கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி & சிவா பரமேஸ்வரன்
வெள்ளை யானையை காலத்திற்கும் கட்டி தீனி போட முடியுமா?
அதற்கு முன்னதாக ஒரு சிறிய பாடலையும் அதற்கான பொருளையும் பார்ப்போம். சமாளிக்க முடியாத ஒரு பொருளைப் பரிசாகப் பெற்ற கவிஞரை அவரது மனைவி இடித்துரைப்பதை தமிழகத்தின் அந்தகக்கவி வீரராகவர் இப்படிப் பாடியுள்ளார்.
“இம்பர்வான் எல்லைரா மனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ?’ என்றாள் பாணி!
‘வம்பதாம் களபம்’ என்றேன் ‘பூசும்’ என்றாள்!
‘மாதங்கம்’ என்றேன்யாம் ‘வாழ்ந்தேம்’ என்றாள்!
‘பம்புசீர் வேழமெ’ன்றேன் ‘தின்னும்’ என்றாள்!
‘பகடெ’ன்றேன் ‘உழும்’ என்றாள் பழனந்தன்னை!
‘கம்பமா’ என்றேன்’நற் களி’யாம் என்றாள்!
‘கைம்மா’ என்றேன் சும்மா கலங்கினாளே!”
இராமன் என்னும் செல்வந்தனைப் பாடி யானையைப் பரிசாகப் பெற்று வந்தான் பாணன். ‘அவனைப் பாடி ‘என்ன கொண்டு வந்தாய்?’ என்று பாணனின் மனைவி பாணினி கேட்டாள். அதற்குப் பாணன் ‘களபம்’ என்றான். ‘களபம்’ என்பது சந்தனத்திற்கும் யானைக்குமான பொதுச்சொல். பாணினி சந்தனம் எனக் கருதி தனக்குப் பூசிவிடச் சொல்கிறாள்.
பாணினிக்குத் தெளிவாகப் புரியவைக்க ‘மாதங்கம்’ என்றான் பாணன். ‘மாதங்கம்’ என்பது யானைக்கு மற்றொரு பெயர். பாணினி மா தங்கம் எனப் பிரித்துத் தங்கக் குவியல் என எண்ணி ‘வாழ்க்கைக்குப் போதும்’ என்றாள்.
குழப்பத்தைத் தீர்க்க எண்ணிய பாணன் தொடர்ந்து ‘பம்புசீர் வேழம்’ என்றான். ‘வேழம்’ என்றால் யானைக்கும் கரும்புக்கும் பொதுச்சொல். பாணினி அதனை ‘கரும்பு’ என்று எண்ணி ‘உண்ணலாம்’ என்றாள்.
பாணன் மீண்டும் தான் பெற்று வந்தது ‘பகடு’ என்றான். பகடு என்பது யானைக்கும் உழுமாட்டிற்கும் பொதுச்சொல். பாணினி அதனை ‘உழுமாடு’ எனக் கருதி ‘நிலத்தை உழலாம்’ என்றாள்.
பாணினிக்குப் புரியவைத்துவிட வேண்டும் என எண்ணிய பாணன் ‘கம்பமா’ என்றான். ‘கம்பம்’ என்றால் கட்டுத்தறி. ‘கட்டுத்தறியில் கட்டக்கூடிய விலங்காகிய யானை’ என்று அவன் கூறினான். அப்போதும் இவள் ‘கம்பு மாவு’ எனக் கருதி அதனைக் கொண்டு களிசெய்து சாப்பிடலாம் என்றாள்.
இறுதியாகப் பாணன் ‘கையை உடைய விலங்கான யானை என்பதை ‘கைம்மா’ என்றான். வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த பாணினி யானையைக் கண்டு அதிர்ச்சியுற்று இதற்கு யார் காலம் முழுவதும் தீனி போடுவது என்று கண்கலங்கினாள் என்று பொருள்படுவதாக அவர் சிந்திக்கும் வகையில் எழுதியுள்ளார்.
ஒரு யானையைக் கட்டி தீனி போடுவதே இவ்வளவு கடினம் என்றால் தேவைக்கு அதிகமான வெள்ளையானைகளைக் கட்டி தீனி போட அரசால் முடியுமா?
இலங்கையில் இடம் பெற்ற கொடிய யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் யுத்தத்திற்கு என்று உருவாக்கப்பட்ட படையணி என்ற வெள்ளை யானையைத் தொடர்ந்து பந்தியில் கட்டி வருடாவருடம் தீனி போட்டுக் கொண்டு வருகிறது அரசு. யுத்தம் முடிவுற்றாலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒன்றும் பலம் வாய்ந்த டயஸ்போரா இயங்குவதாலும்- பலம் வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பு இயங்குவது அவசியமானது என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது.
