பொதுவெளியிலிருந்து சிலரை பெற்றுக்கொள்ளவே இயலாதா?
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார்
பாராளுமன்றப் பதவிகள் என்பவை உலகின் அனைத்து நாடுகளிலும் பளிச்சென்று தெரிகின்ற ஒரு அடையாளமாகவே திகழ்கின்றன. அந்தப் பதவிகள் ஆளும் கட்சி சார்ந்தவையாக இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே பண பலமும் அதிகார பலமும் இணைந்ததாக அந்த பதவியில் உள்ளவருக்கு வலுச்சேர்க்கும். எதிர்க்கட்சி சார்ந்தவராக உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சலுகைகள் மற்றும் ஊதியம், மேலதிகப் படிகள் அனைத்தும் கிட்டும் வாய்ப்புக்கள் சட்டரீதியாகவே கிடைக்கின்றன.
இலங்கை அரசியலில், இவ்வாறான பாராளுமன்றப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் அமர்ந்திருப்பவர்களில் ஒரு சிலர்தான் தங்கள் பதவிகளால் மக்களைக் கவர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். எனினும் தமிழ்நாட்டில் அண்ணாத்துரையையும் காமராஜரையும் கக்கனையும் போன்றவர் அரசியல் தலைவர்கள் எவரும் இலங்கைத் தமிழர் அரசியலில் இருந்ததாக எவருமே மனந்திறந்து கற மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு சொல்வதானால் நமக்கு ஓரளவு தெரிந்த வகையில் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், உடுவில் தர்மலிங்கம், பருத்தித்துறை துரைரத்தினம் . உடுப்பிட்டி சிவசிதம்பரம் ஆகிய நால்வரைக் குறிப்பிடலாம். அவர்களின் அரசியல் வாழ்க்கை என்பது தங்கள் கடமைகளிலிருந்து விலகிச் செல்லாத ஒன்றாக இருந்தது ஒரு காலத்தில் இலங்கைத் தமிழர் அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக போட்டியிடுகின்றவர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படு கின்றவர்களோ அதிகளவில் ‘அப்புக்காத்து’ என்று அன்பாக அழைக்கப்பெற்ற சட்டத்தரணிகளாகவே காணப்பட்டார்கள். இவ்வாறு சட்டத்தரணிகள் தமிழர் அரசியலில் முன்வரிசையில் காணப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன.
முதலாவது காரணம் சட்டத்தரணிகளில் பலர் செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். புகழ்பெற்ற கல்லூரிகளில் கல்வி கற்று பல்கலைக் கழகங்களுக்குச் சென்று ஆங்கில அறிவோடு சட்டத்தரணிகளாக வெளியேறியவர்கள். தொடர்ந்து அவர்கள் நீதி மன்றங்களில் தங்கள் தொழில்களை ஆரம்பிக்கின்றபோது, அவர்களின் வாழ்க்கையில் எவ்விதமாக சிரமங்களும் இருக்கவில்லை.. அவர்களில் பலர் செல்வந்தர்களாக இருந்ததால் செல்வந்தர்களுடைய பிள்ளைகளையே திருமணம் செய்து கொண்டார்கள். இதனால் அவர்களது பண பலம் மற்றும் குடும்ப பலம் என்பன மேலும் அதிகரிக்கத் தொடங்கின.
இவ்வாறாகத் தான் சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த தமிழ் அரசியல்வாதிகளின் பிரசன்னம் என்பது இன்று ரவிராஜ் , சுமந்திரன் போன்ற அரசியவாதிகள் வரையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆரம்பத்தில் இப்போது இருக்கின்ற தொழில் நுட்ப வசதிகள், வானொலி தொடலைக்காட்சி, இணையத் தளங்கள், முகநூல் போன்றவை இருக்கவில்லை. எனவே வெளியுலகத்தையும், அப்போது பல திறமைகளைக் கொண்டிருந்தும் குடும்பத்தின் பொருதார வளம் காரணமாக வெளிச்சத்திற்கு வர முடியாத பல இளைஞர்கள் மறைக்கப்பட்டார்கள்.
ஆனால் சட்டத்தரணிகளான பலர் அரசியலுக்கு வருவதற்கு பல காரணங்கள் அவர்களுக்கு சாதகமாக இருந்தன.
முதலாவது, அவர்கள் படித்தவர்கள், பிழை விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு. இரண்டாவது, அவர்கள் நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் என்ற தகைமை மூன்றாவது அவர்களுக்கு சட்டம் தெரியும் எனவே மக்களுக்காக பேசுவார்கள் என்ற விசுவாசம் நான்காவது, வழக்கறிஞர்களாக தங்கள் ‘கட்சி’க்காரர்களை காப்பாற்றுவார்கள் என்பது போல அவர்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்காகவும் உழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு. ஐந்தாவது காரணம், நீதி மன்றங்களில் அவர்கள் தினமும் தோன்றுவதால் அவர்களின் முகங்கள் பொது மக்களுக்கு நன்கு அறியப்பட்டவையாக இருந்தன இவ்வாறு, மேலே சொல்லப்பட்டட ஐந்து காரணங்களாலும், மேலும் பல காரணங்களாலும் சட்டத்தரணிகள் எமது அரசியல் தலைவர்களாக வளர்ச்சியடைந்து எங்கள் ‘தலைவர்கள்’ என்று போற்றப்பட்டார்கள் இவ்வாறு நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக , வருடங்கள் தசாப்த்தங்களாக நீண்டு சென்றும், தமிழ் மக்கள் எதிர் கொண்ட பல பிரச்சனைகள் தீர்க்கப்படாதவைகளாக தொடர்ந்து மக்களுக்கு துன்பங்களையே தந்து கொண்டிருந்தன. ஆனால் மறுபக்கத்தில் அரசியல்வாதிகள் என்ற ஒரே குழுமம், மற்றும் நடுத்தர வகுப்பிலும் பார்க்க சற்று மேலான பணம் படைத்தவர்கள் என்ற வகையில் தமிழ் சிங்கள் அரசியல்வாதிகள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இவ்வாறான நட்பும் உறவும் இணைந்து அவர்கள் இனம் சார்ந்து சிந்திக்காமல் தங்கள் குழுமம் மற்றும் நட்பு வட்டாரம் என்ற வட்டத்திற்குள் தங்கள் அரசியல் காய்களை நகர்த்திச் சென்றார்கள்.
இதற்கு மேலும் நல்ல உதாரணங்கள் உள்ளன. தென்னிலங்கையில் யு.என். பி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு எதிரா பேசி வந்த இடது சாரி அரசியல் வாதிகளுக்கு எமது மக்கள் தேர்ந்தெடுத்த அனுப்பி தமிழ்; அரசியல்வாதிகள் ஒரு போதும் தங்கள் ஆதரைவை வழங்கிவில்லை.
தாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து அவர்களுக்காகவும் அவர்களது அடிப்படைப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, அந்த இன வாத அரசாங்கங்களை காப்பாற்றும் வகையில் தங்கள் வாக்குகளைப் பாராளுமன்றத்தில் பயன்படுத்தினார்கள். இவ்வாறான ஒரு விடயம் தான் கடந்த மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது அரங்கேறியது. இந்த சந்தர்ப்பத்தை எமது தமிழ் மக்களுக்குரிய சில விடயங்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ரணில் விக்கிரமசிங்காவை காப்பாற்றும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தினார்கள். இதற்கு சட்டத்தரணியான பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மூல காரணமாக இருந்தார். அதற்கு மேலாக இந்த செயற்பாட்டிற்கு இன்னொரு காரணம், சுமந்திரன் அவர்கள் யுஎன்பி யின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து, ரணில் விக்கிரமசிங்காவால் சம்பந்தர் ஐயாவின் வரவேற்போடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டவர்.
இவ்வாறாக கடந்து சென்ற ஈழத் தமிழர்களின் அரசியல் பாதை என்பது திசை மாறிச் செல்லுகின்றது என்பதை அவதானித்த, தமிழ் இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். பாராளுமன்றத்திற்கு நாம் அனுப்பி வைக்கின்ற எமது தலைவர்கள், எமக்காக ஒன்றும் செய்யாமல் தங்கள் நலன்களையும் தங்கள் குடும்ப நலன்களையும் மட்டுமே கவனிக்கின்றார்கள் என்பதைக் கண்ட எமது இளைஞர்கள் பாராளுமன்றம் தவிர்ப்பு என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு அதற்கு மேலாக இளைஞர்களை ஒன்று திரட்டி போராட வேண்டும் என்ற முடிவினை எடுத்தார்கள்.
