’ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாணியில் கூட்டமைப்பை உடைக்கின்ற செயற்பாட்டில் முதலாவது தேங்காயை உடைத்திருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.
”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக் கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார்.
அந்தளவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது”.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும். எல்லோரையும் அணைத்து செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியை தொடர்வார் என்று அவர் கூறினார்..
தன்னைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சியின் உப கட்சியினுடைய நிகழ்வே இது என்று கூறிய அவர், அங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களே என்பதை நினைவூட்டினார். தற்போது அது உடைந்து இருந்தாலும் கூட, அடிப்படையில் தமிழரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது.
”தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது. ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை” என்றார் சிவஞானம்.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமாக இருந்த காலகட்டத்தில் அதை உடைக்கும் ஒரு நடவடிக்கையாக அந்த அமைப்பின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற `கருணா`வை புலிகளிடமிருந்து பிரித்து அந்த அமைப்பை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க என்பது வரலாறு.