பா.ரஞ்சித் கூட்டணியில் மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் ‘பீட்சா 2’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். காலா, ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. ‘குட் நைட்’ படத்திற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் ‘கோட்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட விஜயகாந்திற்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இவர் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் வெளியாகி வெற்றிப்படமானது. இவர் நடிக்கும் அல்லது வசனம் எழுதும் அனைத்து படங்களும் மக்களிடம் பெரிதும் கவனம் பெற்றவையாகத்தான் இருக்கின்றன. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் எளிய மக்களின் யதார்த்த வாழ்வினை, வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் படமாகத் தான் இருக்கின்றன. எனவே தான், இவரது படங்கள் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளன. அதனாலேயே, இவரது படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம்கொண்ட மணிகண்டன் ‘விக்ரம் வேதா’ படத்தில் வசனம் எழுதி கவனம் ஈர்த்தார்.‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தினையும் இயக்கியுள்ளார். ‘குடும்பஸ்தன்’ வெற்றிக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பார் என்ற தேடுதல் நீண்ட நாள்களாக சென்றுகொண்டிருந்தன. இந்த நிலையில், நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘மக்கள் காவலன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தினை ப.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் மணிகண்டன் காவலதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
















