கதிரோட்டம்- 30-10-2026

‘செம்மணி புதைகுழிகள் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த நீண்ட காலப்பகுதியில் அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மற்றும் ஆடைகளின் எச்சங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் அனைத்தை புகைப்படங்கள் மூலமாகவும் காட்சி ஊடகங்கள் ஊடாகவும் பார்த்து கலங்கிய இதயங்களோடு எமது மக்கள் காணப்பட்டாலும் மறுபக்கத்தில் “எமக்காக தங்கள் அர்ப்பணிக்கும் பணிகளினால் ஓய்வின்றி பணி செய்தவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்.
அவர்களில் நாம் ஊடகங்கள் மூலம் பார்த்து வியந்த அகழ்வுப் பணியாளர்கள் அவர்களோடு ஒத்துழைத்த கடமை உணர்வுள்ள தமிழ் பேசும் சட்டத்தரணிகள். நீதிபதிகள். தமிழ் இன உணர்வாளர்கள், அரச அதிகாரிகள், தொண்டர்கள். சில அரசியல் செயற்பாட்டாளர்கள் என பெரியதொரு ‘பட்டாளம்’ எம்மிடம் உள்ளுத என்று மிகுந்த நம்பிக்கைகளோடு காத்திருந்தார்கள் என்பது உலகெங்கும் தெரிந்த ஒரு உண்மையாகும்.
மறுபக்கத்தில் தங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள் அல்லது தங்கள் நெருங்கியவர்களை வீதிகளில் கைது என்ற பெயரில் பிரிந்தவர்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்பார்ப்புக்கள் ‘குழம்பிய நிலையில்’ இருந்திருக்கும் என்பதை அனைவரும் அறிந்திருந்தார்கள். அனால் ஒவ்வொரு எலும்புக்கூடாய் குழிகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுக்கும் நாட்களில் எவ்வாறான உணர்வுகளையும் அல்லது மன வலிகளை அனுபவித்திருப்பார்கள் என்பதை மற்றவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்
இந்த செம்மணி விவகாரத்தில் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர் தரப்பும் குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகம். தமிழகம் புலம்பெயர் உறவுகள் என அனைத்து தரப்பினரும் ஏதோ எங்களை ஆற்றுப்படுத்தும் ஒரு பதில் அல்லது நீதி எங்கள் காதுகளுக்கு கொண்டு வரப்படும் என்று காத்திருந்தார்கள். அகழாய்வுத் துறையில் கலாநிப் பட்டம் ஒருவர் தான் கற்ற கல்விக்கும் பெற்றுக் கொண்ட அனுபவத்திற்கும் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்புக்களை தங்கள் இதயங்களில் ஏந்திய வண்ணம் இருந்திருப்பார்கள். இதுதான் உண்மையிலும் உண்மை.
அந்த நாளும் வந்தது. ஆமாம் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி திங்கட்கிழமை உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் எதிர்பார்த்திருந்த அறிக்கையை பேராசிரியர் ராஜ் சோமதேவ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று 19ம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பித்தார்.
செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பான தடயவியல் அறிக்கையைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்தில் சமரப்பித்த அறிக்கையின் விபரங்களை அவர் நீதிமன்றத்தில் வெளிப்படையாக வாசிக்க அந்த விபரங்கள் செய்திகளாக வெளியுலகிற்கு தெரிந்தன.

அதுவரையிலும் பேராசிரியர் ராஜ் சோமதேவாவை ஒரு பெரும்பான்மை இன மகனாக எமது மக்கள் பார்க்கவில்லை. ஒரு நீதியின் தூதுவனாகவே கற்பனை செய்திருப்பார்கள்.
ஆனால் மக்களும் செம்மணி புதைகுழிகளுக்கு அருகில் எத்தனையோ மாதங்கள் தங்களை அர்ப்பணித்து பணி செய்தவர்களும் திகைத்து நின்றார்கள். அந்த கயவனின் தீர்ப்பைக் கேட்டு இலட்சக் கணக்கானவர்கள் தங்கள் இழந்திருப்பார்கள் நிச்சயமாக. அவர்களது ‘மூளைகள்’ இயங்க மறுத்திருக்கும். கடந்த பத்து நாட்களாக உலகத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் எமது தாயக மக்களும் கவலைகளால் வாடிப்போயிருப்பார்கள். அல்லது பொறுமையின்மையின் உச்சத்திற்கு சென்றிருப்பார்கள்.
