தனக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்களையடுத்து சங்கீத்ஷன் கூறிய ” நான் சிறைக்குள் இருந்தபோது வெளியில் நடந்த எதுவுமே எனக்குத் தெரியாது.என்னை விடுவிக்க யார் எல்லாம் உதவினார்கள் என்று கூடத்தெரியாது.எனக்காக வாதாடிய சட்டத்தரணிகள் யார் என்று கூடத்தெரியவில்லை.இப்போது வெளியில் வந்ததுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிகின்றேன். முழுவதும் அறிந்த பின்னர் எனது கருத்தைக்கூறுகின்றேன்.எனக்காக போராடிய மக்களுக்கு நன்றி” என்ற ”புரூடா ”கதைதான் இன்னும் கேவலமானது–.ஆகவே இந்த விடயத்தில் சங்கீத்ஷன் நேர்மையாக நடக்கவில்லை.அவர் தனக்காக போராடியவர்களை இந்தக் கருத்தின் மூலம் இன்னும் இழிவு படுத்தியுள்ளார்.
–கே.பாலா
வடக்கின் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனின் கைதும்அநுரகுமார அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்டமும் கடந்த இரு வாரங்களாக தமிழர் தாயகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள்,கண்டனங்கள் எனக் கொதி நிலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பாடகர் சங்கீத்ஷன் சாதாரண சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடுவிப்பு பாடகர் சங்கீத்ஷனுக்கு விடுதலை,அவரின் தாயாருக்கு நிம்மதி, அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.ஆனால் சங்கீத்ஷனின் விடுதலைக்காக போராடிய, குரல்கொடுத்த, அழுத்தங்கள் பிரயோகித்த, ஆர்ப்பாட்டங்கள் செய்த தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் , தமிழ் சட்டத் தரணிகள், தமிழ் மக்கள். சமூக அமைப்புக்களுக்கு அவரின் இந்த விடுதலை ”வெற்றியா” என்று கேட்டால் இல்லை ”தோல்வி, அவமானம், தலைக்குனிவு” என்றே நடந்தேறிய சம்பவங்கள் கூறுகின்றன.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷன் கைது செய்யப்பட முன்னர் தமிழர் தேசமோ பெருமளவிலான தமிழ் மக்களோ அவரை அறிந்திருக்கவில்லை. அந்தளவுக்கு அவர் பிரபலமானவர் அல்ல.ஆனால் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் வகையில் பாடினார் என்ற குற்றச்சாட்டில் அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே தமிழர் தேசம் ”யார் இந்த சங்கீத்ஷன்” என்று தேடத்தொடங்கியது. அவரின் யூரியூப். பேஸ்புக் எல்லாம் பார்வையாளர் எண்ணிக்கையில் அதிரடி காட்டின.அவர் தமிழர் தேசத்தின் அடையாளமானார்.
தென்னிலங்கையிலுள்ள சில சமூக ஊடகங்கள் சங்கீத்ஷனின் பாடல்களை ”மனதில் விஷத்தை வாரி இறைக்கும் இசை நிகழ்ச்சி” என்று தலைப்பிட்டு புலனாய்வுப் பிரிவினரதும் பொலிஸாரினதும் கவனத்திற்கு என்று வெளியிட்ட பதிவுகளையடுத்தே சங்கீத்ஷன் பொலிஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.இதனால் அநுரகுமார அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதுடன் சங்கீத்ஷனை விடுதலை செய்யக்கோரி வடக்கில் மக்கள் போராட்டங்களும் வெடித்தன.
ஆனால் ”தவளையும் தன்வாயால் கெடும்”என்பதுபோல் ஒரு வடக்கு எம்.பி. தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட சங்கீத்ஷனுக்கு எதிரான இழிவான கருத்துக்கள், வீடியோக்கள் மூலம் சங்கீத்ஷனை பொலிஸாருக்கு காட்டிக்கொடுத்தது ”தான்” என்பதை அவரையறியாமலேயே வெளிப்படுத்தினார். அதாவது சங்கீத்ஷன் மீது பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் ”அம்பு”பாய அந்த வில்லாளனே காரணமாக இருந்தார் அதன் முழு விபரங்களை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம் .
