(எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்)
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி யாழ் பல்கலைக் கழக நிர்வாகம் சீன அரசிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூபா 43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சீனத் தூதரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹொங் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் இந்த நிதியைக் கையளித்தார்.
இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.
சீனத் தூதரகத்தின் இந்த நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதாந்த உதவிப்பணம் உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழக நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.
இதேநேரம் ஐ.நாவில் இலங்கைக்கு பக்க பலமாக இருந்து இலங்கையைக் காப்போம் எனச் சீன பகிரங்கமாக கருத்து தெரிவித்ததால் இந்தப்பணத்தைப் பெறுவதற்கான ஒப்பந்தம் இடம்பெறாக் கூடாது என்று மாணவர்கள் பகிரங்கமாகவே கருத்து தெரிவித்திருத்தனர்.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்த கருத்தின் காரணமாகவே கடந்த மாதம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்ட ஒப்பந்த நிகழ்வு ரத்தானது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி இலங்கையில் மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் சீனா நிதியுதவி அளித்து வருகிறது.
போருக்குப் பின்னரான காலத்தில் வட மாகாணத்தை இலக்கு வைத்து சீனா பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதன் மூலம் உள்ளூர் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று யாழ் மாநகர மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.