சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் இம்மாதம் 31ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு காலத்தில் வெளி நபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801-ம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் மூன்று தினங்களுக்கு பின் மருது சகோதரர்களின் உடல்கள் அவர்கள் கட்டிய காளையார்கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், காளையார் கோயிலில் வரும் அக்டோபர் 27-ம் தேதி மருது சகோதரர் குரு பூஜை நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் இன்று அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். மருது சகோதரர் குரு பூஜையில் பங்கேற்க வருகை தரும் தலைவர்கள், பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி. கேட்டு கொண்டுள்ளார். அதே சமயம், முன் அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். சிவகங்கை மாவட்டத்திற்குள் வாடகை வாகனங்கள், வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் ஆகியவைகளில் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், எந்தவிதமான அசம்பாவிதங்களிலும் யாரும் ஈடுபட கூடாது, வாகனத்தின் மேற் கூரையில் அமர்ந்தப்படியே பயணம் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.