அவ்வாறாக எடுக்கப்பட்ட அந்த முடிவுகள் ஆரம்பத்தில் பல அடக்கு முறைகள் உயிரிழப்புக்கள், தலைமறைவு, காட்டு வாழ்க்கை என்ற கஸ்டங்களைக் கொடுத்தாலும் விடாப்பிடியாக நின்று பல உள் முரண்பாடுகளுக்கு மத்தியில் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடுவது என்ற தீர்க்கமான முடிவுடன் ஒன்றுக்கு மேற்பட்ட விடுதலை இயக்கங்கள் தோன்றி தங்களை வளர்த்துக் கொண்டன. இவ்வாறான விடுதலை இயக்கங்களின் தோற்றம் என்பது பாராளுமன்ற அரசியல் பதவிகள் மூலம் தங்கள் விருப்பத்தின்படி அரசியல் செய்து கொண்டிருந்தவர்கள் ஒரு பேரிடியாக அமைந்தது. அதன் விளைவு அவர்கள் விடுதலை இயக்கங்களின் இருப்பை விரும்பாமல் இருந்தமையாகும்.
நான், இந்த கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டுள்ள பல விடயங்கள் படிப்பவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்தவையாக இருப்பினும்,, இனிச் சொல்லப்போகின்ற விடயங்களுக்கு இந்த விபரங்கள் அவசியம் என்பதையும் தயவு செய்து கவனிக்கவும்.
இந்த கட்டுரை தொடர்ந்து விரிவாக செல்ல வேண்டுமானால் நிச்சயம் பல மணி நேரங்களையும் பக்கங்களையும் பறித்துவிடும் என்பதால் நான் இந்தக் கட்டுரை மூலம் சொல்ல வேண்டியவற்றைச் பகிந்து கொள்கின்றேன் வருகின்றேன் தொடர்ந்து.. இந்தக் கட்டுரையின் கதாநாயகர்கள் மண்ணின் மைந்தன் மாவை சேனாதிராஜா, வரதராஜப் பெருமாள், வண்ணை ஆனந்தன் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களே. . மாவை சேனாதிராஜா தற்போது வசதிகள் பல கொண்ட ஒரு அறியப்பட்ட அரசியல்வாதி. ஆனால் அவருடைய ஆரம்பமே நான் ஆரம்பத்தில் சில பந்திகளில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களின் வழித்தடங்களிலே தான் பதிந்தது என்று கூறலாம். தமிழ்த் தலைவர்கள் தங்கள் அரசியல் பயணத்திற்கு பலம் சேர்ப்பதற்காக தமிழர் கூட்டணி என்னும் அரசியல் இயக்கத்தில் இளைஞர் அணியை உருவாக்கினார்கள். அதன் முக்கிய உறுப்பினர்களாக வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, வரதராஜப் பெருமாள் உட்பட பலர் நியமிக்கப்பட்டார்கள் அல்லது தாங்களாகவே இணைந்து கொண்டார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியான வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம், தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தனிநாடு ஒன்றே தீர்வாகும் என்ற முடிவெடுத்த பின்னர், அதை அடுத்து வந்த தேர்தல்களிலும் கொள்கைப் பிரகடனத்தில் முக்கிய விடயமாக எடுத்துக்கொண்டார்கள். அப்போது நடத்தப்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் தனிநாட்டுக் கோரிக்கையே முக்கிய பேசுபொருளாக இருந்தது. தேர்தல் கூட்டங்களில் ‘நட்சத்திரப் பேச்சாளர்களாக’ நாம் முன்னே குறிப்பிட்ட வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் உட்பட பல இளைஞர்கள் திகழ்ந்தார்கள். வடக்கிலும் கிழக்கிலும் இவர்கள் இல்லாத அரசியல் கூட்டங்களோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது இவர்களுக்கு. ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு வண்ணை ஆனந்தனை அடுத்த கூட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வாகனம் ஒன்று தயாராக இருக்கும். மாவை சேனாதிராவிற்கும் இதே நிலைதான். ஒரே நாளில் மூன்று கூட்டங்களில் பீரங்கிப் பிரச்சாரம் செய்யும் ‘கதாநாயகர்கள்’ போன்று இந்தப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டார்கள்.
