கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது கூட குற்றமாகப் பார்க்கப்படும் ஒரு நாடு. அதற்கு அவர்கள் கொடுக்கும் சட்ட விளக்கங்கள் எதுவாகவும் இருக்கலாம். உண்மை எதுவென்பது முழு உலகத்துக்கும் தெரியும். இறுதிக்கட்டப் போரில் உணவு ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்று கூறி அந்த உணவையே ஒரு நினைவுப் பொருளாக மாற்ற வேண்டும் என்று முதலில் கூறியது தமிழ் சிவில் சமூக அமையம் என்ற ஒரு குடிமக்கள் சமூகம் தான். கஞ்சியை ஒரு நினைவுப் பொருளாக மாற்றி கிராமங்கள் தோறும் அதை சமைத்துப் பரிமாற வேண்டும் என்ற நடைமுறையை அந்த சிவில் சமூகம் தான் பரவலாக்கியது. இப்பொழுது கஞ்சி பரவலாகிவிட்டது. தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் கஞ்சி ஒரு நினைவு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்த வாரம் திருகோணமலையில் நடந்த சம்பவமானது அரசாங்கம் கஞ்சியை ஒரு குற்றப் பொருளாகப் பார்க்கின்றதுஎன்பதனை காட்டுகின்றது. விடுதலைப் போராட்டம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் பயப்படும் அரசாங்கம் கஞ்சிக்கும் பயப்படுகின்றது.கஞ்சியைத் தடுப்பதன் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதனை? சிங்கள மக்களுக்கு உணர்த்துவது எதனை?
தமிழ் மக்களுக்கு நினைவுகூர்தலில் இருக்கக்கூடிய வரையறைகளை அரசாங்கம் உணர்த்த முயற்சிக்கின்றது. அதேசமயம் சிங்கள மக்களுக்கு நினைவு கூர்தலை தடுப்பதில் அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது என்பதனை உணர்த்த விரும்புகிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் தனிச்சிங்கள வாக்குகளை எப்படித் திரட்டுவது என்று அரசாங்கம் சிந்திக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா ?
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் யாருடைய பொது வேட்பாளராகக் களமிறங்குவார் என்பது இன்று வழி தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் ராஜபக்சக்களின் பொது வேட்பாளராகக் களமிறங்கும் சாத்தியக்கூறுகள்தான் அதிகமாகத் தெரிகின்றன. அப்படி ஒரு நிலைமை வந்தால், அவருக்கு இதுபோல தமிழ் மக்களின் உணர்வுகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தேவை. தமிழ் மக்களுக்கு எதிராக ஒடுக்கு முறைகளைத் தீவிரப்படுத்தினால் தமிழ் மக்கள் எதிர்த்துப் போராடுவார்கள். தமிழ் மக்கள் போராடும் போது அதற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு அலை தோன்றும். அதுபோன்ற எதிர்ப்பு அலைகள்தான் தனிச்சிங்கள வாக்குகளைத் திரட்ட உதவும் என்று அரசாங்கம் சிந்திக்கின்றதா ?
அடுத்த 15 ஆண்டுகளிலும் கஞ்சி படிப்படியாகப் பரவி வந்திருக்கிறது. அந்த பரவலாக்கத்துக்குள் தெளிவின்மைகள் உண்டு. குழப்பங்கள் உண்டு. கஞ்சி தொடர்பாக ஒரு பொதுவான “ரெஸிபி” உண்டு. எனினும் கஞ்சியைக் காய்ச்சும் எல்லாருமே அதனைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இறுதிக் கட்டப் போரின் இறுதி மாதங்களில் தேங்காய் இருக்கவில்லை. ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய் பெருமளவுக்கு இல்லாத ஒரு நிலை வந்து விட்டது. ஆனால் அரிசி கோதுமை மா போன்றன இருந்தன. இந்நிலையில் ஒரு பெரிய கிடாரத்தில் அரிசியைப் போட்டு போதிய அளவு நீர் விட்டு வேக விடுவார்கள். அரிசி வேகி வரும்பொழுது, பாலுக்குப் பதிலாக இரண்டு அங்கர் பால் மா பக்கெட்டுகளைக் கரைத்து அதற்குள் ஊற்றுவார்கள்.இப்படித்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டது.