ஆனால், யுத்தம் முடிவுற்றகாலத்திற்கு பிறகான காலப்பகுதியில் பெரிதாக ஊதிப்பெருத்திருந்த இராணுவ ஆளணியில் தேவைக்கதிகமானவர்களின் சேவையை முன்கூட்டியே முடிவுறுத்தி கட்டாய ஓய்வுபெற அனுமதித்து படைகளின் எண்ணிக்கையை உடனடியாகக் குறைக்கலாமா என ஆலோசிக்கப்பட்ட போது, அவ்வாறு வெளியேறுவோர் மாற்று வாய்ப்புகள் அற்ற நிலையில் தாம் பெற்ற ஆயுதப் பயிற்சியை வைத்துக்கொண்டு சமூகரீதியில் தீய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற அச்சத்தினால் அது கைவிடப்பட்டு வழமையான வயதில் ஓய்வு பெறும் வரை காத்திருக்கலாமெனவும் சுயவிருப்பின் பெயரில் விலக விரும்புவோர் விலகலாமெனவும் முடிவானது.
இடைப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பு படைகள் பாதை அமைப்பு, கட்டட நிர்மாணத்துறை போன்ற துறைகளிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் விவசாயப்பண்ணைகளை அமைத்து விவசாயம் செய்வது சுற்றுலாத்துறை விடுதிகளை அமைத்து உழைப்பது, பொதுமக்களுக்கு மரக்கறி விற்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவை எதுவுமே படையினர் செய்ய வேண்டிய வேலை அல்ல என்பதுடன் சிவிலியன்களின் உற்பத்தி நடவடிக்கைகளுடன் நேரடிப் போட்டியாகவும் இருந்தது. பாதுகாப்புத் துறையினர் செய்யும் உற்பத்திப்பொருட்களில் தயாரிப்புச் செலவு மிகவும் குறைவாக இருந்தமையால் தனியாரைவிடக் அவர்களால் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது.
படையினரின் பணி நாட்டைப் பாதுகாப்பதா அல்லது காய்கறி விற்பதா?
ஆனால் தென்னிலங்கையில் சிவில் அமைப்புகள் இதற்கெதிராக போராடியபடியால் அங்கு சிவிலியன்களுக்குப் போட்டியாக இருந்த பாதுகாப்பு தரப்பினரின் பொருளாதார முயற்சிகள் பெருமளவுக்கு குறைந்தன. ஆனால், வடக்கில் அவை தொடர்ந்து இயங்குகின்றன. இது மட்டுமன்றி கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கவென்று உருவாக்கப்பட்ட அவன்கார்ட் விவகாரம் பின்னர் சர்ச்சையாக மாறியதும் தெரிந்ததே. அத்துடன் ஐ நா அமைதிகாக்கும் படையிலும் இணைந்து பணம் உழைக்கவும் ஈடுபாடு காட்டப்பட்டது. படையினருடன் நேரடியாகத் தொடர்புடைய கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் ஆழம் குறைந்த நீர்நிலைகளில் தாக்குதல் நடத்தவல்ல அரோ எனப்படும் (Arrow) சிறுபடகுகளை தயாரித்து ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணி உழைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த ஒரு படைத்துறை அலுவலரிடமும் பாதுகாப்புத்துறையின் அளவு நாட்டுக்குச் சுமை என்று என்று கூறினால் உடனடியாக வரும் விடை ”நாம் நாட்டுக்குச் சுமையல்ல நாம் நாட்டிற்குப் பணம் ஈட்டித்தருகிறோம். சிவிலியன்கள் பணமீட்ட உகந்த அமைதிச் சூழலையும் நாமே உருவாக்கித்தருகிறோம் ஆகவே பாதுகாப்புச் செலவினங்கள் நாட்டுக்குச் சுமையல்ல மாறாக அதை ஒரு முதலீடாகக் கருத வேண்டும்” என்பதாகும்.
நாட்டின் பாதுகாப்புச் செலவினங்களில் சுமார் 80% படைவீரர்களுக்கான ஊதியமாகும். இது அரசதுறை ஊழியர்களுக்கான மொத்த சம்பளங்களுக்கான செலவீட்டில் சுமார் 4 சதவீதமாகும். மொத்த அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையாகிய 14.5 இலட்சம் பேரில் 3 இலட்சத்து 17 ஆயிரம் பேர் பாதுகாப்புத் தரப்பினராவர். நாட்டின் மொத்த சனத் தொகையில் இது 1.46 சதவீதமாகும். இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக (2%) மொத்த சனத்தொகையில் கூடுதலான பாதுகாப்புத் தரப்பைக் கொண்டுள்ள நாடு இலங்கை. ஆகவே இது ஒரு வெள்ளையானை என்பதி ஐயமில்லை.
புலிப்பூச்சாண்டி காட்டப்பட்டு நியாயம் கற்பிக்க முற்பட்டாலுங்கூட அல்லது அண்மையில் வரவு செலவுதிட்டத்தில் கூறப்பட்டது போல சர்வதேச வர்த்தகத்திற்கு பாதுகாப்பு வழங்க படைத்துறை செலவினங்களை அதிகரிப்பது அவசியம் என நியாயங்கற்பித்தாலும் இலங்கைக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலிருந்தோ பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என தனிப்பட்ட கலந்துரையாடல்களின் போது படைத்துறை சார்ந்தோர் ஒப்புக்கொள்கிறார்கள்.
