சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல்லில் மாவட்ட ரீதியாக 196 பேர் தெரிவாகியுள்ளனர். அடுத்த கட்டமாக 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலுக்கு முன்பு தேசியப் பட்டியல் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தன. தேர்தல் சட்ட விதிகளின்படி தேர்தலுக்கு பின்னரும் தேசியப் பட்டியல் விவரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஆணையம் அரசியல் கட்சிகளைக் கேட்டுள்ளது.
ஏற்கனவே அளிக்கப்பட்ட பட்டியலில் மாற்றங்கள் இருக்குமா ? என்பதை அறிந்து கொள்வதற்காகவே தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு அவகாசம் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு பதில் கிடைக்காத பட்சத்தில் தேர்தலுக்கு முன்னர் சமர்ப்பித்த பட்டியலிலுள்ள வரிசைப்படி நியமனம் இடம்பெறும்.
இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு)-17, ஐக்கிய மக்கள் சக்தி (தொலைப்பேசி) 07- த.தே.கூ, ஜே.வி.பி, தமிழ் காங்கிரஸ், ஐ.தே.க. அபே ஜன பல பக்ஷய ஆகியவை தலா ஒரு ஆசனம் பெறுகின்றன.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது நடைபெற்ற தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கும் இம்முறை தேசியப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளன.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆளுமை செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை மாவட்ட ரீதியான நேரடித் தேர்வில் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்தது.
இருப்பினும் நாடாளாவிய ரீதியில் பெற்ற வாக்குகள் மூலம் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுகிறது. அது போலவே கடும் போக்கு பௌத்த பிக்குகளைக் கொண்ட அபே ஜன பல பக்ஷய ஒரு ஆசனத்தைப் பெறுகிறது. ஐ.தே.கவின் இந்த நிலையை ஞானசார தேரரின் கட்சியும் ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் காண முடிகிறது.
நாடாளவிய ரீதியில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகள் 29ஆல் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்படுகிறது.
கட்சி | வாக்குகள் | வீதம் | ஆசனம் |
பொதுஜன பெரமுன | 6,853,693 | 59.09% | 17 |
ஐக்கிய மக்கள் சக்தி | 2,771,984 | 23.90% | 07 |
ஜே.வி.பி | 445,958 | 3.84% | 01 |
த.தே.கூ | 327,168 | 2.82% | 01 |
ஐ.தே.க | 249,435 | 2.15% | 01 |
தமிழ் காங்கிரஸ் | 67,766 | 0.58% | 01 |
அபே ஜன பல பக்ஷய | 67,758 | 0.58% | 01 |
த.ம.வி.புலிகள் | 67,692 | 0.58% | 00 |
இந்த அட்டவணையைப் பார்க்கும் போது 0.58% வாக்குகளை மூன்று கட்சிகள் பெற்றிருந்தாலும் இரு கட்சிகள் மட்டுமே ஆசனம் பெறுகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் கடும்போக்கு பௌத்த கட்சிக்கு சென்ற இறுதி ஆசனம் பிள்ளையான் கட்சிக்குக் கிடைத்திருக்கும். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதித்துவம் ஒன்று குறைந்து தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்று கூடியிருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:
கடந்த தேர்தலில் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருந்த த.தே.கூட்டமைப்புக்கு இம்முறை ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.
தேர்தலுக்கு முன்னர் கையளிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பு இம்முறையும் கிட்டவில்லை.
தேர்தலில் தோல்வி கண்ட முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலரும் திருகோணமலையிலுள்ள சம்பந்தரின் இல்லத்துக்கு ஆதரவாளர்கள் சகிதம் படையெடுத்தனர்.
`ஆம்… பார்ப்போம்…. யோசிப்போம்…. எல்லோரும் பேசி நல்ல முடிவு எடுப்போம்`….. என்று சம்பந்தர் தனது வழமையான பாணியில் பதிலளித்து அனுப்பிவைத்தார். தேர்தலில் தோல்வி கண்ட மாவை சேனாதிராஜா இந்த விடயத்தில் ஒருவித மௌனத்தைக் கடைபிடிக்கின்றார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு அந்த ஆசனத்தை வழங்க வேண்டுமென்று யாழ் மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஏற்கனவே இரு தடவைகள் தேர்தலில் தோல்வியுற்ற சந்தர்ப்பங்களில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றவர் மாவை சேனாதிராஜா.
அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் தேசியப் பட்டியல் நியமனம் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கிடைக்க வேண்டுமென்று அங்கிருந்து பலமான குரல்கள் ஒலித்தன.
தேசியப் பட்டியல் நியமனத்தில்`வீட்டுக்குள்` நிலவிய குழப்பங்களுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தமிழ் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற சம்பந்தர் ஐயாவின் எண்ணத்தில் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான தவராசா கலையரசனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலர் கி.துரைராஜசிங்கம் இந்நியமனத்த ஞாயிற்றுகிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நியமனத்தில் தமிழரசு கட்சி தன்னிச்சையாகவே நடந்து கொண்டதாக வழமைபோல் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த முடிவு மீளாய்வு செய்யப்பட்டு பங்காளிக் கட்சிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு மாவை சேனாதிராஜாவுக்கு அந்த இடம் வழங்கப்பட வேண்டும் என்கிறார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.கே.சிவஞானம். தமிழரசுக் கட்சிக்குள் `மழைவிட்டு தூவானம் விடாத` கதையாக உள்ளது
நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூ வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார்.
