ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி. வாசு தற்போது இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரனவத், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
முதல் பாகம் போல இந்த இரண்டாம் பாகத்தையும் நகைச்சுவை பிளஸ் ஹாரர் வகையில் எடுக்க பி. வாசு முயற்சித்து இருக்கிறார். முதல் பாகத்தில் வேட்டையன் அரண்மனைக்கு ரஜினிகாந்த், பிரபு மற்றும் குடும்பத்தினர் செல்வார்கள். அதன் பிறகு அந்த அரண்மனையில் இருக்கும் மர்மம் வெளியாகும். சந்திரமுகி 2 ஆம் பாகத்திலும் முதல் பாகம் போலவே ராதிகாவின் குடும்பத்தினர் வேட்டையபுரம் அரண்மனைக்கு வருகின்றனர். குலதெய்வ வழிபாட்டிற்காக வரும் அவர்கள் அந்த அரண்மனையில் தங்குகின்றனர்.
அவர்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் சந்திரமுகி வெளிப்படுகிறாள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? யாருக்கு என்ன ஆனது? நிஜ சந்திரமுகி யாரை பழி வாங்குகிறாள்? என்பதை முழு நீள படமாக எடுத்துள்ளார் பி.வாசு. இந்த திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லை என்றாலும், முதல் பாகத்தில் நடைபெற்ற பல சம்பவங்களை இந்த திரைப்படம் காட்சிகளாக கொண்டுள்ளது. கடந்த 28-ம் தேதி வெளியான இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தும் சந்திரமுகி 2 படம் 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.