சிவா பரமேஸ்வரன்
இலங்கை நாடாளுமன்றத்துக்கு இம்முறை தெரிவான 225 உறுப்பினர்களில் 48 பேர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 28 பேர் தமிழர்கள் 20 பேர் முஸ்லிம்கள்.
தமிழர்களில் 25 பேர் நேரடியாகவும் ஏனைய மூன்று பேர் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் 8 பேர் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை 16 பேர் நேரடியாகவும் நான்கு பேர் தேசியப் பட்டியல் வழியாகவும் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்கின்றனர். இவர்களில் ஐவர் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள்.
பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (மரம்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (மயில்) ஆகியவை ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி)யில் பங்காளிகளாகப் போட்டியிட்டாலும் தேசியப் பட்டியலில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதன் காரணமாகக் கடந்த நாடாளுமன்றத்துடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களுக்கு இரு ஆசனங்கள் குறைந்துள்ள அதேவேளைத் தமிழர் தரப்பின் 28 உறுப்பினர்களில் மாற்றமில்லை.
(2004க்கு பின் நாடாளுமன்றத்தில் சைக்கிள்)
சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்த வரை 2015 தேர்தலுடன் ஒப்பிடும் போது தமிழ் முற்போக்குக் கூட்டணி (ஏணி) இம்முறையும் தமது ஆறு ஆசனங்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மற்றொரு கட்சியான இ.தொ.கா தமது இரண்டு இடங்களை மீண்டும் பெற்றுள்ளது. .
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்த வரை ஈ.பி.டி.பி யின் ஆசனங்கள் இரண்டாக உயர்ந்துள்ள அதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் 10ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழ் காங்கிரஸ் (சைக்கிள்), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (மீன்), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (படகு) ஆகிய கட்சிகளின் பலமான போட்டியே கூட்டமைப்பின் ஆசனங்களைக் குறைத்துள்ளது.
மயில் மற்றும் மரம் கட்சிகள் கடந்த முறையை விட இம்முறை தலா ஒரு இடத்தைக் குறைவாகப் பெற்றுள்ளன.
கட்சி | 2015 | 2020 | கட்சி | 2015 | 2020 |
வீடு | 16 | 10 | படகு | — | 01 |
ஏணி | 06 | 06 | சேவல் | 02 | 02 |
வீணை | 01 | 02 | மரம் | 07 | 04+01 |
சைக்கிள் | — | 02 | மயில் | 05 | 02+01+01 |
மீன் | — | 01 | குதிரை | — | 01 |
சிறுபான்மைக் கட்சிகள் இவ்வாறு ஆசனங்களைப் பெற்றுள்ள அதேவேளை தேசியக் கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ச.வியாளேந்திரன் (மட்டக்களப்பு), காதர் மஸ்தான் (வன்னி), சுரேன் ராகவன் (தேசியப் பட்டியல்) என மூவர் தெரிவாகியுள்ளனர். அக்கட்சியில் அமைச்சர் அலி சப்ரி உட்பட மூன்று முஸ்லிம்களுக்கும் தேசியப் பட்டியல் இடமளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் அடையாளம் அங்கஜன்:
1989ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு அதாவது 31 வருடங்களின் பின்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் ஒரேயொரு உறுப்பினர் நேரடியாகத் தெரிவாகியுள்ளார். யாழ் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் மூலமே அந்த ஆசனம் கிடைத்துள்ளது.
(கைச்சின்னத்தின் அடையாளம் அங்கஜன் இராமநாதன்)
சிறுபான்மை இனத்தைச் சார்ந்த அங்கஜன் இராமநாதன் பிரதான தேசியக் கட்சி ஒன்றின் அடையாளமாக இம்முறை நாடாளுமன்றத்தில் இருக்கிறார். 1989 தேர்தலுக்குப் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவதைத் தவிர்த்து கூட்டணியாக கதிரை மற்றும் வெற்றிலைச் சின்னங்களில் களமிறங்கியது. இம்முறை யாழ்ப்பாணம், நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் கைச் சின்னத்துக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமே ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது.
தொலைபேசிக் கட்சியில் சுரேஷ் வடிவேல் (பதுளை), அப்துல் ஹாலிம் (கண்டி), முஜிபுர் ரஹ்மான் (கொழும்பு), எஸ்.எம்.மரிக்கார் (கொழும்பு) மற்றும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் (தேசியப் பட்டியல்) என ஐவருமே நேரடி சிறுபான்மை இனப் பிரதிநிதிகள். ஏனைய சிறுபான்மை இனப் பிரதிநிதிகள் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்
மயில் கட்சி இத்தேர்தலில் வன்னி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தொலைபேசி மூலம் இரு ஆசனங்களைப் பெற்றுள்ள அதேவேளை, அம்பாறையில் தனித்துப் போட்டியிட்டும் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
அதேவேளை பிரதான முஸ்லிம் கட்சிகள் இணைந்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாக புத்தளத்தில் போட்டியிட்டன. அதிலும் மயில் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவானார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தொலைபேசியில் போட்டிட்டு 4 இடங்களைப் பெற்றுள்ள அதேவேளை மட்டக்களப்பில் தனித்துப் போட்டியிட்டு ஐந்தாவது ஆசனத்தைப் பெற்றது.
