நடராசா லோகதயாளன்
இலங்கையில் அடிப்படை அதிகார அலகான உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி தொடரும் நிலையில் தமிழ்க் கட்சிகள் அதற்குத் தயாராகி வருகின்றன.
எனினும் பெரும்பாலான தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமையின்மையே காணப்படுகிறது. அவ்வாறான நிலையில் வாக்குகள் பிரிவதால் அது தமிழ் மக்களிற்கே பின்னடைவாக அமையக் கூடும் எனும் கவலைகள் தெரிவித்தாலும் கட்சியில் இருந்து வெளியேறிய பலர் மீண்டும் இணைந்து கட்சிகள் பலமடையும் என்ற கருத்தும் வடக்கு கிழக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் பிரதான தமிழ் அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஒருமித்த கருத்து இல்லாத நிலையே உள்ளது. நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளும் தனித் தனியாகப் போட்டியிடுவது எனத் தீர்மானித்துள்ளனர். அதில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ரொலோ மற்றும் புளட் ஆகிய கட்சிகள் கூட்டமைப்பாக இன்றி தனித் தனியாக போட்டியிடுவது என கொழும்பில் செவ்வாய்க்கிழமை (10) அன்று இடம்பெற்ற சந்திப்பில் தீர்மானித்துள்ளனர்.
இந்த மூன்று கட்சிகளும் தனித் தனியாகப் போட்டியிடும் அதே நேரம் கட்சிகள் விரும்பினால் தமக்குள் இணக்கத்தின் அடிப்படையிலும் செயல்பட முடியும் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் 3 கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை இந்த தேர்தலில் உரிமை கோர முடியாது. தேர்தலின் பின்னர் கட்சிகள் பெறும் ஆசனங்களின் அடிப்படையில் ஓர் இணக்கத்தில் தொடர்ந்தும் கூட்டமைப்பாகச் செயல்படலாம் என அந்தக் கட்சிகளும் இணக்கம் கண்டுள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஜெனா ஆகியோருடன் ஆர்.ஆர். மற்றும் ஹென்றி மகேந்திரன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.
ஈ.பி.டி.பியிலும் குழப்பம்
ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் நால்வர் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலே `போட்டியிட மாட்டோம்` என்னும் நிலையில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக இவர்களது வீட்டிற்கு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் ஐவர் அடங்கிய குழு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முன்னாள் முதல்வருடன், ஜீவன், செல்வ்வடிவேல் ஆசிரியர் உட்பட ஐவர் கலந்துகொண்டனர். இங்கே ஆரம்பத்தில் செல்வ வடிவேல் ஆசிரியரும் சிறிது ஆட்டம் கண்டு நின்றார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு மணிநேரம் நீடித்த இந்த சமரச முயற்சி பலனளிக்காததால் மூவரும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பியில் இணைந்து போட்டியிட மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக நேரடியாக வட்டாரங்களில் போட்டியிடாவிடினும் பட்டியலில் பெயர் இணைக்கப்படும் என முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனையும் மூவரும் அடியோடு மறுத்துள்ளனர்.
இதேநேரம் ஈ.பி.டி.பி கட்சியில் தேர்தல் வேட்பு மனு எழுதுவதில் அனுபவம் மிக்கவர் என்று கட்சி நம்புபவர் கொழும்பில் அமைச்சரின் செயலகத்தில் பணியாற்றி வந்தார். அவர் அண்மையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணதிற்கான பட்டியல் தயார் செய்யப்படுகின்றது.
வேட்புமனுக்கள் படிவங்களில் திங்கள் கிழமை எழுதப்படவுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப் பணத்தைச் செலுத்தல்
நடைபெறுமா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஐந்து மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தலா 5 சபைகளிற்குமான கட்டுப் பணம் புதன்கிழமை (11) கட்சியினால் நியமிக்கப்பட்ட மாவட்ட முகவர்களால் செலுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய மாவட்டத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தமது கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஏனைய மாவட்டங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அடுத்தடுத்த நாட்களில் தமது கட்டுப்பணத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் கூட்டமைப்பில் ஒற்றுமை இல்லை அல்லது ஒரு கட்சி மேலாதிக்கம் , ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது போன்ற குழப்பங்களின் காரணமாக வெளியேறும் அல்லது ஏற்கனவே வெளியேறிய கட்சிகள் மட்டத்திலும் ஒற்றுமை காணப்படுவதாக தெரியவில்லை. அங்கும் குழப்பமே நிலவுகின்றது.
அதாவது ஓர் கட்சியின் சின்னத்திலா அல்லது பொதுச் சின்னத்திலா எந்த சபை எந்தக் கட்சிக்கு, ஒரு சபையில் எத்தனை ஆசனம் எந்தக் கட்சிக்கு என்ற பலமான குழப்பம் அங்கும் காணப்படுவதனால் வெளியே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே கட்சியில் போட்டியிடுவார்கள் என்ற நம்பிக்கையும் கிடையாது. இதனால் வேட்புமனுத் தாக்கல் வரையில் கட்சிகள் மற்றும் கூட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்லப்போகின்றது என்பதையே காணக்கூடியதாக உள்ளது.