(மன்னார் நிருபர்)
(04-01-2021)
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(4) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர் போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் முன் வைத்து வருகின்றனர்.
-அவ்வாறான சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான செயல்பாட்டை இன்று வரை மேற்கொள்ளவில்லை என்பது தான் எனது கருத்தாக உள்ளது.
-அதே நேரத்தில் மிருசிவில் பகுதியில் பொது மக்களை கொலை செய்த இராணுவ வீரர் தற்போது ஆயுதங்களுடன் பிடிபட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பௌத்த மதகுவை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்கள் பொது மண்ணிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்துள்ளார்.
-அப்படியான ஒரு சூழ் நிலையில் இன்று சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. அவர்களுடைய உயிர்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருக்கின்றது.
அவ்வாறான சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது தமிழர்கள் இலங்கையில் இல்லாமல் அல்லது தமிழர்களுடைய உணர்வுகளை மதிக்காமல் தமிழர்களுடைய எந்த விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கூடாது என்கின்ற மன நிலையினையே ஜனாதிபதி கொண்டுள்ளதாக தெரிகின்றது.
-நாங்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தோம்.
-அவ்விடையம் தொடர்பாக நிலை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது அவரை சந்தித்து அவர் முன்னெடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாக கேட்க இருக்கின்றோம்.
-உண்மையில் இன்றைய சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது அவர்களின் குடும்பங்களை பொறுத்த வகையில் மிகவும் அவசியமான விடையமாக இருக்கின்றது.
-எனவே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.என தெரிவித்தார்.
-மேலும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,,,
-2021 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பிரதானமான விடையமாக நாங்கள் பார்க்கின்றோம்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
-அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை தமிழர் தரப்பாக ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதன் போது கட்சியில் இருந்த அனைவரும் குறித்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
-நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற அமர்வுகளின் பிற்பாடு இவ்விடையம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து அனைவரும் இணைந்து ஒரு செயல்பாட்டை ஒரு நிலையை ஐ.நாவிற்கு தெரியப்படுத்துவதே எங்களுடைய கருத்தாக உள்ளது.
எனினும் நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
குறிப்பாக இலங்கையின் ஆலோசனைப்படி அல்லது இலங்கையின் கோரிக்கையை முன் வைத்து இலங்கை அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளை அவர்கள் செய்வார்கள் என்று ஒரு சிந்தனையில் ஐ.நா செயல் படுமாக இருந்தால் அவ்விடையம் தமிழ் மக்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமையும். முழுமையான சர்வதேச பொறிமுறை என்பது மிகவும் அவசியமாக இருக்கின்றது.
அவ்வாறு இருந்தால் மாத்திரம் தான் ஐ.நாவின் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.எதிர் வரும் மார்ச் மாதம் இடம் பெற உள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் தமிழர்களுக்கு மிக முக்கியம்.தமிழ் தரப்பு ஒன்றாக சமர்ப்பிப்பதற்கு இனக்கம் காணப்பட்டுள்ளது. அதன் வரைவு மிக விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
-அது முழுமையான சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பது அனைவருடைய கருத்துமாக உள்ளது.என அவர் தெரிவித்தார்.மேலும் மாகாண சபை தேர்தல்,சகல திணைக்களம் மற்றும் அமைச்சுக்களின் இராணுவ அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாகவும் தனது கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.