சிவா பரமேஸ்வரன்–மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ள நிலையில்மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 196 பேரில் 24 தமிழர்களும் 16 முஸ்லிம்களும் தெரிவாகியுள்ளனர்.
அதே நேரம் தமிழர் தரப்பில் தேசியப் பட்டியல் ஊடாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பில் 4-5 பேர் தெரிவாகக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை எந்தவொரு பெண் வேட்பாளரும் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகவில்லை.
கடந்த தேர்தலில் தெரிவான விஜயகலா மகேஸ்வரன்(ஐ.தே.க) இம்முறை தோல்வியடைந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மறைந்த நாடாளுமன்ற என்.ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தெரிவானதாக ஆரம்பத்தில் வெளியான அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் அதிகாரபூர்வமாக அவர் தெரிவாகவில்லை என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் அது தொடர்பான சர்ச்சை இன்னும் நிலவுகிறது.

சசிகலா ரவிராஜ்
தேர்தல் முடிவுகளின்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தோல்வியடைந்துள்ள அதே நேரத்தில் பலர் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
யாழ் மாவட்டம்:
கடந்த தேர்தலில் தெரிவான ஏழு உறுப்பினர்களில் இம்முறை நான்கு பேர் மட்டுமே மீண்டும் தெரிவாகியுள்ளனர். தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்த அங்கஜன் இராமநாதன் இம்முறை நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாவை சேனாதிராஜா உட்பட மூவர் தோல்வியடைந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவாகினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதன் ஈ.பி.டி.பி சார்ப்ல் டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவானர்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
2015 தேர்தலில் வெற்றி பெற்ற மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவான், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இத்தேர்தலில் தோல்வியடைந்தனர். .
சுதந்திரத்துக்கு பின்பு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் இம்மாவட்டத்திலிருந்து ஒருவர் நேரடியாகத் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.
கடந்த தேர்தலில் ஐந்து ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை இரு ஆசனங்களை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக் கட்சியிடம் இழந்துள்ளது. ஐ.தே.கட்சியின் ஆசனம் இம்முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்குச் சென்றுள்ளது.
2004க்கு பின்னர் தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.
வன்னி மாவட்டம்:
இம்மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி முதல்முறையாக ஈ.பி.டி.பிக்கு யாழ் மாவட்டத்துக்கு வெளியே ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. 2015 தேர்தலில் த.தே.கூ சார்பில் தெரிவான சிவசக்தி ஆனந்தன் இம்முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய போதிலும் தோல்வி கண்டுள்ளார்.

சிவசக்தி ஆனந்தன்
கடந்த தேர்தலைப் போன்று நான்கு தமிழர்களும் இரண்டு முஸ்லிம்களும் இம்முறையும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கடந்த தேர்தலிலும் தெரிவாகியிருந்தனர். எனினும் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் நான்கிலிருந்து மூன்றாக குறைந்துள்ள நிலையில் அந்த இடம் ஈ.பி.டி.பிக்கு சென்றுள்ளது.
சென்ற தேர்த்லில் த.தே.கூ சார்பில் தெரிவாகியிருந்த டாக்டர். எஸ். சிவமோகன், தேசியப் பட்டியலில் தெரிவாகியிருந்த சாந்தி சிறீஸ்கந்தராஜாவும் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
தமிழர்களும் முஸ்லிம்களும் தமது வாக்குகளை சிந்தித்து செலுத்தியதால் சிங்களவர் ஒருவர் தெரிவாகும் வாய்ப்பு தடுக்கப்பட்டது.
தெரிவானவர்கள் விவரம்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: காதர் மஸ்தான்.
ஐக்கிய மக்கள் சக்தி: ரிஷாத் பதியுதீன்
ஈ.பி.டி.பி: குலசிங்கம் திலீபன்
தெரிவான ஆறு பேரில் வினோ நோகராதலிங்கம் 2010 தேர்தலுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.
திருகோணமலை மாவட்டம்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் பல்வேறு விமர்சனங்களையும் சவால்களையும் எதிர்க்கொண்டாலும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பியுள்ளனர்.

