நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் ஸ்ரீமதுரை ஊராட்சி முன்னாள் தலைவராக பதவி வகித்தவர். மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்-அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் பீரோ லாக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காங்கிரஸ் நிர்வாகி தாமஸ் வீட்டில் சுமார் 11 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத மொத்தம் ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.