அந்தக் கஞ்சி வழமையாக வீடுகளில் சமைக்கும் கஞ்சிகளைப் போல சுவையானது அல்ல. அது சுவையற்றது. ஆனால் அந்த அந்த நேரத்தில் அது தான் பலருக்கு இன்றியமையாத உணவாக இருந்தது. அது ருசியானதா இல்லையா என்ற கேள்வி அங்கே இருக்கவில்லை. பசிக்கு உணவு அவ்வளவுதான்.எனவே கஞ்சியைப் பரவலாக்கும் பொழுது அதன் ருசியின்மையும் பரவலாக்கப்பட வேண்டும். அந்த ருசியின்மைக்குள்தான் செய்தி இருக்கிறது. அந்த ருசியின்மைக்குள்தான் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட வேண்டிய செய்தி இருக்கிறது.
அந்த ருசியின்மைதான் கடைசிக் கட்டப் போரில் தனித்து விடப்பட்ட மக்களுடைய கண்ணீரின் ருசி. அந்த ருசியின்மைதான் அந்த மக்கள் சிந்திய ரத்தத்தின் ருசி. அந்த ருசியின்மைதான் மரணத்தின் ருசி. தோல்வியின் ருசி; ஒரு யுக முடிவின் ருசி. அந்த ருசியை அல்லது அந்த ருசியின்மையை தமிழ்ப் பரப்பு எங்கும் பரவலாக்கும் பொழுது ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு நினைவுகளும் செய்திகளும் கடத்தப்படுகின்றன. அந்த ருசியின்மைக்கு பின்னால் இருக்கும் செய்தி; அந்த ருசியின்மைக்கு பின்னாலிருக்கும் அரசியல்; உலகத்தின் மனசாட்சியின் கையாலாகத்தனம் போன்றவை தொடர்பான செய்திகள் பரவலாக்கப்படுகின்றன.
ஒரு சிறிய மக்கள் கூட்டம் ஒடுங்கிய ஒரு கடற்பரப்பில் ஏன் தனித்து விடப்பட்டது?என்ற செய்தி அந்த ருசிக்குள் இருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் அந்த சிறிய மக்கள் கூட்டத்தை ஏன் கைவிட்டன? என்ற கேள்வி அந்த ருசிக்குள் இருக்கிறது.உலகப் பெரு நிறுவனமாகிய ஐநா போன்ற நிறுவனங்கள் ஏன் அந்த மக்களைக் காப்பாற்றவில்லை? என்ற கேள்வி அந்த ருசிக்குள் இருக்கிறது.
இன்று காசாவில் இனப்படுகொலை செய்யப்படும் பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்க ஒரு தென்னாபிரிக்கா இருக்கிறது. வேறு சில நாடுகள் இருக்கின்றன. ஆனால் அன்றைக்கு தனித்து விடப்பட்டிருந்த; சுற்றி வளைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அப்படி எந்த நாடும் பகிரங்கமாக முன்வரவில்லை. ஏன் முழு உலகமும் ஈழத் தமிழர்களை கைவிட்டது ? என்று அந்த கேள்வி அந்த ருசியின்மைக்குள் இருக்கிறது.
எனவே,ஈழத் தமிழர்கள் இக் கேள்விகளை தமது வீடுகளின் சாப்பாட்டு அறைகளிலும் வரவேற்பு அறைகளிலும் பொது இடங்களிலிலும் கேட்டு அவற்றுக்குரிய பதில்களை புதிய தலைமுறைகளுக்கு வழங்க வேண்டும். மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு அது தொடர்பாக அறிவூட்ட வேண்டும்.
