– விரிவுரையாளர் இந்திக தென்னகோன் உரை
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவேயாகும் என்று விரிவுரையாளர் இந்திக தென்னகோன் தெரிவித்தார்.
தேசிய மாணவர் வீரர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றும்போது, பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் பொலிஸாரின் தலையீடு கோரப்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையும், அதன் விளைவாக மாணவர் பத்மசிறி கொன்னவெல படுகொலை செய்யப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.
தற்போதைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சூழல் குறித்துப் பேசிய அவர், இது ஒரு விமர்சனமாக அல்லாமல், அன்றைய காலச் சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்காகவே தாம் இதனைப் பகிர்ந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார்.
அன்று மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்தும், நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும், பல்கலைக்கழகத்துக்குள் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களை நிலைநிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டவை என்பதை விரிவுரையாளர் இந்திக தென்னகோன் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.






















