”1983 ஜூலை 23 முதல் ஜூலை 30 ஆம் திகதி வரை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகின்றது ”கறுப்பு ஜூலைக் கலவரம்” என்ற தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக,தீராத வலியாக இன்றும் கனன்று கொண்டிருக்கின்றது. இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 43வருடங்கள் கடந்துவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழர் மனங்கள் வேதனையால் வெம்பி வெடிக்கின்றன” தமிழர்களை உயிரோடு எரித்துக் கொன்று சிங்களக் காடையர்கள் நடனமாடிக் கொண்டிருக்கின்றார்கள் கொழும்பிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன.தலைநகர் எங்கும் தீச் சுவாலைகளின் புகை மண்டலம். சிங்களக் கடைகளில் ”தமிழனின் கறி கிடைக்கும்” எனப் பலகையில் எழுதி வைத்து சிங்களக் காடையர்கள் எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் உயிர்களைப் பாதுகாக்க பாடசாலைகள், ஆலயங்களை நோக்கி தஞ்சம் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழர்கள் கொழும்பிலுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்ததோ, உயிருடன் இருக்கின்றார்களோ இல்லையோ எனத் தெரியாது கதறிக் கொண்டிருக்கின்றனர்.
—-கே.பாலா

இலங்கையின் வரலாற்றில் 1983 ஜூலை என்பது வெறும் நாட்காட்டியின் ஒரு பக்கம் அல்ல. அது ஒரு தேசத்தின் ஆன்மாவில் எழுதப்பட்ட ஆறாத வடு. கொழும்பு வீதிகளில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலை, வெறும் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் காவு வாங்கவில்லை. மாறாக, ‘இலங்கையர்’ என்ற பொது அடையாளத்தின் கீழ் தமிழர்கள் கொண்டிருந்த கடைசி நம்பிக்கையையும் சேர்த்து எரித்து சாம்பலாக்கியது.
43 வருடங்களுக்கு முன்னர் இதே நாள் இலங்கையின் தலைநகர் கொழும்பை தமிழர்களின் மரண ஓலங்கள்,உயிர்ப்பிச்சை கேட்கும் கதறல்கள்,தமது மானத்தை காப்பதற்கான தமிழ் பெண்களின் அலறல்கள் அதிர வைத்துக்கொண்டிருக்கின்றன.வாகனங்களில் சென்ற தமிழர்கள் வழிமறித்து உயிரோடு எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ,வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெடுத்து வெட்டித் துண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள், குழந்தைகள் கதறக் கதற தலைகீழாகத் தூக்கி நிலத்தில் அடித்துக் கொல்லப்படுகின்றார்கள். பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் சிங்களக் காடைக் கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு ,வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்களை உயிரோடு எரித்துக் கொன்று சிங்களக் காடையர்கள் நடனமாடிக் கொண்டிருக்கின்றார்கள் கொழும்பிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. தலைநகர் எங்கும் தீச் சுவாலைகளின் புகை மண்டலம். சிங்களக் கடைகளில் ”தமிழனின் கறி கிடைக்கும்” எனப் பலகையில் எழுதி வைத்து சிங்களக் காடையர்கள் எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் உயிர்களைப் பாதுகாக்க பாடசாலைகள், ஆலயங்களை நோக்கி தஞ்சம் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழர்கள் கொழும்பிலுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்ததோ, உயிருடன் இருக்கின்றார்களோ இல்லையோ எனத் தெரியாது கதறிக் கொண்டிருக்கின்றனர்.
தலைநகரமெங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும், தீயடங்காது எரியும் தமிழர்களின் வணிக நிலையங்களும் என கொழும்பு கோரமாய்க் காட்சியளித்துக்கொண்டிருந்த நிலையில் இன்னொரு குரூரமும் ஜூலை 25ஆம் திகதி நடந்தேறியது. கொழும்பின் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான ரெலோ இயக்கத் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், உட்பட 37 பேரை வெலிக்கடை சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் அளித்த ஆயுதங்களோடு அங்கிருந்த சிங்களகைதிகள் மிகக் கொடூரமாக படுகொலைசெய்தனர் .நான் மரணித்தால் எனது கண்களை ஒரு தமிழனுக்கு கொடுங்கள் அதன் மூலம் நான் தமிழீழத்தை பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிய குட்டிமணியின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன. அந்த நாளோடு மட்டும் அந்தக் கொடூரம் முடியவில்லை. மீண்டும் ஜூலை 28ஆம் திகதியும் வெலிக்கடை சிறையில் தமிழினப்படுகொலை நடத்தப்பட்டது . 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறாக வெலிக் கடை சிறையில் 55 தமிழ் கைதிகள் சிங்கள இனவெறிக்கு இரையானர்கள்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை ஜே .ஆர்.ஜெயவர்த்தன அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. 13 சிங்கள இராணுவத்தினரின் உயிர்களுக்காக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை, சிங்கள இனவெறியர்கள் கண்டந்துண்டமாக வெட்டி வீசினார்கள். குடும்பம்,குடும்பமாக தமிழர்களை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினார்கள். 500 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் ஈவிரக்கமின்றி இந்த வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வணிக வளாகங்கள், கடைகள், எரிபொருள் நிலையங்கள், திரையரங்குகள் என 5000 க்கும் மேற்பட்ட தமிழர்களின் வர்த்தக நிறுவனங்களை குறிவைத்து சூறையாடினார்கள். தீக்கிரையாக்கினார்கள் .தப்பிய தமிழர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என வடக்கிற்கு விரட்டப்பட்டார்கள்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவமே தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையை தோற்றுவித்ததாக கூறப்பட்டாலும் ஜே .ஆர்.ஜெயவர்த்தன அரசினால் இந்த இனப்படுகொலை திருநெல்வேலி தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. திருநெல்வேலித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலேயே அவர்கள் உடல்களை அடக்கம் செய்ய இராணுவத்தினர் விரும்பிய போதும், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனே அவர்களது உடலை கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் பார்வைக்கு வைத்து அடக்கம் செய்ய முடிவெடுத்தார். ஜெயவர்த்தனா அரசு இராணுவத்தினரின் மரணத்தை தமிழருக்கு எதிரான இனவெறி தூண்டும் நிகழ்வாக மாற்றியது.