சம்பந்தர்
இம்மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு வழக்கம்போல் கிடைத்த ஒரு ஆசனத்தில் சம்பந்தர் வெற்றி பெற்றுள்ளார். ஏனைய ஆசனங்கள் முஸ்லிம்-02, சிங்களவர்-01 என்று பிரிந்தது
எம்.எஸ். தௌபீக் (மு.கா) (ஐக்கிய மக்கள் சக்தி) இம்ரான் மஹ்ரூப் (ஐ.ம.ச), கபில நுவன் அத்துகொரல (பொதுஜன பெரமுன)
இவர்களில் தௌபீக் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து பின்னர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.
கடந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ரிஷாத் கட்சி) சார்பில் தெரிவாகியிருந்த எம்.மஹ்ரூப் தோல்வியைத் தழுவ அந்த இடம் எம்.எஸ்.தௌபீக்குச் சென்றது.
அதேபோல் பெரமுனவில் சுசந்த புஞ்சிநிலமே தோல்வியடைய அத்துகொரல வென்றார்.
மட்டக்களப்பு மாவட்டம்:
இலங்கைத் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவு எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி நான்கு வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று இம்முறை தெரிவாகியிருக்கிறார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) அவர் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன்
மற்றுமோர் முன்னாள் முதலமைச்சரான ஹாபிஸ் நசீர் அகமட் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வென்றுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு: சாணக்கிய ராகுல ராஜபுத்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: சிவநேசதுரை சந்திரகாந்தன்.
முஸ்லிம் காங்கிரஸ்: ஹாபிஸ் நசீர் அகமட்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: ச. வியாழேந்திரன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
2015 தேர்தலில் தெரிவான ஐந்து பேரில் ஞா.ஸ்ரீநேசன் (த.தே.கூ), சீ.யோகேஸ்வரன் (த.தே.கூ), எஸ்.எச்.அமீர் அலி (ரிஷாத் கட்சி), அலிசாகிர் மௌலானா (மு.கா), தேசியப் பட்டியல் உறுப்பினர் ஹிஸ்புல்லா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
சாணக்கிய ராஜபுத்திரன் கடந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் இம்முறை த.தே.கூ சார்பில் போட்டியிட்டு தெரிவானார்.
கோவிந்தன் கருணாகரம் 1989 தேர்தலுக்கு பின்னர் இம்முறை மீண்டும் தெரிவாகியுள்ளார்.
கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த மூன்று ஆசனங்கள் இம்முறை இரண்டாகக் குறைந்துள்ளது. த.தே.கூவில் தெரிவாகி பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குத் தாவிய ச.வியாழேந்திரன் தனது இடத்தை மொட்டுச் சின்னத்தில் தக்கவைத்துக் கொண்டார்.
அம்பாறை மாவட்டம்:
1994ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு பிறகு இம்மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிட்டு தமிழ் வாக்குகளைப் பிரித்ததன் மூலம் தானும் வெற்றி பெறாமல் கூட்டமைப்பின் வெற்றியையும் பாதித்துள்ளார்.
2015 தேர்தலில் மு.கா சார்பில் தெரிவான எச்.எம்.ஹாரிஸ், பைசால் காசிம், எம்.ஐ.எம். மன்சூர் ஆகிய மூவரில் மன்சூர் தவிர மற்ற இருவரும் இம்முறையும் தெரிவாகினர்.
தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்ட நிலையில் அந்த ஆசனம் தேசிய காங்கிரஸுக்கு கிடைத்த நிலையில் அதன் தலைவர் ஏ.எல். அதாவுல்லா 2010க்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ரிஷாத் கட்சி) கிடைத்த ஒரு ஆசனத்துக்கு முகமட் முஷாரப் தெரிவாகியுள்ளார். இவர்களைத் தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம்-கண்டி மாவட்டம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன்—வன்னி மாவட்டம், தேசியக் காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா—அம்பாறை மாவட்டம் எனத் தெரிவாகியுள்ளனர்.

சி.வி வெற்றி-சுரேஷ் தோல்வி
தமிழ்க் கட்சிகளின் பொறுத்தவரை யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் அனந்தி சசிதரன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் என். ஸ்ரீகாந்தா ஆகியோர் தோல்வியடைந்தனர்.
வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் வெற்றி பெற்ற தமிழ்க் கட்சித் தலைவர்களில் அடங்குவர்.
கொழும்பு மற்றும் ஏனையப் பகுதிகள்:
கொழும்பில் 2015 போன்று இம்முறையும் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே கட்சியில் போட்டியிட்ட முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்த அதேவேளை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தோல்வியடைந்தார்.
நுவரெலியா மாவட்டம்:
இம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த மூன்று ஆசனங்களும் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த பி.திகாம்பரம், வீ.ராதகிருஷ்ணன், எம்.உதயகுமார் ஆகியோருக்குச் சென்றது.

திகா, ராதா, உதயா
பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஐந்து ஆசனங்களில் இ.தொ.கா சேர்ந்த ஜீவன் தொண்டமான், ராமேஸ்வரன் ஆகியோருடன் மூன்று சிங்களவர்களும் தெரிவான நிலையில், இ.தொ.கா சார்பில் நிறுத்தப்பட்ட ஏனைய மூவர் தோல்வியடைந்தனர்.
கண்டி மாவட்டம்:
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நான்கு பேரில் ரவூப் ஹக்கிம், அப்துல் ஹாலிம் மற்றும் வேலு குமார் ஆகியோர் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
பதுளை மாவட்டம்:
இந்த மாவட்டத்தில் தொண்டமான் குடும்பத்தில் மற்றுமோர் வாரிசாகப் போட்டியிட்ட முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்தார். ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த மூன்று ஆசனங்களில் இரண்டை இந்திய வம்சாவளி தமிழர்களான சுரேஷ் வடிவேல், அ.அரவிந்தகுமார் ஆகியோர் 2015 போன்று இம்முறையும் வென்றனர்.
புத்தளத்தில் பிரதான முஸ்லிம்கள் கட்சிகள் தராசு சின்னத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டதால் 43 வருடங்களுக்கு பின்னர் முஸ்லிம்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட முடிந்தது. அலி சப்ரி ரஹீம் தெரிவானார்.
அனுராதபுரத்தில் கடந்த தேர்தலில் தெரிவான ரிஷாத் கட்சியைச் சேர்ந்த இசாக் ரஹ்மான், கேகாலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்த கபீர் ஹாசிம் ஆகியோரும் மீண்டும் நாடாளுமன்றம் செல்கின்றனர்.