சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
எரிப்பதா புதைப்பதா பிரச்சனையில் இலங்கை சிக்கித் தவிக்கிறது.
புதைத்தால் பிக்குமார்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டும், எரித்தால் இஸ்லாமியர்களின் சாபத்துக்கு ஆளாக வேண்டும். இதில் நடுநிலை என்பதில்லை.
இதில் இன்றுவரை அரசு எரிக்கும் கட்சி பக்கமே நிற்கிறது. ஆனால் புதைக்கும் கட்சியின் வலிமையை இலங்கை உணர்ந்துள்ளதா என்று தெரியவில்லை.
தனது கடும்போக்கு நிலையை தொடரும் இலங்கை அரசு கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களை எரித்தே தீருவோம் என்று விடாப்பிடியாக நிற்பதால், இஸ்லாமிய நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கிடைக்கக் கூடிய உதவிகளை இழக்கும் அபாயத்திலுள்ளது.
இலங்கையின் இந்த நடவடிக்கை “அரசியல் காரணங்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் அளிக்கப்படும் தண்டனையாகும்“ என்று பிரிட்டனின் மிகப் பெரிய இஸ்லாமியக் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சின் ஆப் பிரிட்டனின் (MCB) தலைவர் சர். இக்பால் சாக்கரைன் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் சூழல் மிகவும் பாரதூரமாகவுள்ளது என்று கூறி அரசின் நிலைப்பாடு “ஏற்றுக்கொள்ள முடியாதது“ என்று கண்டித்துள்ளார்.
அனைத்து நாடுகளிலும் அடக்கமே
கோவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு பன்னாட்டு அரங்கில் விமர்சிக்கப்பட்டாலும் அதை இலங்கை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இது பல கேள்விகளை எழுப்புகிறது. இதில் அடிப்படைக் கேள்வி இலங்கை ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்பது. சகல அதிகாரங்களும் கொண்ட முடியாட்சியில் கூட இறுதிக் கிரியைகள் விஷயத்தில் தலையிடுவதில்லை.
கொரோனோ தொற்றுக்குத் தப்பாத நாடில்லை. எவ்வித வித்தியாசமும் இன்றி இந்த நோய் அனைவரையும் தாக்கியுள்ளது. சவுதி அரேபியா தொடக்கம், இந்தியா, இந்தோனீசியா, இரான், இராக், பாகிஸ்தான், வங்கதேசம் என முஸ்லிம்கள் செறிந்து வாழும் நாடுகளில் கூட இந்தக் கொடியத் தொற்று நோயின் காரணமாக உயிரிழப்பவர்களை அவர்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றனர்.
ஆனால் இலங்கையோ ஊரோடு ஒத்து வாழாமல் தனித்து நிற்கிறது. இதன் மூலம் சர்வதேசத்தோடு முரண்பட வேண்டிய நிலைக்கும் அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதன் விளைவுகளை இலங்கை அறிந்ததாகத் தெரியவில்லை.
பிறந்து இருபது நாட்களேயான ஆண் குழந்தையொன்று வலிந்து தகனம் செய்யப்பட்டதும் அதையடுத்து எழுந்த ஆர்ப்பாட்டங்களின் கானொளிகளும் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவின. இதைத் தொடர்ந்து பிரிட்டன், இத்தாலியில் போன்ற நாடுகளில் இலங்கையைக் கண்டித்து வீதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதனிடையே இலங்கையில் இருக்கும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் உள்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரியுள்ளன. இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக இஸ்லாமிய நாடுகள் மில்லியன் கணக்கான டாலர்களை உதவியாக வழங்குகிறது.
மாறுபட்ட கருத்துக்கள்
கொரோனா தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு வல்லுநர் குழுக்கள் நேர்மாறான அறிக்கையை அளித்துள்ளன. ஒன்று எரிப்பதே சரியானது என்றும் மற்றொன்று புதைப்பதில் தவறில்லை என்றும் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி அரசின் இரு அமைச்சர்களும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து குழப்பத்தைக் கூட்டியுள்ளனர்.
அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல, “இதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வல்லுநர் குழுவே இறுதி முடிவெடுக்கிறது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்கிறது“ என்று அல்ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம, “ மக்கள் அந்தக் குழுக்களுக்கு வாக்களிக்கவில்லை, அவர்கள் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே வாக்களித்தனர்.எனவே இறுதி முடிவை அவரும் அரசுமே எடுக்கும். வல்லுநர் குழு தமது பரிந்துரையில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் எமது இறுதி முடிவு முந்தைய முடிவே“ என்று உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அரசின் முந்தைய முடிவென்பது கொரோனாவால் இறந்தவர்களை எரிப்பது என்பதே.
ஆனால் உலகெங்கும் நடந்த ஆய்வுகளும் 85க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளும் கொரோனாவை பரப்பும் நுண்கிருமி நீரின் மூலம் இறந்து அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் மூலமும் பரவாது என்பதைத் தெட்டத் தெளிவாக நிரூபித்துள்ளது. அடக்கம் எனும் நடைமுறையைத் தான் இஸ்லாமிய நாடுகளும் இந்த விஷயத்தில் பின்பற்றுகின்றன.
இதன் பின்னணியிலேயே MCB சிறப்புச் செயலணி ஒன்றை நியமித்துள்ளது என்றும், தாங்கள் இப்போது `பெரியளவில் `செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அதன் தலைவர் சர் இக்பால் சக்கரைன் கூறியுள்ளார்.
அதிகரிக்கும் அழுத்தங்கள்
தாங்கள் 20 நாடுகள், பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் தொடர்பிலிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் MCB தெரிவித்துள்ளது.
“தற்போது இலங்கையில் நடைபெற்றும் நியாயமற்றது மற்றும் சரவதேச சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானது“.
பிரிட்டனின் வெளியுறவு அமைச்சும் தமது கவலைகளைத் தெரிவித்து இலங்கைக்கு கடிதம் எழுதியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துருக்கிய அதிபர் எர்துவானுக்கும் தாங்கள் இலங்கையில் முஸ்லிம்கள் எரியூட்டப்படுவது குறித்து எழுதியுள்ளதாகவும் MCB கூறுகிறது.
தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, மலாவி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகள் ஏற்கனவே MCB நிலைப்பாட்டுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
எனவே“இலங்கை அரசு புத்தியோடு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். இலங்கையால் முன்னெடுக்கப்பட்டு ஆபத்தான இந்த முன்னுதாரணம் நிலைநாட்டப்பட நாங்கள் விரும்பவில்லை“ என்று MCB வலியுறுத்தியுள்ளது.
தடைகளுக்கு வாய்ப்பு
இலங்கை அரசு தொடர்ந்து தனது கடும்போக்கு நிலைப்பாட்டை முன்னெடுத்தால், பல நாடுகள் அதன் மீது தடைகளை விதிக்கும் சூழல் ஏற்படும் என்று MCB எச்சரித்துள்ளது.
கோவிட் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை உயிராயுதமாக பயன்படுத்தக் கூடும் என்று இலங்கை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கை “முட்டாள்தனமானது“ என்று சர் இக்பால் சக்கரைன் சாடியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகள் தமது நிதியுதவிகளைக் குறைக்குமாயின் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகளவில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு வலுவான ஒரு அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மத்திய கிழக்கிலும், வட ஆப்ரிகாவிலும் இருக்கும் முஸ்லிம் நாடுகளில் செல்வச் செழிப்புக்கும் குறைவில்லை. உலகெங்கும் பரந்து வாழும் இஸ்லாமியர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள அறக்கட்டளைகளுக்கு தான தர்மங்களைச் செய்வதில் பின் தங்கியதில்லை.
சர்வதேசத்துடன் முரண்பட்டு உள்நாட்டில் தனது ஆளுமையை நிலைநாட்ட அரசு நினைக்குமாயின் அது பேதமையே. எவ்வளவு விரைவாக அந்த உண்மையை அரசு உணர்ந்து யதார்த்தமாக நடந்து கொள்கிறதோ அது நாட்டுக்கும் அரசுக்கும் நல்லது.