அப்போதைய தேர்தல் நாட்களில் தான் கவிஞர் காசி ஆனந்தனால் எழுதப்பட்ட கவிதை வரிகள் தான்”ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை” என்பது. அதை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களே தனது உதடுகளால் மேடைகளில் உரத்துப் பேசியதை கேட்டதாக எனது மூத்தவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். இந்த வரிகள் தமிழர் விடுதலைக் கட்டணியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போது எழுதப்பட்டதாகும். தேர்தல்கள் முடிந்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்று பல ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டாலும் அரசாங்கம் தமிழ் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கேட்கின்ற விடங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெரும்பான்மையினருக்கு ஆதரவான சட்டங்கள் பல பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு பின்னர் அமுல் செய்யும் அளவிற்கு அரசியல் பயணித்துக் கொண்டிருந்தது. படித்த தமிழ் இளைஞர்கள் பல்கலைக் கழகம் செல்வதிலும், அரச உத்தியோகம் பெற்றுக் கொள்வதிலும் ‘தரப்படுத்தல்’ என்னும் விகிதாசார முறை கடைப்பிடிக்கப்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். தமிழ்ப் பெற்றோர்கள் களங்கி நின்றார்கள்.
இவ்வாறான கட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அரசாங்க அமைச்சர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு உத்தியோகபூர்வமான பயணங்களை மேற்கொண்டு வரும்போது, கறுப்புக் கொடி பிடித்தல், கோசங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்வது போன்ற அரச எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் கொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும் பின்னர் சட்டத்தரணிகளான எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்காக வாதாடி விடுவிப்பதும் பின்னர் மீண்டும் சிறை செல்வதுமாக இருந்தார்கள்.
இவ்வாறாக அடிக்கடி சிறைசென்று வந்த மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் ஆகியோரில் வண்ணை ஆனந்தன் வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகிவிட, மாவை சேனாதிராஜா தொடர்ச்சியாக தமிழ் மண்ணில் தங்கியிருந்து தொடர்ச்சியாக அரசியலில் பங்கெடுத்து வந்தார். இவ்வாறான போராட்டகளுக்கிடையில் எண்பதுகளின் ஆரம்பத்தில் தோற்றம் பெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் விளைவால் அவற்றில் முழுமையான பங்களிப்பு இல்லாத வகையிலும் மாவை சேனாதிராஜா அவர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இதன்காரணமாக அவரது தலைவர்களின் ஆலோசனைப்படி மாவை சேனாதிராஜா இந்தியாவிற்குச் சென்று தஞ்சமடைந்து கொள்ள காசி ஆனந்தன் போன்றவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கத்தோடு தொடர்புகளை வைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். வரதராஜப் பெருமாளோ, இந்தியச் சகதிக்குள் அகப்பட்டுக் கொண்டு இன்னும் சகதிக்குள் இருந்த வண்ணம் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்.
தொடர்ந்து அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலைக்குப் பின்னர் வெற்றிடமாக வந்த எம்பிப் பதவி மாவைக்கு கிட்டியது. அன்று தொடங்கிய அவரது அதிஸ்ட அரசியல் பயணம் இன்றும் தொடர்கின்றது, அவருக்கே சாதகமாக.
காசி ஆனந்தன் தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டார். போராட்ட காலத்தின் இடையில், வன்னியில் தலைவர் பிரபாகரன் அவர்களின் அருகிலேயே இருந்து இராணுவச் சீருடையுடன் போர்க்கால இலக்கியங்களைப் படைத்தவர் தமிழ்நாட்டுக்கு ஒரு தடவை தலைவராலேயே அனுப்பப்பட்டார். ஆனால் அங்கேயே அவர் த்ஙகிவிட, சில ஆண்டுகளுக்குப் பின்னரே தலைவர் பிரபாகரன் அவர்கள் அவரை மீண்டும் வன்னிக்கு வரும்படி அழைப்பு விடுக்க அவர் திரும்பிச் செல்லவே இல்லை. “எனது பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நான் இங்கு தங்கியிருக்கவே விரும்புகின்றேன். மன்னியுங்கள்” என்ற செய்தியை வன்னிக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தோடு அங்கு இருந்து தற்போது அவரது புதல்வி ஒருவரும் மாவை சேனாதிராஜாவின் புதல் வி ஒருவரும் தற்போது தமிழ்நாட்டில் வைத்தியர்களாக பணியாற்றுகின்றார்கள்.
