எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது, தறபோதும் இருக்கின்றது-ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் கூட்டமைப்பின் மீதான பற்றும் குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.
போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளட்) 10வது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.
”விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும், தனிக்கட்சிகளின் சிலரது எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை”.
பதிவு அவசியம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும் என்றும் அந்த கூட்டத்தில் உரையாற்றும் போது செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
”வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்”.
கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழப்பங்கள் தொடர்பிலும் ரெலோவின் தலைவர் விசனம் வெளியிட்டார்.
”அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற, இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டுபண்ண வேண்டும்” என்று கூறிய அடைக்கலநாதன், தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒருக்காலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் சூளுரைத்தார்.
கடந்த காலத்தில் கூட்டமைப்பின் சாரில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் அது இப்போது பாதிக்கும் குறைவாக அதாவது 10 ஆக மாறி உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ரணிலின் பிரித்தாளும் தந்திரம்
ரணில் விக்ரமசிங்க பற்றி தமிழர்களுக்கு தெரியும் என்று கூறிய அவர், இராணுவ ரீதியாக பலமாக இருந்த விடுதலைப் புலிகளை அன்று உடைத்த ரணிலே இன்று ஜனாதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்த அவர். ”அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார்”
கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என ரணில் அவர்களுடனான ஒரு கூட்டத்தில் கூறியையும் செல்வம் அடைக்கநாதன் நினைவு கூர்ந்தார்.
“சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள். வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது. அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி”
அதேவேளை, நாகரீகம் கருதி தான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். மாநாடு என்பதால் தான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார், அதனை மக்களிடையே தாங்கள் பிரச்சாரத்தை செய்து வருவதாகவும் கூறும் அவர் அதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்தது இப்போதும் இருக்கின்றது என்றார்.
”இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது”.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் செல்வர் அடைக்கலநாதன்.






















