சிவா பரமேஸ்வரன்
இலங்கை நாடாளுமன்றத்துக்கு இம்முறை ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஐந்து உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் மூன்று பேர் இருந்த நிலையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் தற்போதையப் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச இம்முறையும் குருநாகல் மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ள அதேவேளை அவருடைய மகன் நாமல் ராஜப்கசவும், மூத்த சகோதரர் சாமல் ராஜபக்சவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
சாமல் ராஜபக்சவின் மகனும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்திலிருந்தும், ராஜபக்சக்களின் சகோதரி மகன் நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் புதுமுகங்களாகத் தெரிவாகி நாடாளுமன்றம் செல்கின்றனர். அவர்கள் போட்டியிட்ட மாவட்டங்களில் சாமல் ராஜபக்சவைத் தவிர ஏனைய நால்வரும் விருப்பு வாக்குகளில் முதலிடத்தைப் பெற்றிருந்தனர்.

ராஜபக்ச வாரிசுகள்: சசீந்திர, நிபுண, நாமல்
மாத்தளை மாவட்டத்தில் 2015 தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் தெரிவான ஜனக பண்டார தென்னகோன் இம்முறை தனது மகன் பிரேமித பண்டார தென்னகோனையும் இணைத்துக் கொண்டு நாடாளுமன்றம் செல்கிறார்.
குடும்ப உறவுகளான பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன மற்றும் சுசில் பிரேம் ஜெயந்த ஆகியோரும் ஆளும் கட்சி சார்பில் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
திருமண சம்பந்திகளான வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் மாவட்டத்தில் எதிரணியிலும் வாசுதேவ நாணயக்கார இரத்தினபுரி மாவட்டத்தில் ஆளும் தரப்பில் தெரிவாகி நாடாளுமன்றம் செல்கின்றனர்.

சி.வி பதவியேற்பு நிகழ்வில் வாசு குடும்பம்
ஒருவர் உள்ளே ஒருவர் வெளியே:
2015 தேர்தலிலைப் போன்று இந்தத் தேர்தலிலும் தந்தை-மகன், அண்ணன்- தம்பி, கணவன்–மனைவி என குடும்ப உறுப்பினர்கள் பலர் போட்டியிட்ட போதிலும் ஒருவர் நாடாளுமன்றம் உள்ளே செல்ல மற்றவர் வெளியே உள்ளார்.
ஐ.தே.கவில் தந்தையும் மகனுமாக கடந்தமுறை நாடாளுமன்றம் சென்றிருந்த டாக்டர். ராஜித சேனாரட்ன(களுத்துறை மாவட்டம்) அவரது மகன் சதுர சேனாரட்ணன (கம்பஹா மாவட்டம்) ஆகிய இருவரும் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டனர். எனினும் தந்தை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மொனராகல மாவட்டத்தில் போட்டியிட்ட தர்மதாஸ பண்டார தோல்வியைத் தழுவ அவரது சகோதரரும் கட்சியின் பொதுச் செயலருமான ரஞ்ஜித் மத்தும பண்டார தேசியப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க கடந்த தேர்தலில் ஐ.தே.கவில் தெரிவாகியிருந்தாலும் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் அவரது சகோதரரான பிரசன்ன ரணதுங்க இம்முறையும் ஆளுங்கட்சி சார்பில் கம்பஹாவில் தெரிவானார்
ஆளும் தரப்பில் களமிறங்கிய தொண்டமான் வாரிசுகளில் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் நுவரெலியாவில் வெற்றிபெற பதுளையில் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்தார்.

ஜீவன் தொண்டமான்
கொழும்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் உள்ளே செல்ல வன்னியில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் சுவர்க்கடிகாரம் சின்னத்தில் போட்டியிட்ட அவரது சகோதரர் பிரபா கணேசனுக்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளே செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.
திருகோணமலையில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட காலஞ்சென்ற அமைச்சர் எம்.ஐ.எம் மஹரூபின் மகனான இம்ரான் மஹ்ரூப் (ஐ.ம.ச) மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார். அவரது சகோதரி ரோஹினா மஹ்ரூப் (ஐ.தே.க) வாய்ப்பை இழந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத்தில் கணவன் மனைவியாக நாடாளுமன்றத்தில் ஐ.தே.க உறுப்பினர்களாக இருந்த தயா கமகே-அனோமா கமகே தம்பதிகள் இம்முறை கொழும்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிட்ட போதிலும், ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட படுதோல்வி காரணமாக மீண்டும் நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை.
தாமரை மொட்டு கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சகோதரர்களில் மஹிந்த யாப்பா வெற்றிபெற லக்ஸ்மண் யாப்பா தோல்வியடைந்தார்.
கண்டி மாவட்டத்தில் 2015 தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிட்டு தெரிவாகியிருந்த உடன்பிறவா சகோதரர்களான மஹிந்தானந்த அளுத்கமே ஆகிய இருவரில் இம்முறை ஆளும் தரப்பில் களமிறங்கிய போதிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் மஹிந்தானந்த அளுத்கமகே மட்டுமே மீண்டும் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்கிறார்.
கடந்த தேர்தலில் ஐ.தே.க சார்பில் நாடாளுமன்றம் சென்றிருந்த உடன்பிறப்புக்ளான நவின் திஸநாயக்க (நுவரேலியா மாவட்டம்) மாயா திஸநாயக்க (கண்டி மாவட்டம்) ஆகிய இருவரில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வாய்பு மாயா திஸநாயக்கவுக்கு கிடைத்தது.
பதுளை மாவட்டத்தில் கடந்த தேர்தலி ஐ.தே.க சார்பில் போட்டியிட்டுத் தெரிவான முன்னாள் அமைச்சர் ரவீந்திர சமரவீர இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட போதிலும் தெரிவாகவில்லை. அதேபோல் ஐ.தே.கவில் போட்டியிட்ட அவரது சகோதரர் உபாலி சமரவீரவும் தோல்வியடைந்துள்ளார்.

ரோஹினா மஹ்ரூப்
மாத்தளை மாவட்டத்தில் 1977 தொடக்கம் அலுவிஹார குடும்பத்தில் தந்தை மற்றும் பிள்ளைகள் என ஓரிருவர் நாடாளுமன்றத்தில் ஐ.தே.க சார்பில் பிரதிநிதித்துவம் பெற்று வந்தனர். இம்முறை ஐ.ம.ச வேட்பாளர்களாக ரஞ்சித் மற்றும் வசந்த அலுவிகார சகோதரர்கள் கூட்டாக களமிறங்கிய போதிலும் அலுவிஹார குடும்பத்துக்கு 43 வருடங்களுக்கு பிறகு ஏமற்றமே மிஞ்சியது.
நான்கு தசாப்த்தங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் ஆளுமை செலுத்திவந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். கட்சியும் அவரும் சேர்ந்து படுதோல்வியடைந்தார். கம்பஹாவில் போட்டியிட்ட அவரது குடும்ப உறுப்பினரான ருவான் விஜேவர்த்தனவுக்கு தோல்வியே மிஞ்சியது.






