அச்சுறுத்தல் இருப்பது போலக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை பதவியில் உள்ள அரசாங்கங்களுக்கு அவசியம் உள்ளது. ஒரு புறம் நாட்டில் மிகப் பெரிய பூதமாக வளர்ந்துள்ள பாதுகாப்புத்துறையின் தயவு பதவிக்கு வருகிற ஆட்சியாளருக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. பாக்கிஸ்தான் போன்றதொரு தெற்காசிய நாடுகளில் இலங்கையில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்டது போன்றதொரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கக் கூடிய வாய்ப்பு மிகவும் அதிகம்.
இலங்கையில் இராணுவம் அப்படி ஒன்றைச் செய்யாது என்று உடனடியாக அறிவித்தமையை நாம் கவனிக்க வேண்டும். அத்துடன் ராஜபக்சக்களின் ஆபத்பாந்தவனாகிய ரணில், ஜனாதிபதி பதவியேற்ற உடனேயே முதலாவதாக ராணுவத்தை சந்தித்துப் பேசவேண்டிய அவசியம் குறித்தும் சிந்திக்க வேண்டும். இப்போது இராணுவத்தைக் கொண்டு அரகலயவை அடக்குவேன் என்று அவர் தொடைகளைத்தட்டி சவால் விடுப்பதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அவதானிக்க வேண்டும். பாதுகாப்புத் தரப்பினரின் தயவு இல்லாமல் ஆட்சியில் நிலைப்பது கடினம் என்பதுடன் பாதுகாப்புச் செலவினங்களை சிவில் சமூகம் கேட்பது போல குறைக்கப்பட முடியாதமைக்கும் இதுவே காரணமாகும்.
இது மட்டுமன்றி அரச துறையின் உயர்பதவிகளில் இராணுவ உயர் அதிகாரிகளை நியமனம் செய்வதன் மூலம் அவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய வெறுப்புணர்வைத்தவிர்த்து ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்துகொள்ள வழி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் இராணுவ அதிகாரிகளை பாதுகாப்பு கற்கைகள் தவிர்ந்த சிவிலியன் துறைகளிலும் உயர்கல்வி பெற வாய்ப்பளிப்பதன் மூலம் பாதுகாப்புத் துறையினர் சிவிலியன் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பதவிகளில் அமர்த்தப்படத் தகுதியற்றவர்கள் என்ற கருத்துருவம் தகர்க்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பாதுகாப்புச் செலவினங்கள்
ஆண்டு | பாதுகாப்புச் செலவினம் (பில்லியன் டொலர்களில்) | பாதுகாப்புச் செலவினம்-அரச செலவினத்தின் % | பாதுகாப்புச் செலவினம் மொத்த உள்நாட்டு.உற்பத்தியின் % |
2007 | 1.05 | – | 3.26 |
2008 | 1.51 | – | 3.24 |
2009 | 1.52 | – | 3.16 |
2010 | 1.53 | – | 2.70 |
2011 | 1.75 | 12 | 2.68 |
2012 | 1.47 | 11.8 | 2.16 |
2013 | 1.60 | 14.1 | 2.15 |
2014 | 1.91 | 13.4 | 2.41 |
2015 | 2.06 | 10.8 | 2.55 |
2016 | 1.74 | 12.4 | 2.11 |
2017 | 1.87 | 10.4 | 2.12 |
2018 | 1.64 | 10.1 | 1.84 |
2019 | 1.70 | 8.9 | 2.01 |
2020 | 1.57 | 9.3 | 1.93 |
2021 | 1.56 | 11.5 | 1.86 |
2022 | 1.86 | 12.3 | 2.00 |
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் பாதுகாப்புத் துறை சிப்பாய்களின் சம்பளங்களுக்காகவே செலவிடப்படுகிறதே ஒழிய உபாயரீதியில் முக்கியத்துவம் கொண்ட நாட்டிற்கு பெறமதிச் சேர்க்கையை ஈட்டித்தரவல்ல நடவடிக்கைகளில் அல்ல. நாட்டில் குறித்துக் கூறத்தக்க பாதுகாப்புக் கைத்தொழில் துறை உருவாக்கப்படவோ ஏற்றுமதிகளில் ஈடுபடவோ சாத்தியப்படவில்லை.
ஆனால் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியை விட அதன் பின்னரான காலப்பகுதியில் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்றுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் அப்படி ஒரு பூதம் இருப்பதாகச் சோடித்துக் கொண்டு தொடர்ச்சியாக பாதுகாப்புச் செலவினங்களை உயர்மட்டத்தில் வைத்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவல்ல வளங்களை வீணடிப்பது ஆட்சியாகளின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஒரே காரணத்தாலன்றி மக்களின் பாதுகாப்புத் தேவைக்காக அல்ல.
இதையே மேற்கண்ட பாடலில் பாணினி இடித்துரைத்துள்ளாள். பரிசாகவே இருந்தாலும் தம்மால் யானையைக் கட்டி தீனி போட்டு சமாளிக்க முடியாது என்பதே அந்த பாடலில் பொதிந்துள்ள பொருளாகவுள்ளது. அந்த பாணினிக்கு இருந்த தெளிவுகூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதே உண்மை.