( கனடா உதயனின் ஒரு புலனாய்வு கட்டுரை)
நடராசா லோகதயாளன்.
வடக்கு மாகண சுகாதாரத் திணைக்கள அலுவலரின் வினைத்திறன் இன்மை மற்றும் அவதானக் குறைவு காரணமாக தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை உரிய கால எல்லைகளை பின்பற்றாமை காரணமாக 10 வாகன விபத்துகளிற்கு பெறப்பட்ட காப்புறுதிப் பணத்திற்கு மேலதிகமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பணம் அரசிற்கு இழப்பீடு ஏறபட்டுள்ளதாகவும் மத்திய கணக்காய்வு நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள நிர்வாகங்களில் தற்போது 1,135 வாகனங்கள் காணப்படுகின்றபோதும் அவற்றின் பயன்பாட்டைக்கூட நிர்வகிக்கத் தெரியாத அதிகாரிகளாகவே எமது வடக்கு அதிகாரிகள் உள்ளனரா என்ற பெரும் கேள்வி எழுகின்றது.
வடக்கு மாகாண சபையின் கீழ் 5 அமைச்சுக்கள், 18 திணைக்களங்கள், 4 பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகங்கள், 2 ஆணைக் குழுக்கள், 2 அதிகார சபைகள் மற்றும் 3 நிறுவனங்கள் என 34 நிறுவனங்கள் உண்டு. இவற்றின் பாவனைக்கும், மக்கள் சேவைக்காகவுமே இந்த வாகனங்கள் உள்ளன.
இதிலே மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் மட்டும் 383 வாகனங்களும், மாகாண கல்வித் திணைக்களத்தில் 170 வாகனங்களும், மாகாண விவசாய திணைக்களத்தில் 157 வாகனங்களும், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தில் 105 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 100 வாகனங்களுமாக 4 திணைக்களங்களில் மட்டும் 915 வாகனங்கள் காணப்படுகின்றன. எஞ்சிய 220 வாகனங்களே 30 திணைக்களங்களின் செயல்பாடுகளிற்காக மாகாணம் முழுவதும் காணப்படுகின்றது.
இவை தொடர்பில் 2023ஆம் ஆண்டு மத்திய கணக்காய்வு நிறுவனம் விசேட ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையினை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரிப் பெற்று அதன் அடிப்படையில் இந்தக் கட்டுரை வரையப்படுகின்றது.
வடக்கு மாகாண வாகனங்களில் இருந்து 03 வாகனங்கள் வடக்கு மாகாண சபைக்கு வெளியே 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளபோதும் அவற்றினை இன்றுவரை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதில் இரு வாகனங்கள் ஜனாதிபதி செயகத்திற்கும் ஒரு வாகனம் பொலிஸ் திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபையில் பயன்படுத்தி ஏல விற்பனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 53 வாகனங்களில் 32 வாகனங்கள் 42,891 கிலோ மீற்றரில் இருந்து வெறுமனே 114 கிலோ மீற்றர் ஓடிய வாகனங்களும் காணப்படுகின்றன. இவற்றிலே 13 வாகனங்கள் 10 ஆயரம் கிலோ மீற்றருக்கும் குறைவாகவும், 8 வாகனங்கள் 5 ஆயிரம் கிலோ மீற்றருக்கும் குறைவாகவுமே பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
பராமரிப்புக்கள் ஒழுங்கமைப்புக்கள் இவ்வாறெனில் விபத்திற்குள்ளாகும் வாகனங்களிற்கான அறிக்கையிடல் காப்புறுதியை பெற்றுக்கொள்வதில் வடக்கு மாகாண நிர்வாகங்கள் அசமந்தமாக காணப்படுவதோடு அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அதில் வேண்டுமென்றே அசமந்தமாக இருப்பதும் தெளிவாக கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் 13 வாகனங்கள் விபத்திற்குள்ளாகி 28 லட்சத்து 61 ஆயிரம் ரூபா செலவு மதிப்பீடு செய்யப்பட்டும் ஆரம்ப விசாரணைகள் 8 மாதம் முதல் 7 ஆண்டுகள் காலதாமதமாகியும் ஆரம்ப விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இதேபோன்று இதே திணைக்களத்தில் மேலும் 15 வாகனங்கள் விபத்திற்குள்ளாக 4 மாதம் முதல் 12 மாதங்கள் வரையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் ஓர் சுகாதார வைத்திய அதிகாரி தனது சொந்த தேவைக்காக அனுமதியின்றி எடுத்துச் சென்ற வாகனம் வேகமாக பயணித்த சமயம் விபத்திற்குள்ளாகி சேதமடைந்தபோது 90 லட்சம் ரூபா பெறுமதியான வாகனத்திற்கு 80 லட்சம் ரூபா செலவு மதிப்பீடு செய்யப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோதும் அந்த தொகை அறவீடு செய்யப்படவில்லை எனவும் வடக்கு மாகண சுகாதாரத் திணைக்கள அலுவலரின் வினைத்திறன் இன்மை மற்றும் அவதானக் குறைவு காரணமாக தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை உரிய கால எல்லைகளை பின்பற்றாமை காரணமாக 10 வாகன விபத்துகளிற்கு பெறப்பட்ட காப்புறுதிப் பணத்திற்கு மேலதிகமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பணம் அரசிற்கு இழப்பீடு ஏறபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் வடக்கு மாகாண சபையின் 9 நிறுவனங்களிற்குச் சொந்தமான 284 வாகனங்களில் அரச இலட்சணையோ அல்லது நிறுவனத்தின் பெயரோ இன்றிய பாவனை காணப்படுவதாகவும் இதில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான 100 வாகனங்களும், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் 77 வாகனங்களும், மாகாண விவசாய திணைக்களத்தின் 52 வாகனங்களும் உள் அடங்குவதாவ குறிப்பிடப்படுவதோடு மாகாண சபையின் 54 வாகனங்களிற்கு நீண்ட காலமாக வருமானப்பத்திரமும் பெறப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட 20 நிறுவனங்களின் வாகனங்கள் 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் வரையான 10 ஆண்டுகளில் 29 கோடியே 20 லட்சத்து 7 ஆயிரத்து 38 ரூபா செலவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கணக்காய்வு அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டு உரிய திணைக்களங்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதோடு இதில் முரணகையான ஏதும் குறிப்பிட்டிருந்தால் 14 தினங்களிற்குள் அறிக்கையிடுமாறு கோரியபோதும் எந்த திணைக்களமும் அவ்வாறு மாறுபாடு காணப்படுவதான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்பதும குறிப்பிடத்தக்கதோடு இந்த வாகன எண்ணிக்கைகள் கணக்காய்வுகளில் வடக்கு மாகாணத்தில் காணப்படுத் 34 உள்ளூராட்சி சபைகள் உள்ளடங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.