கனடிய ரசிகர்கள் பார்த்து ரசித்த மற்றுமொரு ‘ எங்கட படம்’ ‘இதுவாகும்’
அண்மைக்காலத்தில் எமது தாயகத்திலிருந்தும் எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல வெளிநாடுகளிலிருந்தும் நம்மவர்கள் தயாரிப்பில் திரைகளுக்கு வந்த பல திரைப்படங்களில் சில மாத்திரமே ‘எங்கட படம்’ என்று பாராட்டக்கூடியவையாக அமைந்திருந்தன. இவ்வாறு ;எங்கட படம்’ என்று பாராட்டுவதற்குரிய அளவுகோள்கள் பல உண்டு. இந்த அளவுகோள்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்ற தீவிர அல்லது ஆழமான ரசிகர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப “இது தான் எங்கட படம்’ என்று தங்கள் பாராட்டும் விமர்சனத்தை வழங்குவார்கள்.
எம்மில் பலர் எதிர்பார்க்கின்ற கதைக் களம், உரையாடல் மொழி- படமாக்கப்பெற்ற இடங்கள்- ஏற்கெனவே திரைகளில் பார்த்து பாராட்டுப்பெற்ற நடிக நடிகையர்கள்- இடம்பெறும் பாடல்களில் உள்ள மண்வாசனை மற்றும் பண்பாட்டுக் கோலங்கள் ஆகியனவே ‘எங்கட படம்’ என்று நாம் பாராட்டுவதற்கான அளவுகோள்களாக விளங்குகையில் நாம் கடந்த 6ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கம் நகரில் உள்ள யோர்க் சினிமா திரையரங்கில் பார்த்து மகிழ்ந்த ‘LATIKA Production ஆதரவிலும் பி. எஸ். சுதாகரனின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் திரையிடப்பெற்ற ‘மௌனித்த பொழுது’ ‘எங்கட படம்’ என்ற பாராட்டைப் பெறுவது ஏற்புடையதாகவே விளங்குகின்றது.
அன்று இடம்பெற்ற விசேட காட்சிக்கு அழைக்கப்பெற்றவர்கள் பெருமளிவில் வந்திருந்தாலும் அன்று திரைப்படத்தைப் பார்த்துச் சென்றவர்களின் விமர்சனங்கள் இனிவரும் காட்சிகளுக்கு எம் ரசிகர்களை இழுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு இந்த விமர்சனத்தை இங்கு பதிவு செய்கின்றோம்.
‘ஒருத்தி’ திரைப்படத்தை எமக்காக உருவாக்கிய பி. எஸ். சுதாகரன் மீண்டும் தனது சாத்தியமான துணிச்சலுடன் தொடர்ச்சியாக எம்மவர்களை மாத்திரம் நம்பிய வண்ணம் திரைப்படங்கள் தந்து கொண்டிருப்பது எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் அவரது திரைப்படத்தை காத்திருந்து பார்க்கும் ரசிகர் குழாம் களும் அதன் மூலம் இங்கு ஒரு பலமும் நம்பிக்கையும் வாய்ந்த ‘புலம் பெயர் தமிழ்த் திரைப் படத்துறை’ ஒன்று; உருவாகும் என்ற நம்பிக்கையையும் எமக்கு ஏற்படுத்தியுள்ளது.
‘மௌனித்த பொழுது’ திரைப்படத்தின் ஆரம்பமே ஒரு திரைக் கொண்டாட்டமாக விளங்கியது என்றால் அது மிகையாகாது. யாழ்ப்பாணம் காரைநகரில் உள்ள தமது குடும்பம் சார்ந்த ஒரு ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திற்கு தனது சார்பாக கனடாவிலிருந்து தனது சகோதரனை அனுப்பிவிடத் தீர்மானிக்கும் மூத்த சகோதரரின் குடும்ப உரையாடல்க் காட்சி கண்களுக்கு குளிர்மையாகவும் நேர்த்தியாகவும் எமக்கு முன்னால் தோன்றியது. அடுத்ததாக எம்மை எமது தாயக மண்ணுக்கு அதுவும் கரையோரக் கிரமமான காரைநகருக்கு அழைத்துச் செல்கின்றார் பி. எஸ். சுதாகரன்
குறிப்பாகச் சொல்வதானால் அடுத்து வந்த காட்சிகளில்தான் திரைப்படமே ஆரம்பமாகின்றது என்றாலும் முதலாவது கனடியக் காட்சியில் நடித்திருந்த நடிக நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். கதாநாயகன் ஜே மற்றும் விஜிதா ஆகியோரும் கதாநாயகனின் அண்ணனாக நடித்தவரும் இயல்பாக நடித்தார்கள். அவர்களை பி. எஸ். சுதாகரன் நன்றாக இயக்கியுள்ளார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
காரைநகரில் காட்சிகள் ஆரம்பமாகி ஒரு கலியாணப் பதிவில் நிறைவு பெறுகின்றது. பின்னர் கனடா திரும்புகின்றார் கதாநாயகன் ஜே. கதாநாயகி ஹர்சியை பதிவுத் திருமணம் செய்தவராக.