சங்கீத்ஷனை யார் காட்டிக்கொடுத்தது என்பதற்கு அப்பால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான அவரின் கைதை மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச மட்டம் வரை பெரிய விவகாரமாக்கி அது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து, தமிழர் தேசத்தில் அக் கைதை ஒரு கொதி நிலையாக்கி சங்கீத்ஷனின் விடுதலைக்கு அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து நீதிமன்றத்திற்கும், சிறைச்சாலைக்கும் அலைந்து திரிந்து ஒரு பெரும்பணியை தமிழரசுக்கட்சியும் அதன் பிரபல சட்டத்தரணிகளான சுமந்திரனும் சயந்தனுமே முன்னெடுத்திருந்தனர் . அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதன் சட்டத்தரணியும் கூட சங்கீத்ஷனின் விடுதலைக்காக செயற்பட்டனர் .
சங்கீத்ஷனின் கைதால் வடக்கு மாகாணமே கொந்தளித்துப் போயிருந்த நிலையில் மாவட்டங்கள் தோறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்த நிலையில் அநுரகுமார அரசாங்கத்தின் வடக்கு மாகாண எம்.பி.க்கள் மௌனம் காத்தனர்.நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த எம்.பி.க்கள் தமது வெற்றிக்காக யாழ்ப்பாணத்தில் புலிகளின் பாடல்களை மேடைகளில் ஒலிபரப்பினார்கள். அப்போது ஏன் கைது செய்யப்படவில்லை என்ற விமர்சனங்கள் ,கேள்விகள் எழுந்தபோது தாம் அவ்வாறு புலிகளின் பாடல்களை ஒருபோதும் ஒலிபரப்பவில்லை என மறுத்தார்கள்
அநுரகுமார அரசாங்கத்தின் யாழ் மாவட்ட 3 எம்.பி.க்களில் ஒருவரும் அடிக்கடி கோமாளித்தன கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குபவருமான இளங்குமரன் எம்.பி. ஒரு படி மேலே சென்று ”பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதால் தான் அவர் தற்போது பிரபலமடைந்துள்ளார்.இல்லாதுவிட்டால் அவரை யாருக்குமே தெரிந்திருக்காது”என கிண்டலாக கருத்து வெளியிட்டிருந்தார். இவ்வாறான நிலையில்தான் இதே இளங்குமரன் எம்.பி.யுடன் இணைந்து சங்கீத்ஷனும் அவரது தாயாரும் சங்கீத்ஷனின் விடுதலைக்காக போராடிய தமிழர் தேசத்தினது முதுகில் குத்தியுள்ளனர்.
சங்கீத்ஷனின் கைது தொடர்பாக பொலிஸார் சமர்ப்பித்த ‘பி’ அறிக்கையில் அவரது கைதுக்கும் தடுப்புக்கும் பொலிஸார் குறிப்பிட்ட பயங்கரவாதத் தடைச்சட்டப் பிரிவு என்ற பெயரில் ஒரு பிரிவுசட்டத்தில் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மூன்றாவது பிரிவில் பொலிஸார் குறிப்பிட்டபடி ஒரு பிரிவேஇல்லை. அப்படி இருக்க, அத்தகைய இல்லாத ஒரு பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது தவறு என்று சுட்டிக்காட்டி அதனைமேல் நீதிமன்றத்தில் மீளாய்வுமனு சமர்ப்பித்து விளக்கமறியல் உத்தரவை செல்லுபடி அற்றதாக அறிவிக்கும் நடவடிக்கையை சங்கீத்ஷன் விடுவிக்கப்படுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்னர் கூட அவரின் சட்டத்தரணியாக இருந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட சட்டத் தரணியான சயந்தன் முன்னெடுத்திருந்தார்.
தமிழரசுக் கட்சியின் சட்ட நடவடிக்கைகளினாலும் தமிழ் மக்களின் போராட்டங்களினாலும் ஜனாதிபதியுடனான தொலைபேசிக் கலந்துரையாடலினாலும் சாதாரண சட்டத்தின் கீழ் சங்கீத்ஷன் விடுதலை செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டு சட்டமாஅதிபர் அதற்கான முடிவை எடுத்துவிட்ட நிலையில் ”கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட”கதையாக இளங்குமரன் எம்.பி உள்ளே நுழைந்த நிலையில் அதுவரையில் சங்கீத்ஷனின் சட்டத்தரணியாகவிருந்த சயந்தனுடன் பின்னால் திரிந்த சங்கீத்ஷனின் தாயார் சயந்தனை அவருக்கு அறிவித்தலே கொடுக்காமல் மாற்றி வேறு ஒரு சட்டத்தரணியுடன் இணைந்து விளக்கமறியலில் இருந்து சங்கீத்ஷனை பிணையில் எடுத்துள்ளார்.
தாயார் தான் மகன் மேல் உள்ள பாசத்தில் அப்படி செய்துவிட்டார் என்று வைத்துக்கொண்டாலும் இளங்குமரன் எம்.பி.யினாலேயே வெளியே வந்தவராகத் தம்மைக் காட்டி வெளியே வந்த கையோடு பாடகர் சங்கீத்ஷன் இளங்குமரன் எம்.பியின் கைகளை பிடித்தவாறு ‘’ இந்த அண்ணனால்தான் தான் நான் வெளியில் வந்து நிற்கிறேன். எனக்கு சப்போர்ட் பண்ணிய எல்லோருக்கும் நன்றி’’ என்று தெரிவித்து சமூக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தமை ”புரூட்டஸ் நீயுமா?” என்ற கேள்வியையும் அதிர்ச்சியையுமே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி விட்டுள்ளது.
ஆனால் அதன் பின்னர் தனக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்களையடுத்து சங்கீத்ஷன் கூறிய ” நான் சிறைக்குள் இருந்தபோது வெளியில் நடந்த எதுவுமே எனக்குத்தெரியாது. என்னை விடுவிக்க யார் எல்லாம் உதவினார்கள் என்று கூடத்தெரியாது. எனக்காக வாதாடிய சட்டத்தரணிகள் யார் என்று கூடத்தெரியவில்லை.இப்போது வெளியில் வந்ததுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிகின்றேன். முழுவதும் அறிந்த பின்னர் எனது கருத்தைக்கூறுகின்றேன்.எனக்காக போராடிய மக்களுக்கு நன்றி” என்ற ”புரூடா ”கதைதான் இன்னும் கேவலமானது.
இவர் சிறைக்குள் இருந்தபோது தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணியான சயந்தன். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஸ்ட சட்டத்தரணி காண்டீபன், ஸ்ரீதரன் எம்.பி, சங்கீத்ஷனின் தாயார் சிறையில் சங்கீத்ஷனை சந்தித்துள்ளனர். இவர்கள் கூடவா உனது கைதுக்கு எதிராக வெளியே பெரும் போராட்டங்கள் நடக்கின்றன என்று கூறவில்லை. அல்லது சங்கீத்ஷனுக்கு சுமந்திரன், ஸ்ரீதரனைக் கூடவா தெரியவில்லை? ஆகவே இந்த விடயத்தில் சங்கீத்ஷன் நேர்மையாக நடக்கவில்லை. அவர் தனக்காக போராடியவர்களை இந்தக் கருத்தின் மூலம் இன்னும் இழிவு படுத்தியுள்ளார்.
சங்கீத்ஷன் இவ்வாறு கூறியதை, இத்தகைய சர்ச்சைக்குரிய அல்லது அரசியல் பின்னணி கொண்ட கைதுகளில், விடுதலை கிடைக்கும்போது சில மறைமுக நிபந்தனைகள் விதிக்கப்படலாம். வெளியே வந்ததும் இந்தத் தரப்புக்கு நன்றி கூற வேண்டும் அல்லது “அரசாங்கத்தையோ, பொலிஸையோ விமர்சிக்கக் கூடாது” போன்ற அழுத்தங்கள் அல்லது சமரசங்கள் பின்னணியில் இருந்திருக்கலாம். மீண்டும் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்கோ அல்லது தனது கலைத் துறையை எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதற்கான சுய பாதுகாப்புச் சிந்தனை காரணமாக இருக்கலாம் எனவும் நியாயப்படுத்துபவர்களும் உண்டு.
