கனடாவின் ஆதிப் பழங்குடி இனத்தின் வம்சாவளிப் பெண்மணியான மேரி சைமன் நாட்டின் ஆளுனர் நாயகமாக இன்று பதவியேற்றார். இவருக்குரிய நியமனத்தை கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வழங்கினார்.
முன்னாள் இராஜதந்திரியான இவர் ஒரு வழக்கறிஞருமாவார். அத்துடன் ஆதிப் பழங்குடி இனத்தின் இனுட் பிரிவைச் சேர்ந்த சமூகத்தின் உரிமைகள் மற்றும் கலாச்சாரத்திற்கான வழக்கறிஞராகக் கடமையாற்றிய மேரி சைமன், கனடாவின் 30 வது ஆளுனர் நாயகமாக .(கவர்னர் ஜெனரல்) பதவியேற்றுள்ளார். இவருக்கு முதல் இந்த உயர் பதவியை வகித்தவர் திருமதி யூலி பேய்ட்டி என்பவர் என்பதும் அவர் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கேள்விகள் காரணமாக தனது பதவியை கடந்த ஜனவரி மாதம் இராஜினாச் செய்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு அகதியாகவே கனடாவிற்கு குடியேறியவர் ஆவார்.
கனடாவின் 30 வது ஆளுனர் நாயகமாக பதவியேற்றுள்ள சைமன் அவர்கள் தனது நியமனத்தின் மூலம் கனடாவுக்கு ஒரு “வரலாற்று மற்றும் ஊக்கமளிக்கும் தருணம்” கிட்டியுள்ளது என்றும், நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் மற்றொரு முக்கியமான படியாக இது அமைந்துள்ளது என்றும் கூறினார்.
“ எனது வருகையை அனைத்து கனேடியர்களும் தங்களின் ஒரு பகுதியாக உணர்வார்கள் என்றும் நான் நம்புகிறேன், ஏனென்றால் எனது நியமனமானது, மிகவும் உயர்ந்த விடயங்களைக் கொண்டதும் நியாயமானதும் மற்றும் சமமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு முன்னேற்றத்தை பிரதிபலிப்பதும் ஆகும் என்று அவர் இன்று காலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நியமனம் பற்றி அறிவித்த பின்னர் உரையாற்றும் போது கூறினார்.
சைமன் அவர்கள் தனது சொந்தக் கதையானது கனடாவின் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையில் ஒரு பாலம் கட்டுபவராக தன்னை ஆக்கியுள்ளது என்றார் – அவரது தாயார் இனுக், அவரது தந்தை ஹட்சன் பே நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
“எல்லா மக்களுடனும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் எதை நம்புகிறார்கள் என்றாலும் அல்லது அவர்கள் எதை வெற்றிகொள்ள வேண்டும் என்றாலும் நான் அவை அனைத்தையும் தொடர்புபடுத்த வேண்டியவளாக உள்ளேன் என்றும் கனடாவின் புதிய ஆளுனர் நாயகம் சைமன் அவர்கள் தெரிவித்தார்.