காரைகர் காட்சிகளில் பல இடங்களை மிகவும் அழகுறக் காட்டுகின்றார் இயக்குனர். குறிப்பாக கசூரினா உல்லாசக் கடற்கரை மற்றும் ஆலயங்கள், இயற்கைக் காட்சிகள். நெல்வயல்களின் பசுமை. எமது மக்களின் கடுமையான உழைப்பு ஆகியவை எமக்கு ஞாபகமூட்டும் வகையில் திரையில் தோன்றின.
அடுத்து முக்கியமாக நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ‘நடிப்புப் பெருந்தகை’ AMRR மகேந்திரசிங்கம் அவர்கள் ஆலயத்தின் பூசகராகவும் ஒவ்வொரு வசனத்திற்கு இடையில் திருவள்ளுவப் பெருந்தகையில் குறள் வரிகளை அழகுற உச்சரித்து மகிழ்ந்து நடிப்பவராகவும் ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். இடையில் கதாநாகனோடு உதவி செய்யும் ஒருவராக நடித்த அவரது தாயக நண்பரின் நடிப்பாற்றல் மற்றும் உச்சரிப்பு ஆகியவை நேர்த்தியாக விளங்கி திரைப்படத்தின் நகர்வில் நம்பிக்கையை தந்தவர்களாக அங்கு தோன்றிய நடிக நடிகையர்கள் விளங்கினார்கள் என்றால் அது மிகையாகாது.
தாயக நடிகர் AMRR மகேந்திரசிங்கம் அவர்கள் ஏற்கெனவே தாயகத்தில் தயாரிக்கப்பெற்ற பல திரைப்படங்களில் நடித்தவர். கலையை மதிப்பவர். நல்ல கலைப் படங்களில் தோன்றிய கலைத்துவமாகத் தோன்றும் வல்லமையையும் விருப்பும் கொண்டவர். அவரது இயல்பானதும் அனுவத்தை வெளிக்காட்டும் நடிப்பும் ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தை சற்று தரம் உயர்த்திக் காட்டும் வல்லமை மிக்கவை என்றால் அதுவும் நியாயமானதே.
‘மெளனித்த பொழுது’ மீண்டும் கனடிய மண்ணில் ‘விடிகின்றது. அங்கு துணையைத் தேடி நிச்சயதார்த்தம் செய்தவராக அழகிய இந்த தேசத்திற்கு வந்தவருக்கு எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறுகின்றது. அதனால் கதாநாயகன் துசியின் வாழ்க்கையும் வழி மாறிச் செல்லுகின்றது.
தாயகக் காட்சிகளில் இல்லாத வன்முறைக் காட்சிகள் தொடர்கின்றன. இவை யதார்த்தமானவையாக தோன்றினாலும் எத்தனை ரசிகர்களின் இதயங்களை நொருக்கியிருக்கும் என்றும் குறிப்பிடலாம்.
தொடர்ந்து எமது பார்வையில் கதையை தொடர்வதிலும் பார்க்க திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் கவனித்து காட்சிப் படுத்தப்பெற்ற விடயங்கள். கவனிக்கப்படாமல் போன அம்சங்கள் ஆகியன எமது பார்வைக்கு தெரிகின்றன.
திரைப்படத்தின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை முக்கிய பாத்திரங்களில் நடிக நடிகையர்கள் தங்கள் நடிப்பை அர்ப்பணித்துள்ளார்கள் என்றே கூறவேண்டும். இனிமையான பாடல்கள் காதுகளை எட்டிய இசை மற்றும் வரிகள் ஆகியவற்றை கொண்டவையாக விளங்கியமை பாராட்டுக்குரியது.
கனடியச் சூழலில் எம்மவர்கள் மத்தியில் காணப்படும் தவறான செயற்பாடுகள், மிக விரைவாக பணம் சம்பாதித்துக் கொள்ள பின்பற்றும் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் ஆகியவை தொடர்பாகவும் காட்சிகளை நகர்த்தி இறுதியில் நிறையவே கனவுகளோடு சில திறமைகள் கொண்டவராக கனடாவில் கால்பதித்த கதாநாயகி தனது கணவர் வழி மாறிச் சென்றதனால் ரசிகர் முற்றிலும் எதிர்பாராதவகையில் சில துர்ப்பாக்கியமான காட்சிகளோடு ‘மௌனித்த பொழுது’ நிறைவுக்கு வந்து ரசிகர்கள் இதயங்கள் இருண்டு போக திரையரங்கில் வெளிச்ச விளக்குகள் தோன்றி நாம் பார்த்தது ஒரு திரைப்படமே என்பதை ஞாபகப் படுத்தின.
இயக்குனர் பி. எஸ் சுதாகரன் தன்னிடமிருந்த மிகக் குறைந்த வளங்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அனுபவமும் ஆளுமையும் கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் துணையோடு ஒரு ‘எங்கட படத்தை’ எமக்களித்துள்ளார். அவரிடமிருந்து வரவுள்ள அடுத்த திரைப்படத்தை குறைந்தளவாவது கலைப்படங்களுக்குரிய அம்சங்களோடு எதிர்பார்க்கின்றோம் என்ற வரிகளோடு தற்காலிகமாக விடைபெறுகின்றோம்.
இயக்குனர் பி. எஸ் சுதாகரனைப் பாராட்டவும் வாழ்த்தவும் அடுத்துவரும் காட்சிகள் தொடர்பான விபரங்களுக்கும் 416 720 9303 என்னும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம்.
































