கனடாவின் சஸ்கட்செவான் என்ற மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மனித புதைக்குழிகளை கண்டுபிடித்துள்ளதாக ‘தி கவொசெஸ் ஒஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ்’ எனும் பூர்வகுடிகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என குறித்த பூர்வகுடிகள் உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்த உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில் எத்தனை மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை.
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இதே போன்றதொரு முன்னாள் உறைவிடப் பாடசாலையில் 215 குழந்தைகளின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வார காலத்துக்குப் பின்பு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த சிறுவர்களை தங்கள் சமூகத்திற்குள் கலக்கச் செய்யும் முயற்சியாக, 1863ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பூர்வகுடி குழந்தைகள் தங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இத்தகைய கட்டாய உறைவிடப் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த பாதகமான செயலுக்குப் பின்னால், கனடாவின் அரசு சார்ந்த ஆதரவு இருந்திருக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவப் பாதிரிகள் இந்த அப்பாவிச் சிறுவர் சிறுமியரை கொன்று குவித்தது மாத்திரமல், அவர்களில் இளம் வயதுப் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோரை பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கினார்கள் என்பதற்கான தடயங்களும் தற்போது கிடைத்துள்ளதாக அறியப்படுகின்றன.
இந்தப் பூர்வகுடி இனக் குழந்தைகளுக்கு தங்களுடைய தாய்மொழியை பேசவோ தங்களது பண்பாட்டை பின்பற்றவோ பெரும்பாலும் அனுமதி கிடையாது. இந்தக் குழந்தைகளில் ஏராளமானோர் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் மோசமாக நடத்தப்பட்டனர் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
(இவ்வாறாகப் பாதகமாக கொலைகளுக்குள்ளான அப்பாவி குழந்தைகளுக்காக, அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இவ்வருடத்திற்கான கனடா தினம் என்னும் கனடாவின் பிறந்த நாளை கொண்டாடுவதிலிருந்து, கனடாவின் பல நகரசபைகள் பின்வாங்கியுள்ளன. இதையொட்டி எமது கனடா உதயன் ஆசிரிய பீடம் எழுதிய ‘கதிரோட்டம்’ என்னும் ஆசிரிய தலையங்கத்தை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும் – நன்றி)
தலையைக் கவிழ்ந்தபடி தனது பிறந்த நாளை கொண்டாட முடியாமல் தவிக்கும் கனடிய தேசம்