தேசியக் காங்கிரஸ் முதல் முறையாக அம்பாறை மாவட்டத்தில் தனித்து குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு அதன் தலைவர் ஏ.எல்.அதாவுல்லாஹ் இம்முறை தனித்துவ அடையாளத்துடன் நாடாளுமன்றம் செல்கிறார்.
(குதிரையில் நாடாளுமன்றம் செல்லும் அதாவுல்லாஹ்)
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் பிரதான முஸ்லிம் பங்காளிக் கட்சியாக தேசியக் காங்கிரஸ் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட அக்கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் குதிரையில் அவர் தனித்துப் பயணிக்க வேண்டியதாயிற்று.
புது முகங்கள்:
இம்முறை தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் 53 பேர் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார்கள். இவர்களில் யாழ் மாவட்டத்திலிருந்து சி.வி.விக்னேஸ்வரன், வன்னியிலிருந்து கு.திலீபன், மட்டக்களப்பிலிருந்து சாணக்கிய ராகுல ராஜபுத்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மலையகத்திலிருந்து ஜீவன் தொண்டமான், மருதுபாண்டி ராமேஸ்வரன், மா.உதயகுமார் ஆகியோர் நேரடித் தெரிவு புது முகங்களாகும்.
தேசியப் பட்டியல் வழியாக சுரேன் ராகவன், தவராசா கலையரசன் ஆகியோரும் தமிழர் தரப்பு புது முகங்களாக நாடாளுமன்றத்தில் பிரவேசிக்கின்றனர்.
வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மீண்டும் நுழைகின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஹாபீஸ் நசீர் (மட்டக்களப்பு) அலி சப்ரி ரஹீம் (புத்தளம்), எம்.முஷரஃப் (அம்பாறை) ஆகியோருடன் தேசியப் பட்டியலில் அமைச்சர் அலி சப்ரி, மொஹம்ட் பலீல் மர்ஜான் புது முகங்களாக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்கள்.
மூன்று முன்னாள் முதலமைச்சர்கள்:
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரை முதலமைச்சர்களாக இருந்த நால்வரில் மூவர் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
வட மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் அவரது கட்சியான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் நாடாளுமன்றம் செல்கிறார்.
(சி.வி.வி–ஹாபீஸ் நசீர்)
அதேபோல் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவாகியுள்ளார். இதே மாகாணத்தின் மற்றொரு முன்னாள் முதலமைச்சரான ஹாபீஸ் நசீர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார். இந்த இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவானவர்கள்.
கிழக்கு மாகாணத்தின் மற்றுமோர் முன்னாள் முதலமைச்சரான நஜீப் ஏ மஜீத் திருகோணமலை மாவட்டத்தில் குதிரைச் சின்னத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாலும் அது நிராகரிக்கப்பட்டது.
கட்சிகள் அதிகம் ஆனால் பலமில்லை:
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மைக் கட்சிகளை விட சிறுபான்மைக் கட்சிகள் இம்முறை கூடுதலாக உள்ளன.
பெரும்பான்மைக் கட்சிகள் | ஆசனங்கள் | சிறுபான்மைக் கட்சிகள் | ஆசனங்கள் |
பொதுஜன பெரமுன | 145 | தமிழரசுக் கட்சி | 10 |
ஐக்கிய மக்கள் சக்தி | 54 | ஈ.பி.டி.பி | 02 |
தேசிய மக்கள் சக்தி | 03 | தமிழ் காங்கிரஸ் | 02 |
சுதந்திரக் கட்சி | 01 | த. ம. வி. புலிகள் | 01 |
ஐக்கிய தேசியக் கட்சி | 01 | த.மக்கள்.தே. கூட்டணி | 01 |
அபே ஜன பலக் கட்சி | 01 | முஸ்லிம் காங்கிரஸ் | 01 |
அ.இ.ம. காங்கிரஸ் | 01 | ||
மு. தே. கூட்டமைப்பு | 01 | ||
தேசிய காங்கிரஸ் | 01 |
தேர்தல் முடிவுகளின்படி நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள 15 கட்சிகளில் பெரும்பான்மைக் கட்சிகளைச் சிறுபான்மைக் கட்சிகள் மிஞ்சியுள்ளன.
நாடாளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகள் எண்ணிக்கையில் அடிப்படையில் கூடுதலாக இருந்தாலும் அவர்களால் யதார்த்த ரீதியில் மொட்டுக் கட்சியை எதிர்த்து நின்று தமது மக்களுக்குத் தேவையானவற்றை எந்த அளவுக்குப் பெற்றுக் கொடுக்கும் முடியும் என்பதில் கேள்விகள் உள்ளன.