கதிரோட்டம்- 03-04-2026

‘நெஞ்சில் விடுதலை வேட்கையும் கழுத்தில் சயனைட் குப்பியும் கைகளில் துப்பாக்கிகளுமென வரிப்புலிகளாக,வான் புலிகளாக ,கடற்புலிகளாக,கரும்புலிகளாக தமிழினத்தின் உரிமைகளுக்காக களமாடி தமது இன்னுயிர்களை தமிழின விடுதலைக்கான வித்துக்களாக்கிய தமிழ் இளைஞர் ,யுவதிகள் ,மக்கள் வாழ்ந்த மண் இன்று குற்றங்கள் மலிந்த, குற்றவாளிகள் நிறைந்த தேசமாகிக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டத்தின் மூலம் முழு உலகையுமே தமது பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த தமிழ் தேசம் இன்று திட்டமிட்ட கலாசார சீரழிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதுடன் கொலைகள், குற்றங்கள் ,கொடூரங்கள் நிறைந்த தேசமாகவும் மாறி வருகின்றது.’-
என்று எமது கட்டுரையாளர் பாலா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வடித்துள்ள கட்டுரை உள்ளே பிரசுரமாகியிருக்கின்ற வேளையில் எமது ஆசிரிய பீடத்தின் கண்களைத் திறந்த அவரது கட்டுரையின் முதற்பந்தியோடு நாமும் எனது கருத்துக்களை அங்கு குறிப்பிட்டட விடயங்களோடு தொடர்புபடுத்தி தொடராலாம் என்று விளைகின்றோம்.
முன்னைய ‘;கொடிய’ மகிந்தாவின் ஆட்சிக் காலத்தில் போதை மருந்துகள் கொழும்புத் தலை நகரில் தாராளமாக அரசாங்கத்தின் அமைச்சர்களின் தலைமையில் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் வடக்கில் 2009ம் ஆண்டுக்கு முன்னர் ‘எட்டிப் பார்க்க’ முடியாதவையாக விளங்கிய ‘போதைப் பொருட்கள்’ போருக்குப் பின்னர் எமது வடக்கு கிழக்கையும் எட்டிப் பார்த்தன. பண்பாட்டுக் கோலங்களை இழந்தவர்களாக எம் உறவுகளை மாற்றிவிட்டன. இதனால் கற்றவர்களாக போற்றப்பெற்ற் வடக்கு கிழக்கு தமிழ்ச் சமூகத்தை புற்று நோய்க் கிருமிகள் போல தாக்கத் தொடங்கின கயவர்களின் கடத்தல் ‘தொழில்’.
வடக்கிலும் கிழக்கிலும கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று கனவுகளுடன் வாழும் குடும்பங்களில் ‘மண்’ அள்ளி வீசியதைப் போன்று ஆங்காங்கே முளைவிட்ட சமூக விரோதிகள் பொருளாசை கொண்டு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கத் தொடங்கினர். பின்னாளில் மகிந்தாவின் ஆட்சியில் அங்கம் வகித்த மலையக அமைச்சர் ஒருவருக்கு ‘குடு’ என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கின்ற ஒரு காலம் இருந்தது என்பார்கள். மகிந்தாவின் கைப்பொம்மையாக விளங்கிய இவர் மூலம் மகிந்தாவிற்கு கப்பப் பணம் செலுத்த வேண்டியிருந்ததாம். அந்த மலையக அமைச்சர் தனது பிரதேசத்தில் இளைய தலைமுறையினரை பாழாக்கும் ‘சேவையிலும்’ ஈடுபட்டார் என்பது முழு இலங்கையர்க்கும் தெரிந்த விடயமாக உள்ளது. ஆனால் தற்போது கூட்டத்தோடு கூட்டமாய் அநுர என்னும் ஜனாதிபதியை பார்க்கப்போயுள்ளாராம் இவர்.
இனி நாம் வடக்கையும் கிழக்கையும் உற்று நோக்குவோம். பாலா அவர்கள் தனது கட்டுரையில் கூறியுள்ளது போன்று கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, கூலிக்கு கொலைகளைச் செய்வது போன்ற எப்போதும் இல்லாத சமூக விரோதச் செயல்கள் அங்கு தினந்தோறும் இடம்பெறும் அநியாயச் செயற்பாடுகளாக காட்சிப்படுத்தப்படுவது எமது மக்களையும் இளைஞர் யுவதிகளையும் அக்கறையோடு கண்காணிப்பதற்கு ‘உரிய’ தலைவர்கள் அல்லது போராளிகள் இல்லாது போய்விட்டார்களா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
வடக்கு கிழக்கிலிருந்து எமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அன்பு, நேசம், இரக்கம் போன்ற எமக்கு இருக்க வேண்டிய குணாம்சங்கள் சிறிது சிறிதாக அழிந்து கொண்டு போகின்றதா என்ற சந்தேகம் எழுந்து நின்று எம்மை ஆட்டங்காண வைக்கின்றது. எமக்குள் அச்சம் மற்றும் பின்னடைவு ஆகியன தோன்றி. கல்வியும் வீரமும் செல்வமும் நிறைந்த ஒரு இனமாகக் கணிக்கப்பெற்ற எம் தமிழினம் இன்று கயவர்களின் கைகளுக்கும் காவாளிகளின் பிடிகளுக்கும் சென்று விட்ட ஒன்றாக காணப்படுவது தூரதிஸ்டமே!
