மலேசிய மனிதவள அமைச்சரிடம் இந்து சங்கம் கோரிக்கை
-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.28:
மலேசிய இந்து சங்க தேசியப் பொறுப்பாளர்களுடன் மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரை அவரின் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை பிப்ரவரி 27 மாலையில் மரியாதை நிமித்தம் சந்தித்ததாக தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்தார்.
மலேசிய இந்திய சமுதாயம் காலங்காலமாக எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கவும் அவற்றுக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மக்கள் பிரதிகளும் அனைத்து இயக்கங்களின் பொறுப்பாளர்களும் இணைந்து மனித வள அமைச்சரின் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று இந்தச் சந்திப்பின்போது கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்து சங்க துணைத் தலைவர் கணைஷ் பாபு, உதவித் தலைவர் திருமதி சாந்தா வேணுகோபால், துணைச் செயலாளர் அழகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பிறப்பு பத்திரம் உள்ளிட்ட குடியுரிமை ஆவணங்கள், முடிவு காணப்படாத மதமாற்றச் சிக்கல், இந்து வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் குருக்கள்-இசைக் கலைஞர்கள் பற்றாக்குறை, குடிநுழைவுத் துறையில் ஏற்படும் தடங்கல், மாணவர் எண்ணிக்கைச் சரிவால் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் வகுப்புகள் எதிர்நோக்கும் சிக்கல், சிறார் பாதுகாப்பு மையங்களில் நடைபெறும் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் இந்து சங்கமே அத்தகைய மையங்களை நடத்துவதற்கான அனுமதி, குருகுலவாச முறையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கான அனுமதி குறித்தெல்லாம் அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, நாட்டில் சுமார் 2,500 இந்து ஆலயங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவற்றின் வளர்ச்சிக்காக ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாக தங்க கணேசன் மேலும் சொன்னார்.
சிறைச்சாலைகளில் உள்ள இந்தியக் கைதிகளுக்கு சமய போதனை மேற்கொள்வது குறித்தும் மலேசிய இந்து சங்கம் தனது சமய-சமுதாய நடவடிக்கைக்கான அரச மானியம் குறித்தெல்லாம் தலைவர் தங்க கணேசன் எடுத்துக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.