-சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை
( 23-10-2022)
யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம்(22-10-2022) சந்தித்து கலந்துரையாடி அவர்களின் இன்னல்களை கேட்டறிந்தனர்.
,இதன் போது அங்கு வசிக்கும் குடும்பத்தினர் கருத்துத் தெரிவிக்கும் போது,,,
யுத்தம் காரணமாக பலாலிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து 30 வருடங்கள் கடந்து விட்டது அதுமட்டுமல்லாமல் யுத்தம் முடிவுக்கு வந்து 12 வருடங்களாகிவிட்டது.
பல இடங்களிலும் உள்ள அகதி முகாம்கள் மூடப்பட்டு அந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் பலாலிப் பகுதியில் எமக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினர் வசம் உள்ளது. அதன் காரணமாகவே இன்னமும் நாங்கள் எமது காணிகளில் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனியார் காணிகளில் 30 வருடங்களாக குடிசைகளில் வாழ்ந்து வருகிறோம். இந்த அகதி வாழ்க்கையில் எமது மூன்று தலைமுறையில் எந்த முன்னேற்றங்களும் இல்லை.
எமது பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி, உணவு, உடை, உறைவிடங்கள் இல்லை. காணி நிலம் இருந்தும் அகதியாக வாழும் வாழ்வை நினைத்து மன நோயாளிகளாக மாறும் நிலையில் உள்ளோம்.
இனி வரும் மழை காலங்களில் எமது வீடுகள் தண்ணீரில் மிதக்கும் .உறவினர்கள் வீடுகளிலும், கோவில்களிலும் வசிக்க தயாராகி விட்டோம். நாங்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது ஆர்ப்பாட்டங்கள் செய்து பார்த்தும் எங்களது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து மீளப் பெற முடியாமல் உள்ளது.
எமது அடுத்த தலைமுறை எவ்வாறு வாழப் போகிறார்களோ தெரியவில்லை .திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு வழங்குவதற்காகக் கூட எம்மிடம் சொந்தமாக காணித் துண்டுகள் இல்லை.
யுத்தம் முடிந்த பின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் ஓரளவிற்கு எழுந்து விட்டார்கள். எம்மால் இந்த அகதிக் குடிசையிலிருந்து வெளியே வர இயலாமல் உள்ளது.
எமது பரம்பரைக் காணிகளில் படையினர் தென்னை மரம், வாழை ,உட்பட பலன் தரும் மரங்களை உருவாக்கி அனுபவித்து வருகிறார்கள். நாங்கள் குடிசைகளில் நாதியற்ற இனமாக பஞ்சம் பசி, பட்டினி, நோய்களோடு, வாழ்ந்து வருகிறோம். என்று கண்ணீருடன் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக மக்களிடம் கருத்து தெரிவித்த மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான பணிப்பாளர் ஜாட்சன் பிகிராரோ ,,,
அனைத்து ஆவணங்களும் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய காணிகளில் மீள்குடியேறி வசிப்பதற்கு நீங்கள் உரித் துடையவர்கள். உங்களுடைய உரிமைகளை எவருக்காகவும் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. மக்கள் ஒற்றுமையாக ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எமது நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும்.
கடந்த காலங்களில் இரணைதீவு ,மன்னார் முள்ளிக்குளம் ,பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் அபகரித்து வைத்திருந்த மக்களின் காணிகளை மக்கள் ஒற்றுமையாக குரல் எழுப்பி பெற்றுக் கொண்டது. அதற்காக தமது நிறுவனம் வழங்கிய ஒத்துழைப்புகள் பற்றி தெரிவித்திருந்தார்.
அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் மெசிடோ நிறுவனத்தால் உங்கள் குடும்பங்களுக்கு 5600 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது