறப்பாக செயல்படுவோம். உற்சாக வரவேற்பு அளித்ததற்கு நன்றி. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆசியுடன் அவர் எப்படி வேலை செய்கிறாரோ, அதைவிட பல மடங்கு நாங்கள் வேலை செய்ய வேண்டும். மறக்காமல் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். நிச்சயமாக போட்டி இருக்கும். அது என்ன போட்டி என்பதை போகப் போக பாருங்கள். விருதுநகர் தொகுதி எனக்கு ஒன்றும் புதிது அல்ல. எனது கணவர் மணி மண்டபம் கட்ட தொடங்கினார். அதை முடிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தோம். அதை நிச்சயம் முடிப்போம். எங்கள் பெருந்தலைவர் வழியில் தான் நாங்கள் இருக்கிறோம். அவர் மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. விருதுநகர் தொகுதியில் செய்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. விருதுநகர் தொகுதியில் நிறைய செய்யாமல் விட்டு விட்டார்கள். அதையெல்லாம் சிறப்பாக செய்து முடிப்போம். தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் வெளியாகவில்லை. வெளியானவுடன் பிரச்சாரத்தை தொடங்குவோம்” என்றார்.