தமிழ் காங்கிரஸ்:
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸுக்கு எதிர்ப்பாராத வகையில் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது.
அக்கட்சி இதை எதிர்ப்பார்த்திருந்தால் தேர்தலுக்கு முன்னர் பட்டியலை அறிவித்திருக்கும்.
செல்வராஜா கஜேந்திரனைப் பொறுத்தவரை அன்று முதல் இன்று வரை கட்சியின் செயல்பாடுகளுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு தோள் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கட்சியின் உயர்மட்டம் கூடி அதிகாரபூர்வமாக செல்வராஜ கஜேந்திரனை நியமிக்க முடிவு செயுள்ளது.
ஜே.வி.பி:
கடந்த தேர்தலில் இரண்டு ஆசனத்தைப் பெற்றிருந்த ஜே.வி.பிக்கு இம்முறை ஒரு ஆசனமே கிடைத்துள்ளது. அதை அவர்கள் பட்டியலின் முதலிடத்திலுள்ள விமல் ரத்நாயக்கவுக்கு அளிப்பார்களா? அல்லது தமது வழமையான கொள்கையிலிருந்து மாறுபடுவார்களா ? என்பதை பொறுத்திருந்து காண வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன:
தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே தாமரை மொட்டுக் கட்சி பட்டியலை அளித்தது. தேர்தலுக்கு முன் சமர்ப்பித்த பட்டியலிருந்த 29 பேரில் 17 பேரை தெரிவு செய்துள்ளது. பேராசிரியர்கள் ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ விதாரன, ரஞ்சித் பண்டார, சரித்த ஹேரத், மருத்துவ நிபுணர் சீத்தா அரம்பேபொல மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் உள்ளனர்.
சிறுபான்மை சமூகங்களுக்கு இடமளிக்கும் வகையில் வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முகமது பலீல் மர்ஜான், முகமது முசாம்பில் (விமல் வீரவன்ச கட்சி) ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான பட்டியலில் இ.தொ.கா சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரையின் பெயர் இடம்பெற்றிருந்த போதிலும் இறுதிப் பட்டியலில் அவரது பெயரைக் காணவில்லை. தற்போதைய நிலையில் மஹிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இ.தொ.கா தலைமை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இ.தொ.கா இப்போது மஹிந்த ராஜபக்சவை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.
தேர்தலில் தோல்வி கண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ராஜபக்சக்களின் ஆளுமை காரணமாக தேசியப் பட்டியல் ஆசனத்தை இம்முறை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நாட்டு நலனுக்கு பல்துறை வல்லுநர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தேசியப் பட்டியல் முறையை இப்போது தாமரை மொட்டுக் கட்சி செயலில் முன்னெடுத்துள்ளதாகவே தோன்றுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி:
தேசியப் பட்டியில் உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் கட்சியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, மாயா திஸநாயக்க, ஹரின் பெர்ணாண்டோ, இம்தியாஸ் பாகிர் மாக்கார், எரான் விக்ரமரட்ண மற்றும் தயானி கமகே ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், ஏனையக் கட்சிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் 10ஆம் திகதி பெயர்கள் அறிவிக்கப்படும் என்கிறார் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச.
தேர்தலுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் சிறுபான்மை கட்சிகளான மு.கா, ரிஷாத் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தலா மூவரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் கட்சி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமை (8.8.20) ஐ.ம.ச தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கிய சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே உறுதியளித்தப்படி தங்களுக்குத் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படாவிட்டால் தங்கள் கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக இயங்குவார்கள் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றிக்கு இந்த மூன்று கட்சிகளில் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் நிலையில் அவர்களுக்கும் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்பட வேண்டியது அக்கட்சியின் தார்மீகப் பொறுப்பாகும்.
மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுப்பான்மையினர் உள்ள நிலையில், அதே வீதத்தில் தேசியப் பட்டியலும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனும் அழுத்தம் வலுத்து வருகிறது. தேர்தலுக்கு பின்னர் சஜித் பிரேமதாச எதிர்கொள்ளும் நேரடியான முதல் சவால் இது.
ஐக்கிய தேசியக் கட்சி:
நாடாளுமன்றத்தில் மாவட்ட ரீதியாக பிரதிநிதித்துவம் இல்லாத போதிலும் தேசியப் பட்டியலில் கிடைத்த ஒரு ஆசனம் மூலம் நாடாளுமன்றத்தில் இடம் பிடித்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த ஒரு இடத்தை குறிவைத்துள்ளனர்.
ஐ.தே.கட்சியின் தேர்தல் அறிக்கையில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியல் இம்முறை இடமில்லை என்று கூறியதை ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றுவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அபே ஜன பல பக்ஷய:
எந்த மாவட்டத்திலும் வெற்றி பெறாத கடும்போக்கு பௌத்த குருமார்களைக் கொண்ட இந்தக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது நாடு முழுவதிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆசனத்தைக் கைப்பற்ற கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் அதுரிலிய ரத்ன தேரருக்கும் இடையே நீயா…நானா? என பலப்பரீட்சை எழுந்துள்ள நிலையில் அக்கட்சியில் செயலர் விமலசார தேரர் கட்சியில் கலந்துரையாடாமல் தனது பெயரை முன்மொழிந்துள்ளார். இதையடுத்து பிக்குகளுக்கிடையேயான பதவிச் சண்டை வலுத்து வருகிறது.