ஆம்! அந்த கயவனது அறிக்கை வெளியான நாளான கடந்த 19ம் திகதியிலிருந்து பல குரல் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் நியாயமான அல்லது எமது வலிகளுக்கு மருந்து தடவும் வகையில் எதுவுமே அரசின் பக்கத்திலிருந்து ஆறுதலான வார்த்தைகள் அல்லது உறுதி மொழிகள் எதுவுமே கிட்டவில்லை.
அதே நேரத்தில் வடக்கு கிழக்கிலிருந்து அரசாங்கமோ அல்லது இனவாதிகளோ, அல்லது எமது உறவிகளின் இழப்பிற்கு காரணமானவர்களோ அதிரும் வகையில் ‘உரத்துக் குரல்’ எழுப்பவல்ல ஒரு ‘உண்மையான’ அரசியல் தலைவரைக் காணமுடியவில்லை.
ஆனால் ஊடகவியலாளர்கள் எமது மண்ணிலிருந்து குரல கொடுக்கின்றார்கள். தங்கள் எழுத்துக்கள் மூலமாக அவர்கள் தங்கள் கண்டனத்தையும் தெரிவித்து எது இனிமேல் எமது தரப்பால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றார்கள்.
இந்த வார எமது உதயன் வெளியீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து ‘நிலாந்தன்’ எழுதிய கட்டுரையும் கொழும்பிலிருந்து ‘பாலா’ எழுதியுள்ள கட்டுரையும் எமது மக்களுக்கு சில தரவுகளையும் உண்மைகளையும் எதை நாம் செய்யத்தவறிவிட்டோம் என்பதையும் எடுத்து வந்துள்ளனர்.
நிலாந்தன் அவர்கள் சில இடங்களில் ஆக்குபூர்வமான கருத்துக்களை தனது கருத்துக்களாக முன்வைக்கின்றார். ராஜ் சோமதேவவிற்கு கடுமையான கண்டனங்களை முன்வைத்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கருத்துக்களை அவர் வரவேற்றுள்ளார்.
சர்ச்சைக்குரிய செம்மணி மனிதப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன காரணமாக இருந்திருக்கலாம் என்றும், அங்கு முறையான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் தென்படுகின்றன என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ள கருத்துக்களை நிராகரித்து இதுவரை எழுத்து வடிவில நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால், எமக்கு பலம் சேர்க்கும் வகையிலும் தென்னிலங்கையையும் திட்ட மிட்ட இனவாத நகர்வுகளுக்கு காரணமாக விளங்குபவர்களையும் பயங்கொண்டு ஓட வைக்கும் வேறு அரசியல் தலைவர்களோ, கருத்துக்களை முன்வைக்கக்கூடிய புத்திஜீவிகளோ எம் மத்தியில் அற்றுப் போய்விட்டார்களா என்ற ஏக்கம் எம்மில் பலரின் இதயங்களில் எழுந்து நிற்கின்றது.
இந்த வார எமது ‘உதயன்’ வெளியீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து ‘நிலாந்தன்’ கொழும்பிலிருந்து ‘பாலா’ ஆகியோர’ குறிப்பிட்டுள்ள விடயங்கள் ஆக்குபூர்வமானவை என்பதை அவற்றைப் படிப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்கள் இருவரின் எண்ணங்களிலும் உண்மையான போராட்ட உணர்வுள்ள தலைவர் எவரும் இல்லாத ஒரு சமூகமாய் அதற்குள் ஏமாற்று அரசியல் செய்து தங்கள் பதவிகளைத் தக்க வைக்கும் ‘போலி’ அரசியல்வாதிகள் காணப்படும் அநியாயம் நிலவும் ஒரு காலத்தில் அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க அவற்றைபற்றி சிந்திக்காமல் எதையும் பேசாது மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கின்ற அரசியல்வாதிகளையும் அவர்களது வால்களையும் பதவி மோகத்திலிருந்து அப்புறப்படுத்துவதம் எமது மக்களுக்கு முன்பாக உள்ள ‘பணி’ என்றே நாம் கருதுகின்றோம்.

















