இலங்கையின் வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்தார். சுற்றுலா வழிகாட்டி பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த வட மாகாண பயிலுநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
வட மாகாணத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக,சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. சுமார் நாலு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு வட மாகாண சுற்றுலா பணியகம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இது,என்னைப் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. வட மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 150 சுற்றுலா மையங்கள் தொடர்பான ஆவணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இவற்றின் விபரங்களை வெளியிட்டமையும் மகிழ்ச்சியளிக்கிறது.வட மாகாண சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் விரிவுபடுத்த இவை உதவி புரியும். இதற்கான முழு ஒத்துழைப்பும் சுற்றுலா பணியகத்திற்கு வழங்கப்படும்.
இந் நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வட மாகாணத்தை சேர்ந்த ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் ,வடமாகாண சுற்றுலாதுறை பணியக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.