தமிழ் அரசியலில் காணப்படுகின்ற ஒற்றுமையின்மையே தமிழ் மக்களுக்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். கடந்த சில வருடங்களில் இது நன்கு வெளிப்பட்டுள்ளது. தமிழ் அரசியலைப் பொறுத்த வரை நான் யாருக்கும் இரண்டாமவன் அல்ல என்ற மனப்பான்மையே உள்ளது.
இந்த அகங்காரம் இப்போது அரசியல் செயற்பாடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டது. தெற்கில் உள்ள தீர்மானிக்கும் சக்திகளுடன் இணைந்து செயலாற்ற விரும்பாமை அவர்களது நடவடிக்கைகளில் இருந்தே தெரிகிறது.இந்த மனப்பான்மை மாற வேண்டும். உள்ளே இருப்பவர்களைப் பார்த்தே தமிழர்கள் பயப்பட வேண்டியுள்ளது. ஐந்து தமிழர்களை எடுத்துக் கொண்டால் இரண்டு மணி நேரத்தில் அவர்கள் ஐவரும் ஐந்து அரசியல் கட்சிகளை உருவாக்கி விடுவார்கள். எமது விடயங்களின் விதி இவ்வாறுதான் உள்ளது.
மேலும், வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காத அதேசமயம், உள்வீட்டு போராட்டங்களில் கூட்டமைப்பு சிக்கித் தவிக்கிறது. தற்போதைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்காமல் தொடர்ந்தும் உள்விவகாரங்களில் சிக்கிக் கொண்டிருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெகுவிரைவிலேயே சரித்திரத்தில் மட்டுமே இடம்பெறும் நிலையை எட்டக் கூடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் நான் இது பற்றி பல முறை கலந்துரையாடியுள்ளேன். எனினும் வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கக் கூடிய எந்தவொரு உண்மையான நிகழ்ச்சி நிரலும் அவர்களிடம் இல்லை என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது’ என்று வடமாகாண முன்னாள் ஆளுநரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் கூறினார்.
கலாநிதி சுரேன் ராகவன் கொழும்புப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேற்படி நேர்காணலில் பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் வடமாகாண ஆளுநராக இருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு எந்த அளவு ஆதரவை வழங்கியிருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் நல்ல அனுபவசாலிகள். அனைத்தையும் எப்போதும் அரசியல் நோக்கத்தில் பார்ப்பதற்கு அவர்கள் பழக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து மிகவும் குறைந்த அளவு ஆதரவே எனக்குக் கிடைத்தது. நான் செய்த அனைத்தையும் அவர்கள் கவனித்துக் கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே நான் தோல்வியடைய வேண்டும் என்றே அவர்கள் விரும்பியிருந்தனர். நான் அப்போது புதியவன். அப்போதுதான் அரசியலில் கால் பதித்திருந்தேன். பிரச்சினைகளில் அரசியலை கலக்காமல் அவற்றை மக்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதே அப்போதைய எனது அணுகுமுறையாக இருந்தது.
வட மாகாணத்தில் 4 ஆயிரம் அரசாங்க வேலைவாய்ப்புகளை என்னால் பெற்றுத் தர முடிந்தது. 8 ஆயிரம் குடும்பங்களுக்கு காணிகளை வழங்க என்னால் முடிந்தது. அது மட்டுமன்றி மேலும் பல வேலைகளையும் செய்ய முடிந்தது. வடமாகாணத்தில் கல்வி, சமூக, பொருளாதார மற்றும் பெண்கள் நலன் தொடர்பாக எனது பங்களிப்பை வழங்கினேன். எனது சேவைகள் அனைத்தும் மக்கள் மனங்களில் நன்கு பதிவாகியுள்ளன. மேலும் சேவைகளைச் செய்ய எனக்கு நேரம் கிடைத்திருந்தால் நல்லது என நினைக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய முன்னாள் ஜனாதிபதிக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் நான் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. அது எனது பிழையல்ல.
அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறுகிய நோக்கமேயாகும். எனது அணுகுமுறை மக்களுடன் தொடர்புபட்டு செயற்படுவதாகும். ஆனால் இந்த அணுகுமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. கூட்டமைப்பின் தேசிய அரசியல் அணுகுமுறையைப் பற்றி நான் அறிவேன். மக்களுக்கு உரிய அதிகாரங்களை பெற்றுக் கொடுத்து ஜனநாயக அரசியலை முன்னெடுத்துச் செல்வதே எனது குறிக்கோளாகும். என்றார்
பின்னர்” தமிழ்அரசியல் கைதிகளைப் பற்றி இப்போது பேசுவதற்கு உங்களுக்கு எது உந்துதல் கொடுத்தது? ஏன் அது பற்றி நீங்கள் இதற்கு முன்னர் பேசவில்லை?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது
தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் பேசியிருக்கிறேன்.
இந்த விடயத்தைப் பற்றி முன்னர் பேசாமல் அது பற்றி இப்போதுதான் பாராளுமன்றத்தில் பேசுகிறேன் என்று சொல்வது தவறு. வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் அப்போது இருந்த அதிகாரிகளிடம் தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். இந்த விடயத்தை முக்கியமானதாகக் கருதுமாறும், அது நல்லிணக்க நடைமுறையை பலப்படுத்தும் என்றும் நான் கூறியிருக்கின்றேன். இது தொடர்பாக நாம் ஒரு நல்ல முடிவை எட்டவிருந்த நேரத்தில்தான் கடந்த வருடம் ஈஸ்டர் தின தாக்குதல் நடந்தது. அதன் பின் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டியதாயிற்று.
தற்போது 79 அரசியல் கைதிகள் உள்ளனர். இவர்களில் 6 பேர் மட்டுமே பாரதூரமான குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர். எனது முதல் அணுகுமுறை அவர்களை தரப்படுத்தி அதன்படி அவர்களை கையாளுவதாகும். எனது ஆளுநர் பதவியின் போது இந்த விடயம் தொடர்பாக நான் நல்ல முன்னேற்றமான நிலையில்தான் இருந்தேன். பரஸ்பர இணக்கப்பாடு என்ற அளவுக்கு அது வந்திருந்தது. எனினும் ஈஸ்டர் தின தாக்குதல் காரணமாக இந்த விடயத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இது தொடர்பாக நான் தொடர்ந்தும் பேசுவேன். இதற்கு ஏதாவதொரு வகையிலான தீர்வு விரைவில் வரும். என்றார்
“தற்போது இந்த விடயம் நீதி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது பற்றி தற்போது நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்?”என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது
“இந்த விடயத்துக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி ஆதரவு வழங்கியுள்ளதுடன், இந்த விடயத்தை மீண்டும் முன்னெடுக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விடயத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாதாந்த கூட்டங்களை நடத்துமாறும் தமது அதிகாரிகளை அவர் பணித்துள்ளார். இவ்விடயம் தற்போது ஜனாதிபதி மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை அமைச்சர் சரத் வீரசேகரவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து தரப்பினரும் பங்குபற்றும் மாதாந்த கூட்டங்கள் நடைபெறும். எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஏதாவதொரு கட்டத்தை எட்டமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்
“முன்னைய அரசாங்கத்தில் நீங்கள் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டீர்கள். நீங்கள் செய்த அபிவிருத்தி நடவடிக்கைகள் எவை? நடவடிக்கைகள் ஏதேனும் மிகுதியாக இருப்பின் அவை எவை?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது
” நான் சுயபுராணம் பாட விரும்பவில்லை. நான் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை திறந்து வைத்தேன். அங்கிருந்து இந்தியாவுக்கு விமானப் பயணங்களை மேற்கொள்ள முடிந்தது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் இந்திய ரூபாவை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி நான் இலங்கை அரசாங்கத்துடன் பேசி வருகிறேன்.
இது ஒரு கட்டாயமான திட்டமாகும். இதன் மூலம் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும். 2022 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மத்திய கிழக்குக்கும் பயணம் செய்யும் வகையில் பூரண வசதிகளுடன் கூடிய விமான நிலையத்தை நாம் நிர்மாணிக்க வேண்டும். என்பதே எனது நோக்கம். தற்போதைய இந்திய உயர் ஸ்தானிகரும் இவ்விடயத்துக்கு தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார். இத்திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு திட்டமாகும்.” என்றார்