ஆனால் ஒரு மனிதனின் உண்மையான முகம் இக்கட்டான காலகட்டங்களில்தான் வெளிப்படும் என்பார்கள். அந்த வகையில், சங்கீத்ஷனின் செயல்பாடே அவரைப் பற்றிய உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டது. பொதுவெளியில் தங்களின் சுயநலத்திற்காகவோ அல்லது பாதுகாப்பு என்ற பெயரிலோ கொள்கைகளையும், தங்களை வாழ வைத்த மக்களையும் அடகு வைக்கும் நபர்களை வரலாறு என்றும் “நம்பிக்கைத்துரோகி” என்றே அடையாளப்படுத்தும். மக்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், சக மனிதனுக்காகவும் காட்டிய அஹிம்சைப் போராட்ட வடிவத்தை, இந்த சொல்லிசைப்பாடகர் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்.
பாடகர் சங்கீத்ஷன் கைதுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் தேசம் ஒன்றுதிரண்ட நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமென்ற அழுத்தங்கள் மீண்டும் சர்வதேச மட்டத்தில் வெளிவந்த நிலையில் அநுரகுமார அரசாங்கம் சங்கீத்ஷனை விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அப்படி விடுவித்தால் தமிழர் தேசத்தின் எதிர்ப்புக்கு அநுரகுமார அரசாங்கம் அடிபணிந்து விட்டது” என்று தமிழர்களும் தமிழ் தேசிய கட்சிகளும் வீராப்பு பேசுவார்கள் என்பதாலேயே சங்கீத்ஷனின் தாயாருடன் இளங்குமரன் எம்.பி. மூலம் சில ”டீல்” களை செய்து தமிழரசு சட்டத்தரணியை மாற்றி சங்கீத்ஷனை பிணையில் விடுவித்ததுடன் அவர் விடுதலைப் புலிகளையும் தமிழர் போராட்டத்தையும் புகழ்ந்து பாடிய வாயினாலேயே அரசாங்கத்தையும் இளங்குமரன் எம்.பி.யையும் புகழ வைத்துள்ளது அநுரகுமார அரசாங்கம்.
ஆக,சங்கீத்ஷனின் விடுதலைக்கு போராடி அதனை சாத்தியமாக்கிய தமிழர் தேசமும் தமிழ் சட்டத்தரணிகளும் தலைநிமிர்ந்து நிற்கவேண்டிய நிலையில் ஏமாற்றத்தால் , வேதனையால், வெறுப்பால் தலைகுனிந்து நிற்க , பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்போம் என வாக்குறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய பின்னர் அதனைப் பயன்படுத்தி தமிழர்களை கைது செய்யும் அநுரகுமார அரசாங்கம் வெட்கித் தலைகுனிவதற்கு பதிலாக தலைநிமிர்ந்து நிற்கின்றது. தமிழர்தேசம் தலைகுனிவதற்கும் பேரினவாதம் தலைநிமிர்வதற்கும் வழக்கம் போலவே சில தமிழர்களின் காட்டிக்கொடுப்பும் கழுத்தறுப்பும் முதுகில் குத்துவதுமே காரணமாகவிருக்கும்.பாடகர் சங்கீத்ஷன் விடயத்திலும் இவைதான் காரணமாகவுள்ளன. இதுதான் தமிழர் தேசத்தினதும் தமிழர்களினதும் சாபக்கேடு.
அதுமட்டுமல்ல பாடகர் சங்கீத்ஷனும் அவரது தாயாரும் தமிழர் தேசத்தின் முதுகில் குத்தியதால் தமிழ் உணர்வாளர்களுக்கு பேரினவாதத்தால் பிரச்சினைகள் எழும்போதெல்லாம், கைதுகள் நடக்கும் போதெல்லாம் தாமாக முன்வந்து அஹிம்சை ரீதியாக போராடும்,. சட்டரீதியாக போராடும் தரப்புகள் எல்லாம் இனிவரும் நாட்களில் ஒரு தடவைக்கு பல தடவைகள் சிந்தித்துத்தான் களம் இறங்குவார்கள். இதனைத்தான் பேரினவாதமும் எதிர்பார்க்கின்றது.






















