மட்டக்களப்பு கல்குடா பொலிசார் மீது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலய விவகாரம் ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தனது பிரதேசத்திற்குள் இரவு வேளைகளில் சிவில் உடையில் வரும் பொலிசார், வீடு புகுந்து தடிகளால் தம்மை தாக்குவதுடன்,பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி வருவதாகவும் தெரிவித்து, பேத்தாழை கருங்காலிச்சோலை மக்கள் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம், நேற்று, இன்று இரவு என பொலிசார் சிவில் உடையில் அந்த கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளின் படலைகள், வேலைகளை உடைப்பது, வீடுகளிற்குள் நுழைந்து தாக்குவது என கிராமத்தையே பீதியில் ஆழ்த்தி வருவதாகவும், பொலிசாரின் இந்த நடவடிக்கையால் இளைஞர்கள் இரவில் கிராமத்தில் தங்க முடியாமல் காடுகளிலும், பிற இடங்களிற்கும் செல்வதாக கிராமவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில், கிராம மக்கள் இன்று முறைப்பாடு சமர்ப்பித்துள்ளார்கள்.
அந்த முறைப்பாட்டில், நடந்த சம்பவத்தை விலாவாரியாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 12.10.2020 ஆம் திகதி பேத்தாழை கருங்காலிச்சோலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக கல்குடா பொலிசாரின் நடவடிக்கைகள் பக்கச் சார்பாக இடம்பெற்று வருகிறது.
இவர்கள் அன்றைய தினம் பொதுமக்களை தாக்கியதுடன் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
தற்போது கடந்த 17.10.2020,18.10.2020 ஆம் திகதிகளில் குறித்த பிரதேசத்திற்கு இரவு வேளைகளில் சிவில் உடையில் கையில் ஆயுதம் மற்றும் மரத் தடிகளுடன் வந்து வீடுகளுக்குள் புகுந்து மக்களை தாக்குவதுடன் தகாத வார்த்தைகளை கூறி அச்சமூட்டி கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது செய்யப்படுவர்களை அதே இடத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் மத்தியில் வைத்து தாக்கி வாகனங்களில் ஏற்றி வருகின்றனர். இது தொடர்கதையாகவுள்ளது.
இதனால் பொதுமக்களாகிய நாம் கடந்த ஒரு வாரகாலமாக அச்சமடைந்த நிலையில் சரியான முறையில் உணவு உறக்கமின்றி வாழ்ந்து வருகின்றோம்.
குறித்த பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ நாக தம்பிரான் ஆலய நிர்வாகத்தில் கடந்த கால கணக்கறிக்கை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவ் அவல நிலமை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக வாழைச்சேனை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொலிசார் ஒரு தரப்பினருக்கு பக்கச்சார்பாக நடந்து கொண்டமையினால் இவ் மோதல் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆலய முன்றலில் கலாச்சார உத்தியோகஸ்த்தர்கள் முன்னிலையில் இடம்பெற்ற பொது கூட்டத்தின் போது புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து கணக்கறிக்கை விடயம் தொடர்பான முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து நீதி கேட்டவரான ஜீ.பால்ராஜ் என்பவரின் தாயார் திருமதி சந்திரமதி ஜீவகுமார் கத்தி வெட்டுக்கு இலக்கிகாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்க்ப்பட்டவர்கள் தங்கள் மனித உரிமைகள் அமைப்பிடமும் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சம்பவம் அவ்வப்போது பிரதேசத்தில் பல அசம்பாவிதங்கள் நீதி கேட்டவரான ஜீவகுமார் பால்ராஜ் என்பருக்கு எதிராக மற்றைய தரப்பினரால் இடம்பெற்று வந்தது.
அதில் ஒரு விடயமாகவே 12.10.2020 ஆம் திகதி மாலை வேளை தனது வீட்டிற்கு நண்பர்கள் மூவருடன் காரில் சென்று திரும்பும் வழியில் அவர்களை வழிமறித்து தாக்கியதுடன் வீட்டிற்குள் இழுத்துச் சென்று கட்டி வைத்து மதுபானத்தை பலவந்தமாக வாய்க்குள் திணித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் 3 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது இச்சம்பவத்தினை நேரில் பார்த்த ஊர்மக்கள் சப்பவத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வரவழைக்கப்பட்ட பொலிசார் ஊர்மக்களின் நியாயமான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் பக்கச் சார்பாக செயற்பட்டனர்
பின்னர் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு நிலை தோற்றம் பெற்றது.
இறுதியில் பொதுமக்கள் கல்குடா நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரியின் உதவியுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதனையடுத்து இச் செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றி செல்லும் போது மறைந்திருந்து இருட்டில் சிலர் பொலிஸ் வாகனத்தை கல்லால் எறிந்து தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை பிரதேச விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்து பொதுமக்கள் அவ்விடத்தினை விட்டு விலகி தங்களது
அங்கு வந்த அதிரடிப்படையினர் மற்றும் சிவில் உடையில் வந்த பொலிசார் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கியதுடன் அவர்களது சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
சந்தேகத்தில் 2 நபர்களை கைது செய்திருந்தனர். அவர்கள் தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் எங்கள் பிரதேசத்தில் நடந்த சம்பவமாகும்.
எனவே இவ்விடயத்தில் இருந்து எங்களை காப்பாற்றி நீதி வழங்க நடவடிக்கை எடுத்து தருமாறு தங்களை தயவுடன் ஊர்மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது