இந்த மாணவிகளுக்கான அனுசரணையை, கடந்த 15 வருடங்களாகக் கனடாவில் இயங்கிவரும் கல்லூரியின் கனடா பழையமாணவர் சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்!

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்கள் மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டி கடந்த 15,16 ஆம் திகதிகளில் பாலிநகர் ம.வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மேற்படி போட்டியில் காங்கேசந்துறை யாழ் நடேஸ்வரக்கல்லூரி பெண்கள் அணியினர் வரலாற்றில் முதற்தடவையாக சம்பியனாகி தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவாகி பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை பாடசாலை சமூகம் சார்பாகவும், பழைய மாணவர் சங்கங்கள் சார்பாகவும் வாழ்த்துவதில் நாம் பெருமை அடைகின்றோம். 20 வயதிற்குட்பட்ட பெண்கள் மென்பந்துத் துடுப்பாட்ட அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த கல்லூரி அதிபர் திரு. பா. பாலகுமார், பயிற்றுவிப்பாளர் திரு இ.ஜீவராஜ் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு பா.பாலகிருஸ்ணன், ஆசிரியை திருமதி தர்சினி கிறிஸ்ரி நிறஞ்சன், ஆசிரியர் திரு. கு.தர்மபாலன், ஆசிரியர் திரு சி. ரவிசாந் ஆகியோருக்கும் எமது மனம் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
125 வது ஆண்டு நிறைவை இந்த வருடம் கொண்டாடிய காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரி போர்ச் சூழல் காரணமாக 1990 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து, தற்போது 2016 ஆம் ஆண்டு தொடக்கம் திரும்பவும் பழைய இடமாக கல்லூரி வீதியில் அமைந்திருக்கிறது. அதிபாதுகாப்பு வலயத்திற்குள் தற்போதும் இருப்பதால் அனேகமான மக்கள் இடம் பெயர்ந்திருப்பதால், மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. 1980 களில் 1500 மேற்பட்ட மாணவர்கள் நடேஸ்வராக் கல்லூரியில் கவ்விகற்றது நினைவு கூரத்தக்கது.
20 வயதிற்குட்பட்ட பெண்கள் மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டிக்கான அனுசரணையை, கடந்த 15 வருடங்களாகக் கனடாவில் இயங்கிவரும் கனடா பழையமாணவர் சங்கத்தினர் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
குரு அரவிந்தன்

















