தமிழ் மொழி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஒன்றாரியோ மாகாண அமைச்சர் றேமண்ட் சோ தெரிவிப்பு
“ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட்-19 இன் தாக்கத்திற்கு பின்னர் பல சவால்களை எமது அரசாங்கம் எதிர்கொள்கின்றது. இந்த நோய்த் தொற்றிலிருந்து ஒன்றாரியோ மக்களை காப்பாற்றும் பொறுப்புக்களுக்கு அப்பால். மாகாணத்தில் உள்ள மூத்தோரின் நலன்களைப் பேணுதல் மற்றும் அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகிய பணிகள் அதிகரித்துள்ளன. இந்த வேளையில் இங்கு மூத்தோரின் (SENIORS) எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தும் பொறுப்புக்கள் எமது அரசிற்கு அதிகரித்துள்ளது எனினும் முதியோர்களுக்கான நீண்ட கால கவனிப்பு வதிவிடங்கள் மற்றும் அவர்களின் ஒய்விற்கு பின்னரான இல்லங்கள் ஆகியவற்றின் மீது அரசாங்கம் காட்டும் அக்கறை மற்றும் கவனிப்பு ஆகியன அதிகரித்த வண்ணம் உள்ளன” இவ்வாறு தெரிவித்தார் ஒன்றாரியோ மாகாண மூத்தோர் மற்றும் வசதிகளை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அமைச்சர் றேமண்ட் சோ அவர்கள்.
ரொறன்ரோ பெரும் பாகத்தில் உள்ள தமிழ் மொழி சார்ந்த ஊடகவியலாளர்களுக்ககாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த விசேட சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஸ்காபுறோவில் இடம் பெற்ற இந்த சந்திப்பை தமிழ் பேசும் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான திரு விஜேய் தணிகாசலம் நெறிப்படுத்தினார்.
அவர் முதலில் அமைச்சர் றேமண்ட் சோ அவர்கள். பற்றிய அறிமுகத்தை தெரிவித்த போது “தற்போதைய ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரவையில் அனுபவமும் வயதும் அதிகம் கொண்டவராக விளங்கும் ஒருவரை தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்வதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். அவரது அரசியல் அனுபவம் என்பது எனது வயதை விட அதிகமானதாகும் என்பதை நான் அறிவேன். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன. மேலும். தனது நீண்ட கால அனுபவத்தால் மக்களுக்கு சேவையாற்றும் வழிகளை நன்கு தெரிந்து வைத்துள்ள அமைச்சர் அவர்கள் தனது பதவிமூலமாக மக்களுக்கு தகுந்தசேவையாற்றி வருகின்றார் என்பதை நாம் நன்கு அறிவோம். எனவே இன்று அவரோடு இன்று நாம் கலந்துரையாடுவதன்மூலம் எமது அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தனது கருத்துக்களை முன்வைத்த அமைச்சர் றேமண்ட் சோ அவர்கள் தொடர்ந்துபேசுகையில் “எமது மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்கள் முதியோர்களுக்கான நீண்ட கால கவனிப்பு வதிவிடங்கள் மற்றும் அவர்களின் ஒய்விற்கு பின்னரான இல்லங்கள் ஆகியவற்றின் மீது கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் வகையில் பரிசோதகர்களை நியமித்து அங்கு எமது மூத்தோர்கள் எவ்வித இடையூகளும் இன்றி, உடல் நலம் நன்கு பேணப்பெற்று இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வைத்தியசாலைகளிலும் நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பெற்று வைத்தியசாலைகளுக்குச் செல்லும் எமது மக்கள் தகுந்த சேவையை பெறுவதை உறுதி செய்வதில் எமது அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் றேமண்ட் சோ அவர்களும் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான திரு விஜேய் தணிகாசலம் ஆகியோர் இணைந்து பதிலளித்தார்கள். பல பயனுள்ள கேள்விகள் அங்கு வினாவப்பெற்றன.
குறிப்பாக. ஸ்காபுறோவில் அமையப் போகின்ற “தமிழர் சமூக மையம்” தொடர்பாகவும் அங்கு ஏற்படுத்தப்படவுள்ள வசதிகள் மற்றும் மண்டபங்கள் தொடர்பாகவும் உரையாடப்பட்டன.
இறுதியில் அமைச்சர் றேமண்ட் சோ அவர்கள் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான திரு விஜேய் தணிகாசலம் தொடர்பாக தனது கருத்துக்களைச் சொல்லியபோது தற்போது ஓரு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளராக உள்ள அவர் மீண்டும் அடுத்த 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில். வெற்றி பெற்று அமைச்சராகப் பதவியேற்பார் என்றும் வாழ்த்தி விடைபெற்றார்.
செய்தியும் படங்களும்:_ சத்தியன்