ஐரோப்பிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷியா அதிபர் புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் சப்ளை செய்தும் உதவி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது ரஷியாவை உடனடியாக போரை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக 50 நாள் கெடு விதித்துள்ளார்.
இதனிடையே ரஷியாவின் அதிகாரப்பூர்வ அரசு தலைமையிடமான கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்திந்தார். அப்போது அவர் உக்ரைனுடன் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார். அவர் கூறுகையில், “உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை தவிர்க்க வேண்டும். எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பை துண்டித்து ராணுவத்தை குறைத்தால் நாங்கள் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்” என்று தெரிவித்தார்.
























