இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது.
“மெய்நிகர் நாணயம்” என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சி இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் திகழ்கிறது. நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் ஏற்கனவே டிஜிட்டல் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டின்போது ரிசர்வ் வங்கி ஆதரவுடன் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி சில்லரை வர்த்தகத்தில் சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் இன்று (டிச 1) வெளியானது.
ரூ.1, ரூ.2, ரூ5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.2000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎப்சி. ஆகிய 4 வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாயை வெளியிட்டு உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி. கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகளும் டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளன. டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவமைப்பை கொண்டது.
முதலாவது டோக்கன் அடிப்படையிலும் 2-வது கணக்கு அடிப்படையிலும் இருக்கும். டோக்கன் முறையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. இந்த டோக்கனை வைத்து இருப்பவர்கள் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்கள். கணக்கு முறையிலான அமைப்பில் டிஜிட்டல் ரூபாய் வைத்து இருப்பவர்கள் இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்து இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது இதனை பயன்படுத்த முடியும். மொபைல் செயலி மூலம் ‘இ-வாலட்’ உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்.