மன்னார் நிருபர்
(30-12-2020)
அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகரை தேடும் பணி 2 ஆவது நாளகவும் இன்று புதன் கிழமை முன்னெடுக்கப்பட்டது.
-எனினும் இதுவரை குறித்த கிராம அலுவலகர் கண்டு பிடிக்கப்படவில்லை. காணாமல் போன கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.
-நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
-பின்னர் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கிராம அலுவலகர்கள் ஆற்றில் குளித்த போது ஒரு கிராம அலுவலகர் காணாமல் போனதோடு, ஏனைய கிராம அலுவலகர்கள் மீட்கப்பட்டனர்.
காணாமல் போன கிராம சேவையாளர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதோடு அவரை தேடும் பணி 2 ஆவது நாளாக இன்று புதன் கிழமை காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடற்டை மற்றும் வங்காலை,அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆற்று பகுதியில் குளிக்கச் சென்று பலர் உயிரிழந்துள்ள நிலையில் அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேரூம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையிலே குறித்த அனார்த்தம் இடம் பெற்றுள்ளது. காணாமல் போன கிராம அலுவலகரை தேடும் பணி தொடர்கின்றது.