உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.
ஜனநாயகத்தையும் – மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் – ஏப்ரல் 19. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன்.
தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.