மன்னார் நிருபர்
(4-01-2021)
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு இன்று (2021.01.04) முற்பகல் பிரதமர் மஹிந்த அவர்களின் தலைமையில் கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது.
மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்தை தொடர்ந்து சமய வழிபாடுகளில் ஈடுபட்ட கௌரவ பிரதமர் மங்கள விளக்கேற்றி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிகளை சுபநேரத்தில் ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு,03, கொள்ளுபிட்டி ஆர்.ஏ.டி. மெல் மாவத்தை, இல.101 என்ற இடத்தில் அமைந்துள்ள இப்பிரிவு பொதுமக்களின் வசதிக்காக நவீனமயப்படுத்தப்பட்டு இதற்கு முன்னர் காணப்பட்ட அதே இடத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான வார நாட்களில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.
பொதுமக்களின் கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் செயற்திறனான சேவையினூடாக திறம்பட தீர்த்து வைப்பதே பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் நோக்கமாகும்.
கடந்த காலத்தில் கௌரவ பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அவ்வாறான யோசனைகள், முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை உள்ளடக்கிய சுமார் 12000 கடிதங்களுக்கு பிரிவின் தலையீட்டுடன் பதிலளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, மேலதிக செயலாளர்களான சமிந்த குலரத்ன, ஹர்ஷ விஜேவர்தன, பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவிற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் நிசாந்த வீரசிங்க, அரச அதிகாரிகள், பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.