எந்த இராணுவ வீரர்கள் மறைவிற்கும் கடைப்பிடிக்காத புதிய முறைகளில் இந்த இராணுவத்தினருக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. சவப்பெட்டியில் எடுத்து வராமல் வேண்டுமென்றே சூழ்ச்சியுடன் பொலித்தீன் பைகளில் இராணுவத்தினரின் உடல்களை கட்டிக் கொண்டு வந்தார்கள். இருட்டும் வரை இறுதி ஊர்வலத்தை தாமதப்படுத்தி சிங்களவர்களிடம் கொதிப்புணர்வை தூண்டச் செய்தார்கள். இந்த தாமதம் பெரும்பாலான சிங்களவர்களை கொழும்பை நோக்கி வரச் செய்வதற்கு போதுமான காலமாக இருந்தது. அரச பயங்கரவாதிகளின் குரூரப் புத்தியால் தூண்டப்பட்ட சிங்கள வெறியர்களால் அப்பாவித் தமிழர்களின் இரத்தம் கொழும்பு வீதியெங்கும் அன்று ஆறாக ஓடியது.
இவ்வாறாக இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மலையகத்தின் சில பகுதிகளிலும் 1983 ஜூலையில் நடந்த கொடூரங்கள் வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். தமிழர் என்ற அடையாளமே சிங்கள வெறியர்களுக்கு வெறியேற்றிய நாள். சிங்களம் -தமிழ் என்ற இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்டுவிட்ட முடிவு. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு சிங்களப் பேரினவாத அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டு.தற்போது 43 வருடங்கள்.நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்யு, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி என, அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பை பல வகைகளில் நியாயப்படுத்தினர் அதற்காக வருத்தப்படவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் தரவோ முயலக்கூட இல்லை. இந்த தமிழினப்படு கொலையின் பின்னர் ஜே .ஆர்.ஜெயவர்த்தன பிரிட்டன் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் சிங்களத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தியது.
அந்த நேர்காணலில் ”இப்போது யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை. தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்” என ஜே .ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி இந்த தமிழினப்படுகொலையை வெளிநாடுகள் சில கண்டித்தபோது “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். அத்துடன் “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற சூளுரையும் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, வன்முறைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரும் படையினரும் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என டைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை, அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது வினவியது.‘படையினரிடம் பெரிய அளவில் தமிழர்களுக்கு எதிரான உணர்வு ஏற்பட்டிருந்தது என நான் நினைக்கிறேன். கலகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால், அது சிங்களவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் போய்விடும் என்று படையினர் உணர்ந்திருந்தார்கள். உண்மையிலேயே சில இடங்களில் அவர்கள் கலகக்காரர் களை ஊக்குவித்திருந்ததை நாங்கள் கண்டோம்’ என ஜெயவர்த்தன பதிலளித்திருந்தார்.
1983 ஜூலை 23 முதல் ஜூலை 30 ஆம் திகதி வரை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகின்றது ”கறுப்பு ஜூலைக் கலவரம்” எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக,தீராத வலியாக இன்றும் கனன்று கொண்டிருக்கின்றது. இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 43வருடங்கள் கடந்துவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழர் மனங்கள் வேதனையால் வெம்பி வெடிக்கின்றன.
இந்த 1983 ஜூலைக்கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல் – சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழக்க காரணமாக அமைந்தது.. இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்ற நிலைமையை ஜூலைக் கலவரமே ஏற்படுத்தியது. காலச்சக்கரம் 43 ஆண்டுகளைக் கடந்து ஓடிவிட்டாலும், 1983 ஜூலையில் கொழும்பு வீதிகளில் ஓடிய தமிழர்களின் இரத்தம் இன்னும் காயாமல் அப்படியேதான் இருக்கின்றது . அன்று கொழும்பில் பற்றி எரிந்த தீயின் புகை, இன்றும் இலங்கையின் ஆட்சி பீடத்தின் மீதும், அரசியல் நகர்வுகளின் மீதும் படிந்தே காணப்படுகிறது. ஆட்சியாளர்கள் மாறினாலும் தமிழர்கள் மீதான அவர்களின் அணுகுமுறையும், தமிழர்களுக்கு அவர்கள் மீதிருக்கும் அவநம்பிக்கையும் மாறாமல் தொடர்வதற்குக் காரணம், அன்று விதைக்கப்பட்ட இனவாத நச்சு விதைதான்.
சமத்துவமும், நீதியும், கடந்த காலத் தவறுகளுக்கான உண்மையான பிராயச்சித்தமும் இல்லாதவரை, இரு தேசிய இனங்களுக்கு இடையே உண்மையான நல்லிணக்கம் என்பது வெறும் காகிதக் கனவாகவே இருக்கும்.துப்பாக்கிக் குண்டுகளை விடவும், திட்டமிட்ட ஒடுக்குமுறைகளும், சக மனிதனின் மீதான நம்பிக்கையிழப்புமே ஒரு தேசத்தை நிரந்தரமாகப் பிளவுபடுத்துகின்றன . அந்தப் பிளவின் நிழலில்தான் இலங்கைத் தீவின் இன்றைய ஆட்சியும், அதன் எதிர்காலமும் நகர்ந்து கொண்டிருக்கின்றன

















