அருட்தந்தை சக்திவேல்
(23-10-2022)
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரம் காரணமாக மிக நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தமிழ் அரசியல் கைதிகளில் நால்வர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் விடுதலையில் விடுதலையானோரும், அவர்களின் குடும்பத்தினரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பும் மகிழ்வதோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரம் காரணமாக மிக நீண்ட காலமாகச் சிறை வாழ்வை அனுபவித்துவரும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரசியல் கைதிகளில் 8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று ஆரம்பத் தகவல்கள் ஊடகங்களில் வெளி வந்தாலும் இறுதியில் நால்வர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்வதாக பெயர் குறிப்பிட்டுள்ள ஏனையோரையும் விடுதலைக்கான தடைகளை நீக்கி அவசரமாக விடுவிக்க ஆவன செய்திடல் வேண்டும்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் வீரக்குமார் ராகுலன் (மட்டக்களப்பு), ஜெபநேசன் (மன்னார்), ராமநாதன் நவதீபன் (மாத்தளை) மூவரும் 15 வருடங்களுக்கு மேலாக சிறை வாழ்வை அனுபவித்துள்ளதோடு சத்திவேல் இலங்கேஸ்வரன் (வவுனியா) 23 வருட சிறை வாழ்வை அனுபவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் வாழ்வைப் பறித்து வாழ்வை கொலை செய்ய முடியுமே தவிர வாழ்வைக் கொடுக்க முடியாது என்பது கடந்த 43 வருட கால தமிழர்களின் அனுபவமாகும்.
இத்தகைய கொடூர சட்டத்துக்கு எதிராக அது கொண்டுவரப்பட்ட 1979 இல் இருந்து தமிழர்கள் குரல் கொடுப்பதோடு, தற்போது அதன் கொடூரத்தை உணர்ந்த தெற்கின் சிங்களவர்களும் குரல் கொடுக்கின்றனர். சர்வதேச அமைப்புக்களும் குரல் கொடுக்கின்றன.
இந்தநிலையில் அதனை மாற்றுவதற்கு இன்னும் ஆட்சியாளர்கள் ஆயத்தமாக இல்லை என்பது அவர்களின் அரசியல் கொடூர முகத்தையே வெளிப்படுத்துகின்றது.
இதனைப் பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொண்டே அரசியல் செய்ய முனைகின்றனர். பலமான மக்கள் எதிர்ப்பே இதற்குத் தேவை. இவ்வேளையில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் முக்கியமான வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஜனாதிபதியால் தண்டனைக் கைதிகளுக்கே விடுதலை கொடுக்க முடியும். அவ்வாறே நீதிமன்றத் தண்டனைக் கைதிகளையே ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு எனப் பொது வெளியில் கூறி அரசியல் கைதிகளுக்கு மூன்றாவது தண்டனையையும் கொடுக்க வேண்டாம்.
நீதிமன்றம் தண்டனை கொடுத்து, ஜனாதிபதி பொது மன்னிப்பு எனக் கூறி, அதே கூற்றைத் தமிழ் தலைமைகள் மீளக் கூறுவது என்பது அரசியல் கைதிகளைக் குற்றவாளிகள் எனப் பகிரங்கமாகக் கூறி அவமானப்படுத்துவதாகவே அமையும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்க வேண்டும் என்பது பொதுக் கோரிக்கையாக இருக்கின்றது. அதனை ஆட்சியாளர்கள் எப்போது நீக்குவார்களோ தெரியாது. அரசியல் கைதிகள் மிக நீண்ட காலமாகத் தங்கள் இளமையைச் சிறையில் அடைந்துள்ளனர்.
இன நல்லிணக்கம் கருதி அமைச்சரவை, சட்டமா அதிபர் திணைக்களத்தோடு கதைத்து அரசியல் கைதிகள் மீது தொடுத்துள்ள வழக்குகளை மீளப்பெறுவதன் மூலம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம்.
அதனைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் வலியுறுத்த வேண்டும். அதுவே அரசியல் கைதிகளுக்குக் கௌரவமாக அமையும். இன நல்லிணக்கத்துக்கும் அடித்தளமாகும்” என்றுள்ளது.