கனடாவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது-இலங்கை ‘ என்னும் உயர் கௌரவத்தைப் பெறுவதற்காக கனடா வந்திருந்த இலங்கை வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களை கனடிய பாராளுமன்றத்திற்கு அழைத்து வரும் வண்ணம் விடுக்கப்பெற்ற அழைப்பின் பேரில் உதயன் பிரதம ஆசிரியர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
அதன்பிரகாரம் ரொறன்ரோவிலிருந்து ‘உதயன்’ நண்பர்கள் சிலர் இணைந்து 18ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்திற்கு மேற்படி குழுவினர் சென்றிருந்தனர்.
அங்கு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் ஒட்டாவா அலுவலக உத்தியோகத்தர்கள் சிலரால் வரவேற்கப்பெற்ற உதயன் குழுவினர் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் மக்கள் சபை மற்றும் பல இட்ங்களையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து கனடியப் பாராளுமன்றம் பிற்பகல் கூடியபோது ”அங்கத்தவர்களின் கேள்வி நேரத்தின்’ போதும் சபையில் அமர்ந்திருந்து நிகழ்வுகளையும் உரையாடல்களையும் கண்டு களித்தனர்.
தொடர்ந்து கனடா உதயன் குழுவினரை சந்தித்து உரையாடிய ஸ்காபுறோ வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் Shaun Chen மற்றும் மிசிசாகா -லேக்சோர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Charles Sousa ஆகியோரையும் சந்தித்து உரையாடி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


























