சித்திரை வந்திடவே தோன்றிடும் இன்பமும்;; தன்னாலே!
புத்தரைப் பூசிக்கும் பௌத்தர்க்கும் புண்ணியப் பண்டிகையே!
புத்துடை பூண்டு புதுப்பொலிவும் பூரிப்பும் பெற்றோமே!
மத்தகம் வாங்கியே மாதாக்கள் இன்பமுற வைத்தோமே!
மருத்துநீர் மொண்டே மகிழ்வுடன் மஞ்சன மாடியுமே!
மருதடி மூலவர் முன்னால் மனதினால் மன்றாடி
கருத்துடன் கண்ணியம் காருணியம் காதலும் கைக்கொண்டே!
பருப்புடன் பாகுபோல் பண்பாய்ப் பயணிப்போம் பாரினிலே!
முற்றம் பெருக்கியே! முத்துமுத்தாய்க் கோலமு மிட்டோமே!
பற்றுடன் பால்விட்டுப் பொங்கலைப் பக்தியாய்ப் பொங்கினோமே!
சுற்றமும் சூழ்ந்திடவே சொந்தங்கள் சேர்ந்தே சுவைத்தோமே!
பெற்றோர் பெரியவர் பண்பொடு சேர்ந்தே பழகினரே!
வாட்டிடும் வெய்யோனும் வந்துமே எம்மை வருத்தினாலும்
போட்டிகள் வைத்து பெரிதாகப் பேரமும் பேசினோமே
நாட்டியம் ஆடியும் நற்கவி பாடியும் நண்ணினோமே
பாட்டிகள் மெச்சிடப் பட்டளித்துப் பாராட்டுப் பெற்றோமே!
வறுமை வறண்டிட விக்கினம் நீங்கிட வாழ்த்தியுமே
சிறுமை சிதைந்துமே தாரணி சீர்பெற்றுத் தங்கிடவே!
கறுப்புகள் நீக்கியே கச்சிதம் கம்பீரமும் காத்துமே!
மறுமுறை வந்திடு மக்கள் மனது மலர்ந்திடவே!
01.மத்தகம் …தலையணி 02. மொண்டு …-எடுத்து 03. மஞ்சனமாடி …..நீராடி 04. நண்ணினோம் …சேர்ந்தோம் 05. விக்கினம் …துன்பம் 06. தாரணி…-பூமி 07. கறுப்புகள்….குற்றங்கள்.
ஆக்கம் ……..
பாவலர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.






