நாம் இங்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை ‘கயவர்கள்’ என்று விழிக்கின்றபோது. அந்தக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் அடங்குவது எமது கண்களுக்கு தெரிகின்றது. மக்கள் மன்றங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற கற்றவர்களும் கடமை நோக்கம் கொண்டவர்களும் அவர்கள் தங்கள் வாய்களை மூடிக் கொள்ளும் அளவிற்கு மக்கள் மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாம் வடக்கிலும் கிழக்கிலும் காண்கின்றோம்.
அதற்கு சற்று மேலே சென்றால் தற்போது எந்த ஒரு பதவியிலும் இல்லாத முன்னாள் அரசியல்வாதிகள்(?) மற்றும் அமைச்சர்கள் போன்றவர்கள் மாகாண சபைத் தேர்தல் எப்போது வரும், அதில் நானும் என் குடும்பத்தினரும் ‘உள்ளே’எந்தப் பதவிகளைப் பெறுவது என்ற் சிந்தனைகளோடு நாட்களைக் கடத்துகின்றார்கள். தங்களைச் சுற்றி நடக்கும் ‘சமூக விரோதச் செயல்கள்’ அவர்களின் கண்களுக்கு தெரிவதும் இல்லை. காதுகளில் கேட்பதும் இல்லை போன்று ‘அடுத்து வரும் தேர்தல்களுக்காக காத்திருக்கும் காட்சிகள் தெரிகின்றன. பதவி ஆசையும் அதன் மூலம் அவர்கள் சூறையாடப்போகின்ற நிதியும் அவர்கள் கண்களின் முன்னால் எப்போது தோன்றிய வண்ணம் உள்ளன எனலாம். இவர்களின் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வன் அடைக்கலநாதன் ஆகியோர் ‘முதல்வர்களாக’ உள்ளார்கள் என்பதை அங்குள்ள மக்கள் அறிவார்கள்
ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் முன்னரிலும் பார்க்க பல்கலைக் கழகங்கள் அதிகரித்துள்ளன.
அவற்றில் கற்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தை வளர்த்துக் கொள்தற்கும் மேலும் ‘சமூகமாக வளர்வதற்கும்’ தந்தையர்களும் அன்னையர்களும் முனைகின்றார்கள். அவ்வாறானவர்கள், இந்த சீரழிந்து செல்லும் சமூகத்தை சமாளித்து தங்கள் எதிர்காலம் சிறக்க காணும் கனவுகளை அழித்துவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்h என்ற கவலையும் எம்மிடத்தில் கொழுந்துவிட்டு எரிகின்றது.
ஒரு முழுமையான பார்வையை எமது தமிழர் தாயகம் என்ற வடக்கு கிழககில் செலுத்தினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற தமிழ பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ‘சமூக சீரழிவுச் செயல்கள் அதிகரிக்கும் விடயம் ஒரு பாரதூரமானதாகத் தெரிவதில்லையோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.
அதற்கு மேலாக அங்கு வாழும் எமது மக்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. எமது சமூகம் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாமல் எமது மக்கள் சார்பாக வடக்கு கிழக்கிற்கு வரும் பிரமுகர்களைச் சந்தித்து தமக்கு ‘செல்வாக்கு’ தேடும் சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அங்கு அதிகரித்துள்ள சமூகுத்தை சீர்குழைக்கும் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்களை தங்கள் நலனுக்காகவும் பயன்படுத்துகின்றார்கள் என்பதை கேள்வியுறும் போது எம் ‘கற்றறிந்த’ சமூகம் வெட்டி சரிக்கப்படும் ஒன்றாக மாறிவிடுமோ என்ற ஏக்கப் பெருமூச்சு எம்மிடத்தில் எழுகின்றது. நாங்கள் அங்கு நிராகரிக்க வேண்டிய ‘காவளிக் கூட்டத்தினரோடு சேர்த்து எம்மக்கள் மத்தியில் காணப்படும் ‘போலி’- ‘பார்’ அரசியல்வாதிகளையும் நிராகரிக்க இயக்கமாக மக்கள் எழுந்து வரவேண்டும்.!





















