‘மக்கள் கூட்டமைப்பு’ என்னும் பெயரில் நிறுவப்பட்ட பொது அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்து
” இனிவரும் காலங்களில் கனடாவில் நடைபெறவுள்ள மத்திய, மாகாண மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்காக பல அமைப்புக்களும் தனிநபர்களும் ஆதரவு தேடும் பங்களிப்பினைச் செய்து வருகின்றார்கள். குறிப்பாக தமிழ் பேசும் மூத்தோர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு ஆதரவைத் தேடும் செயற்பாடு தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள். இதேவேளை இலங்கை அரசோடும் பௌத்த பிக்குகளோடும் இணைந்து ‘இமாலயப் பிரகடனம்’ என்னும் தமிழர் விரோத செயற்பாட்டை கையிலெடுத்ததன் காரணமாக கனடாவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியும் மக்கள் ஆதரவை இழந்தும் பின் தள்ளப்பட்டுள்ள கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர்களும் சில தொகுதிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு ஆதரவைத் தேடும் செயற்பாடுகளிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். கனடாவில் மக்களின் விருப்பைத்தையோ அல்லது சம்மதத்தையோ பெற்றுக் கொள்ளாமல் ‘இமாலயப் பிரகடனத்தை’ தொடர்ச்சியாக நடைமுறைப் படுத்து முயற்சிகளில் இ றங்கியுள்ள கனடிய தமிழர் பேரவை இவ்வாறான அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்றும் எமது மக்கள் கூட்டமைப்பு’ வலியுறுத்துகின்றது.
இவ்வாறு ரொறன்ரோ பெரும்பாகத்திலும் மொன்றியால் நகரிலும் ‘மக்கள் கூட்டமைப்பு’ என்னும் பெயரில் நிறுவப்பட்ட பொது அமைப்பு வெளியிட்டு விநியோகம் செய்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் தொடர்ந்து பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தமிழர் பேரவை தொடர்ந்து தமிழ் மக்கள் சார்ந்த அமைப்பாக விளங்க வேண்டுமானால் அந்த அமைப்பினர் ‘இமாலப் பிரகடனம்’ என்று தமிழ் மக்கள் விரோத செயற்பாட்டிலிருந்தும் அதை அமுல் செய்யும் முனைப்பிலிருந்தும் விலகி நிற்க வேண்டும். ஆனால் கனடிய தமிழர் பேரவை அவ்வாறு இதுவரை செயற்படவில்லை. மக்களின் கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் கனடிய தமிழர் பேரவை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே அந்த அமைப்பின் ஆதரவை வேண்டி நிற்கும் வேட்பாளர்கள் கூட இலங்கை அரசின் ‘இமாலயப் பிரகடனத்திற்கு’ ஆதரவு வழங்குபவர்களாகவே அடையாளம் காட்டப்படுவார்கள்.
மேலும் தற்போது பதவி விலகியுள்ள கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவியான ரவீனா ரட்ணசிங்கம் அவர்களும் கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தன்னை தயார்படுத்தி வருகின்றார். அவருக்கு ஆதரவு வழங்கும் செயற்பாடுகளிலும் தற்போது கனடிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டாக செயற்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக கனடிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினரான ஜே. ஜெயராசலிங்கம் அவர்களும் கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவியான ரவீனா ரட்ணசிங்கம் அவர்களுக்கு ஆதரவு தேடும் பணிகளில் முழு நேரமாக அமர்த்தப்பட்டுள்ளார் எனவும் அறியப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை நாம் உற்று நோக்கினால், கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தமிழ் பேசும் வேட்பாளரா ரவீனா போன்றவர்கள் தற்போதைய லிபரல் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராகவே பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.
இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட தமிழினப் படுகொலைகளுக்குரிய தண்டனையைப் பெறவேண்டும் அல்லது பொறுப்புக் கூற வேண்டும் என்று குரல் கொடுத்த வருகின்ற லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒரு வேட்பாளருக்கு வழங்கும் ஆதரவு மூலம் கனடிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர்கள் ‘இமாலயப் பிரகடனத்தை தொடர்ச்சியாக ஆதரிப்பவர்கள் என்ற வகையில் அவர்களுடைய ஆதரவு எமது தமிழ் பேசும் வேட்பாளர்களுக்கு அவசியம் இல்லை என்றே நாம் கருத வேண்டியுள்ளது’
இவ்வாறு ‘மக்கள் கூட்டமைப்பு’ என்னும் பெயரில் நிறுவப்பட்ட பொது அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.