-மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
(மன்னார் நிருபர்)
(30-11-2022)
நாட்டில் போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது.ஆனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு முன்னதாக எங்களுடைய பிரதேசங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை, இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இன்றி காணப்படும் சூழ்நிலைகள் உள்ளடங்களாக இவ்வாறு பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு புனர்வாழ்வின் அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(30) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
-நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜான்சன் பிகிராடோ,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன்,தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைக்குச் செல்லுகின்ற மாணவர்களின் போக்குவரத்து வசதி பல்வேறு இடங்களில் இல்லாத காரணத்தால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை அறிந்த விடையம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ள பலர் எங்களுடன் தொடர்பு கொண்டு சில உதவிகளை மேற்கொள்ள முன் வந்துள்ளார்கள்.அந்த வகையில் வட கிழக்கு புனர்வாழ்வு அமைப்பு இவ்வாறான உதவிகளை வழங்க முன் வந்துள்ளார்.
இவ்வாறான கொடையாளி களிடம் இருந்து அவற்றை பெற்று தேவைப்படுகின்ற மக்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
-குறித்த உதவிகள் இலங்கை தமிழரசுக்கட்சி ஊடாக வழங்குமாறு கோரியுள்ளனர்.அதனால் நான் அவர்களுடன் தொடர்பில் இருந்து இந்த உதவிகளை நேரடியாக எமது கட்சி உறுப்பினர்கள் ஊடாக தேவையுடையவர்கள் அடையாளம் கண்டு வழங்கி வருகிறோம்.
-கிடைக்கின்ற உதவிகளை வழங்கி வைப்பதோடு,வேறு தேவைகளையும் எதிர் காலத்தில் வழங்க கூடியதாக இருக்கும் என நம்புகிறோம்.மாணவர்களுக்கு விசேடமாக இந்த உதவிகளை செய்து கொடுப்பதற்கு காரணம் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி வளர்ச்சி விழுந்து விடக்கூடாது என்பதே.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீண்டு எழுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.விசேடமாக வடக்கு கிழக்கில் நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட சற்று வித்தியாசமான ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.
போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில்,தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு முன்னதாக எங்களுடைய பிரதேசங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை,இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இன்றி காணப்படும் சூழ்நிலைகள் உள்ளடங்களாக இவ்வாறு பல விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே உள்ளது.
-வெளிநாடுகளுக்கு போயுள்ள எமது உறவுகள் பலர் தமது உறவுகளுக்கு நிதி உதவிகளை மேற்கொள்வதன் காரணமாக சில தேவைகள் அவர்களுக்கு நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது.
அந்த வகையில் வடக்கு கிழக்கின் பொருளாதாரம் என்றால் வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள உறவுகளுக்கு அனுப்பும் பணம் தான் பிரதான காரணமாக உள்ளது.இங்கே தொழில் வாய்ப்புக்களை மேற்கொண்டு வருவாயை தேடுவதை விட உறவினர்கள் ஊடாக இங்கு அனுப்பப்படும் நிதி எமது பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருந்துள்ளது.
நாட்டில் அந்நிய செலாவானி இல்லாத சூழ்நிலையில் காணப்படும் நிலையில் வடக்கு கிழக்கில் சற்று மாறுபட்டதாக சில மாதங்களில் காணக்கூடியதாக உள்ளது.ஏற்கனவே பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள மாகாணங்கள் என்ற அடிப்படையில் இந்த பொருளாதார வீழ்ச்சியும் எங்களை மிக வெகுவாகவும் மோசமாகவும் பாதிக்கும்.அதற்கு முகம் கொடுக்கும் வகையில் சில திட்டங்களையும்,நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
சில விடையங்கள் குறித்து நாங்கள் அரசாங்கத்துடன் பேசுகின்றோம்.வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் புலம் பெயர்ந்த மக்களிடம் இருந்து எங்களின் பிரதேசத்திற்கு அவ்வாறான முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு பாரிய முயற்சியும் இடம் பெற்று வருகிறது.
இவ்வாறு மேற்கொள்கின்ற போது நாட்டிற்கும்,எமது பிரதேசத்திற்கும் பொருளாதார மீள் எழுச்சிக்கு முக்கிய விடையமாக அமையும்
இவ்வாறான விடயங்கள் எமக்கு கை கொடுக்கும் வரை எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் வீழ்ச்சி அடைந்து விடக்கூடாது என்பதன் காரணத்தினால் நாங்கள் சில விடையங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு,மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\