பு.கஜிந்தன்
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனர் வடமலை கௌதமனின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அச்சிடப்பட்ட பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியத்தில் தீவிர பற்றுக்கொண்ட இயக்குநர் கௌதமனின் மகளான கௌ.பரஞ்சோதிக்கும் தொழிலதிபர் கண்ணனின் மகன் க.குணாநிதிக்கும் சென்னை எம்.ஜி.எம் பீச் ரெசார்ட் அரங்கில் 06-04-2026 அன்று திங்கட்கிழமை 06) திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடந்தேறியது.
அந்த நிச்சயதார்த்த பத்திரிகையில் தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரன் மற்றும் அவரது பாரியாரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் “தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் – மதிவதனி ஆசியோடு மண் உறுதி மகிழ்ச்சி நாள் விழா” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிச்சயதார்த்த பத்திரிகைக்கு பலரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

விழா நிகழ்வில் திரைக்கலைஞர் சிவக்குமார், , நீதியரசர் கலையரசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் அமைச்சர் ஏகே, மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தொழிலதிபர்கள் டெல்டா செல்வம், ராம்ஜி, கோலடி துரை ஜெயராமன் (ஐ.ஏ.எஸ்), சந்தானம் (ஐஏஎஸ்), சகாயம் ஐஏஎஸ், ஜெயகாந்தன் (ஐஏஎஸ்), தட்சிணாமூர்த்தி (ஐஏஎஸ்), நடிகர்களான சந்தானம், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ஏகன், பிரிகடா, கராத்தே ராஜா, கிங்காங், இயக்குநர்கள் ஆர்வி.உதயகுமார், கதிர், பேரரசு, எழில், வசந்தபாலன், கரு.பழனியப்பன், செழியன், நம்பி, வீ.மா.செந்தில்குமார், அசோக் பாலாஜி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், எடிட்டர் ராஜா முகமது தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், சிவசக்தி பாண்டியன், மகிழ்ச்சி த.மணிவண்ணன், பம்மல் சரவணராஜா, நிர்மல் சரவணராஜா, குறள் அமுதன், சுந்தரவரதன், கமலக்கண்ணன், கவிஞர் ஜெயபாஸ்கரன், பதிப்பாசிரியர்கள் அண்ணல், வேடியப்பன், பேராசிரியர், எழுத்தாளர் ஆறு.இராமநாதன், ஊடகவியலாளர்கள் ஏகலைவன், கார்ட்டூனிஸ்ட் பாலா, சமூக போராளி அற்புதம் அம்மாள், அவரது மகன் பேரறிவாளன், புலவர் இரத்தினவேலன், ஆவல் கணேசன் உள்ளிட்ட தமிழ் சான்றோர்களும் சமூக பேராளுமைகளும் கலந்துகொண்டு மணமக்களை மனம் நிறைந்து வாழ்த்தினர்.
அரங்கிற்குள் வரும் வழிநெடுக சங்ககாலம் தொட்டு இன்று வரையிலான மூலவன் முருகன், தொல்காப்பியர், ஒளவையார், கம்பர், வள்ளுவர், வள்ளலார் தொடங்கி, கரிகாலன், இராஜராஜ சோழன், மற்றும் தமிழ்த் தேசிய வழிகாட்டிகளான மேதகு பிரபாகரன் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், கௌதமனின் தந்தையும் தமிழ்த் தேசிய போராளியுமான தோழர் வடமலை, பாரதிதாசன், திருவிக, மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் வரையிலான உணர்வுமிக்க பதாகைகளும் வரிசைகட்டி வரவேற்றது வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.






