உலகில் பெற்றோர் குழந்தைகளை உறங்க வைப்பதற்குக் கதைகளைச் சொல்லுவார்கள். அவை பெரும்பாலும் அறநெறிக் கதைகளாகவும் நீதிநெறிக் கதைகளாகவும் இருப்பதுண்டு. ஆனால் ஈழத் தமிழ் பெற்றோர் அறநெறிக் கதைகளையும் நீதிநெறி கதைகளையும் சொன்னால் மட்டும் போதாது. 15 ஆண்டுகளுக்கு முந்திய தமது இறந்த காலத்தின் கதைகளையும் அவர்கள் சொல்ல வேண்டும். இறுதிக்கட்ட போரில் எங்கே மனித குலத்தின் அறம் பிழைத்தது?நீதி பிழைத்தது?என்பதையும் இளைய தலைமுறைக்கு கதைகளாகச் சொல்ல வேண்டும். பாடல்களாகச் செல்ல வேண்டும்.
இது திரும்பத் திரும்ப காயங்களைக் கிளறும் ஒரு நடவடிக்கை என்றும் குணப்படுத்தலுக்கு எதிரானது என்றும் ஒரு தரப்பு கத்தத் தொடங்கும். திரும்பத் திரும்ப இன முரண்பாட்டை அதிகப்படுத்தும் விதத்தில் இந்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டுமா என்று அவர்கள் கேட்பார்கள். இப்பொழுதே கேட்கின்றார்கள்.ஒரு தமிழ் பொது வேட்பாளர் இனவாதத்தைத் தூண்டிவிடுவார் என்று ஒரு தொகுதித் தமிழர்கள் கேட்கின்றார்கள். ஆனால் வெடுக்கு நாறி மலையிலும் மயிலத்த மடுவிலும் திருகோணமலையில் கஞ்சி காய்ச்சிய பெண்களின் விடயத்திலும் எது தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கின்றது? என்று கேட்டால் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.
எனவே இறந்த காலத்தை நினைவூட்டுவது என்பது ஆறிப்போன காயத்தை மீண்டும் கிழித்து ரத்தத்தைப் பார்ப்பது அல்ல. அல்லது அயர் மூடிய காயத்தின் அயரை உரித்து அதைப் புதுப்பிப்பதும் அல்ல. இங்கு எந்த ஒரு காயமுமே ஆறவில்லை என்பதுதான் முக்கியமான செய்தி. காயங்கள் அப்படியே உண்டு. அவை கூட்டுக் காயங்கள். குணப்படுத்தவியலாக் காயங்கள். பலஸ்தீன கவிஞர் ஒருவர் கூறுவது போல “குணப்படுத்தவியலாத காயமாக உனது இணைவை என்றென்றும் பேணுவோம்” என்பதே சரி. அவை குணப்படுத்தவியலாக் காயங்கள். அந்தக் காயங்களை யார் எப்படிக் குணப்படுத்தலாம் ?
அரசியல் ரீதியாக அந்த காயங்களுக்கு காரணமாக இருக்கின்ற ஒடுக்கு முறையை நிறுத்த வேண்டும்.இனப்படுகொலைக்கு உள்ளாகிய ஈழத் தமிழர்களுக்கு பரிகார நீதி கிடைக்க வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான் இனப் பிரச்சினைக்குமான தீர்வாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு இனிக் காயங்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தரக்கூடிய பொருத்தமான தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அது ஒர் அரசியற் குணப்படுத்தல்.
அதேசமயம் உளவியல் ரீதியாகவும் குணப்படுத்தல் அவசியம். உளவியல் நோக்கு நிலையில் காயங்களைக் கிளறுவது; காயங்களைப் புதுப்பிப்பது தவறு என்று சுட்டிக் காட்டப்படக்கூடும். ஆனால் அதில் உண்மையில்லை. அவை ஆறிப்போன காயங்கள் அல்ல. இப்பொழுதும் ஆறாத காயங்கள் என்பதுதான் உண்மை. கடந்த 15 ஆண்டுகளாக அவை ஆறவில்லை.எனவே ஆறாத காயங்களை எப்படி சுகப்படுத்தலாம் என்பது உளவியல் ரீதியாகவும் சிந்திக்கப்பட வேண்டும்.சில மனநல மருத்துவர்கள் கூறுவது போல, காயங்களைத் திறந்து; காயங்களை வாசித்து; காயங்களை எழுதி; காயங்களை இசைத்து; காயங்களைப் பாடி; காயங்களை வரைந்து; காயங்களை நிகழ்த்தி; காயங்களை கடக்கலாம். இந்த விடயத்தில் மருத்துவர்களோடு கலைஞர்களும் சேர்ந்து உழைக்கலாம்.மதத் தலைவர்கள் உழைக்கலாம்.ஏனென்றால் குணப்படுத்தல் செய்முறை என்பது ஒரு விதத்தில் பண்பாட்டுச் செய்முறையும்தான். அது ஒரு கூட்டுச் செய்முறை.
கூட்டுக் காயங்களுக்கு கூட்டுச் சிகிச்சைதான் தேவை.கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சைதான் தேவை. எனவே தனிய அதனை மருத்துவர்கள் மட்டும் கையாள முடியாது. அதை ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே ஒரு கூட்டு நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டும். அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள்,கலைஞர்கள்,புத்திஜீவிகள்,ஊடகவியலாளர்கள்.,உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் அதில் ஒன்றிணைய வேண்டும்.
அரசியல் ரீதியாக தீர்வு மேலிருந்து கீழ்நோக்கி வர வேண்டும். அதே சமயம் உளவியல் ரீதியாக ஒரு தீர்வை ஈழத் தமிழர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கீழிருந்து மேல் நோக்கி கட்டியெழுப்ப வேண்டும். அது ஒரு கூட்டுச் செய் முறையாக அமைய வேண்டும்
கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவதற்கு ஈழத்தமிழ் பரப்பில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களும் கூட்டாக உழைக்க வேண்டும். கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவது எப்படி என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.கடந்த 15ஆண்டுகளாகவும் நினைவு கூர்தல் என்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையிலும் ஒரு சடங்காகவே காணப்படுகின்றது. நினைவுகளை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவதற்கான அரசியல் செய்முறைகள் தாயகத்தில் பலவீனமாக இருக்கின்றன.
தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அப்படித்தான் இருக்கின்றது.கூட்டு நினைவுகளை,கூட்டுக் காயங்களை, கூட்டுத் துக்கத்தை; கூட்டும் மனவடுவை, கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவதற்கு பதிலாக, நினைவுகளைக் கொச்சைப்படுத்தும் நிலைமைகள். வளர்ச்சியடைந்து வருகின்றன.கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து சிதறிக் கொண்டே போகின்றது. அதேசமயம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக மூன்றாவது புலப் பெயர்ச்சி அலை ஒன்று தோன்றியிருக்கிறது.அதாவது இனமும் சிறுகின்றது.நிலமும் சிறுக்கின்றது.
இப்படிப்பட்டதோர் வீழ்ச்சிகரமான பின்னணியில்,நினைவுகள் தான் தமிழ் மக்களை ஓரளவுக்காவது கூட்டி கட்டி வைத்திருக்கின்றன. நினைவு கூர்தல் தான் தமிழ் மக்களை ஓரழுவுக்காவது திரளாக வைத்திருக்கின்றது. எனவே,தமிழர்கள் நினைவுகளைச் சுமக்க வேண்டும். நினைவுகளைப் போற்ற வேண்டும்.நினைவுகளை ஆக்க சக்தியாக பண்புருமாற்றம் செய்ய வேண்டும். நினைவுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.