சரி, இந்த விடயங்கள் ஒருபக்கம் இருக்க, சில நாட்களுக்கு முன்னர் மாவை சேனாதிராஜா அவர்கள்; பற்றி இங்கு யாழ்ப்பாணத்தில் வெளியான ஒரு செய்தியை நான் வாசிக்க நேர்ந்த விடயத்தையும் இப்போது பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்தச் செய்தியை நான் வாசித்து முடிக்கவும் அவரைப் பற்றி யாழ்ப்பாணத்தில் கட்சி மட்டத்தில் பேசப்பட்ட விடயம் ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. ஒரு தடவை யாழ்ப்பாணம் நகரத்தில் அமைந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் நிறைவுற்ற பின்னர் தன்னோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இரண்டு அங்ககத்தவர்களிடம்’ மாவை’ கூறினாராம் “தம்பியவை, நான் எம்பியா பல ஆண்டுகள் இருந்திட்டன். இனி ஒரு தடவை என்றாலும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்திட்டுப் போக விரும்புறன்” என்று.
அன்றைய நாட்களில்தான் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா, தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் காரணமாக விலகியிருந்தார். எனவே அந்த முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள அவருக்கு ‘ஆசை’ வந்ததிற்கு காரணம் இருக்கின்றது. ஆனால் தற்போது வெளியான அந்தச் செய்தியைப் படித்ததும் நான் எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி “இந்தாளுக்கு ஒரே நேரத்தில எத்தனை ஆசை மனதில உதிக்குது” என்று. தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் தன்னோடு ‘பிடித்து’ வைத்திருக்கும் இவருக்கு இன்னொரு தலைவர் பதவியாசையா? அந்தச் செயதி பின்வருமாறு இருந்தது:-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைந்துக் கொள்வதற்காக இத்தகைய புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. குறித்த அமைப்பில், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின்சூக்கா ஆகியோரையும் உள்ளடக்க இருப்பதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாவை சேனாதிராஜா தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த விடயம் தொடர்பாக தற்போதைய நிலைமையில் எந்தவிளக்கத்தையும் வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.
இறுதியாக சில விடயங்களை இங்கு பதிவு செய்துவிட்டு கட்டுரையை நிறைவு செய்கின்றேன் தமிழ் மக்கள் இழந்தவை பல. அவற்றை மீளவும் பெற்றுக்கொள்வது என்பது அரிதிலும் அரிது. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக போராளிகள், இலட்சக் கணக்கான பொதுமக்கள். அங்கங்களை இழந்த யுவதிகள், மற்றும் இளைஞர்கள், கணவர்மார்களை இழந்த இளம் விதவைத் தாய்மார்கள். காணாமற்போனவர்களை தேடிய வண்ணம் ஆண்டுகள் பலவாய் வீதிகளில் நின்று தவிக்கும் ஆண் பெண் உறவுகள்.
இவ்வறையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டும், பாராளுமன்றப் பதவிகைள பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி பெற்றுக்கொண்டு, ஆண்டுகள் பல மைத்திரி- ரணில் ஆட்சியில் மௌனமாக இருந்து அனுபவித்த ‘சொர்க்கங்கள்’ உல்லாசங்கள். இவையெல்லாம் மக்கள் அறியாதவை என்று எண்ணிக்கொண்டு தன்னுடைய ஆசைகளை மட்டும் ஒவ்வொன்றாய் பெற்றுவிடத் தவிக்கும் மாவை சேனாதிராஜா போன்றவர்ளை மீண்டும் மீண்டும் நம்பி ஏமாந்து விடாமல், எமது ஈழத் தமிழர்களின் ஆழக் கடலில் முத்துகள் எடுப்பது போன்று, பொதுவெளியில் உள்ள அறிவும் ஆற்றலும் கொண்ட புதியவர்களை தமிழ் மக்களை வழிநடத்தக் கூடிய பதவிகளில் அமர்த்த வேண்டும் என்பதே இப்போது எமக்குள்ள மிகவும் அவசியமான பொறுப்புகள் ஆகும்..