பாதுகாப்பு வலயமென்று பசப்பு வார்த்தைகூறி
பரந்து வாழ்ந்த எமது பண்பான மக்களை
முள்ளிவாய்க்கால் என்ற மரணப்பொறிக்கு வரச்செய்து
முழுக் கதையையும் முடித்துவைத்த நாளே மே 18
பதினேழு ஆண்டுகள் பறந்தோடி விட்டாலும்
நித்தம் நித்தம் நினைவில் வரும்நாளே இந்நாள்
பாதுகாப்பென நம்பிய பதுங்குகுழிகள் மரணக்குழியாகின
பாதகர் மருத்துவ மனைகளையும் பதம் பார்த்தனர்
காயப்பட்டவரும் காயம் ஆற்றியோரும் காற்றோடு கரைந்தனர்
கொத்துக் குண்டுகளையும் கந்தக எறிகணைகயையும் கொட்டி
கொத்துக் கொத்தாக எம்மக்களை கொன்றொழித்த நாள்
கை கால் இழந்தும் கட்டிய கணவனை இழந்தும்
பெற்ற பிள்ளையை இழந்து பிரியமான மனைவியை இழந்தும்
பேதலித்து நின்றனர் பெற்றோரும் உறவுகள்
கொஞ்சி விளையாடிய குழந்தைகள் முதியவர்
குடும்பமாகக் கொல்லப்பட்ட கொடிய நாள்
வீர மங்கையரான எமது விவேகப் பெண்களை
சிங்கள மிருகங்கள் சின்னாபின்ன மாக்கியநாள்
சரணடைந்தோரையும் சக்தியற்று இருந்தோரையும்
இனவெறியர் இல்லாமல் ஆக்கிவிட்ட நாள்
எஞ்சிய மக்களை ஏமாற்றி அழைத்துச்சென்று
முட்கம்பி வேலிகளுள் முடக்கிய நாள்
வெள்ளைக் கொடியோடு போனஎம்வீரர்களை
வீணர்கள் வெட்டி வீழ்த்திய நாள்
வற்றிய முலையில் வாய் வைத்தபடி
வெந்துபோன வாலிபம் மாறாத தாயும் சேயும்
முழுமாதக் கற்பிணிகளை மூத்தோரை
பல்குழல் பீரங்கிகள் பதம்பார்த்த நாள்
சுடலை காணாத செத்த பிணங்களும்
நினைத்து நினைத்து நிலைகுலைந்த உறவுகளும்
தாலாட்டுக் கேட்டு தூங்கிய சிறிசுகள்
ஒப்பாரி ஓசையுடன் ஓய்ந்துபோன நாள்
கொள்ளிக் குடமுமின்றி கொள்ளிவைக்க ஆளுமின்றி
குதறி எறியப்பட்ட குடும்ப உறவுகள்
ஐ.நா வரும் அமெரிக்கா வரும் இந்தியா வருமென
எதிர்பார்த்து ஏங்கிய மக்கள் எல்லோரையும்
கூட்டுச் சதிசெய்து கொன்றொழித்த கொடூரநாள்
சிதறுண்ட சீவன்கள் சின்னாபின்ன மாகியபடி
காரிருள் கடந்த காலை வேளையில்
நடைப்பிணங்களும் நடவாத பிணங்களுமே எஞ்சியிருந்தன
முள்ளிவாய்க்கால் முடிந்த முடிவல்ல ஆரம்பம்
மே 18 அழுவதற்கல்ல எழுவதற்கு
காகிதத்தில் இடம் உள்ளது கவிதை எழுத
இதயத்தில் வரிகள் இல்லை வலிகளைத் தவிர.
ஆக்கம்
பாவலர் மார்க்கம் சந்திரன் 416 844 7453
(2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலத்தின்
நினைவை ஒட்டி எழுதப்பட்ட கவிதை.)






















